காதி நீதிமன்றங்களை தவறாக எடைபோடுகிறார்கள், இரவு 12 மணிக்கும் Call எடுக்கிறார்கள்
சிலர் காதி நீதிமன்றங்களை தவறாக எடைபோட்டுக் கொண்டிருக்கிறார்கள். எமக்குத் தேவையானவற்றை காதி நீதி மன்றங்கள் மூலம் எந்த நேரத்திலும் நொடிப் பொழுதில் சாதித்துக் கொள்ளலாம் என்று சிலர் எண்ணுகின்றார்கள். ஆனால் இது முற்றிலும் தவறானதாகும். ஏனைய நீதிமன்றங்களைப் போன்று காதி நீதிமன்றமும் ஒரு நீதிமன்றம் என்பதை முஸ்லிம்கள் கவத்திற்கொள்ள வேண்டுமென்று குருநாகல் காதி நீதிமன்றத்தின் காதி நீதிபதி பீ. எம். பாரூக் தெரிவித்தார்.
காதி நீதிமன்றங்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள் தொடர்பாக பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் கூட்டம் குருநாகல் பொத்துஹெரவில் காதி நீதிமன்ற அலுவலகத்தில் இடம் பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,
காதி நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கத்திற்கு முரணில்லாத வகையில் சட்டத்தைப் பேணி தீர்ப்புக்கூறக் கடமைப் பட்டுள்ளார்கள். அதற்கென நடைமுறை உள்ளது. சிலர் இரவு 12 மணிக்கும் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தம்மைச் சார்ந்து அந்நிய பெண் ஒருவரை அல்லது தாம் காதலித்த ஒருவரைத் திருமணம் செய்ய காதி நீதிபதியிடம் வொலி தேவை என்று அடம்பிடிக்கிறார்கள். ஆனால் அவர்கள் நினைத்தவாறு அது உனடியாகச் செய்யக்கூடிய காரியமல்ல. வொலி தேவைப்படும் மணவாளி காதி நீதிமன்றமொன்றில் முதலில் முறைப்பாடு செய்து அது தீர விசாரிக்கப்பட்டு தீர்ப்புக் கூறியபின் பத்து நாட்கள் கழிந்த பின்பே வொலிஅனுமதி கொடுக்கலாம். இந்த நியதியை எவராலும் மீறமுடியாது.
அதே போன்று, இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்ய விரும்புவோருக்கும் ஒழுங்குமுறைகள் உண்டு. அவ்வாறு செய்ய விரும்பும் ஒருவர் தமது முதல் மனைவி வசிக்கும் பகுதி காதி நீதிமன்றில் முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும். அவ்விண்ணப்பம் காதி நீதிபதியினால் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளக் கூடியதாயின் அவ்விண்ணப்பம் அவரால் முதல் மனைவிக்கும் தானும் தனது முதல் மனைவி மற்றும் புதிதாக திருமணம் செய்ய விரும்பும் மணவாளி ஆகியோர் வாழும் பகுதி பள்ளிவாசல்களுக்கும் அனுப்பப்பட்டு 30 நாட்கள் கழித்த பின்னர்தான் அவர் இரண்டாவது அல்லது அதற்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வதற்கு அனுமதி கொடுக்கப்படும்.
இவ்வாறின்றி தான் ஓர் ஆண் மகன் தானே, தனக்கு நான்கு திருமணங்கள் புரியலாம் என்ற இறுமாப்புடன் நினைத்த பொழுதெல்லாம் அவ்வாறு செய்ய முடியாது. இதனை பள்ளி வாசல்களின் நிர்வாகத்தினர்களும், ஜமாத்தினரும் கவனத்திற் கொள்ள வேண்டும்.
சில முஸ்லிம் பதிவாளர்கள் இதற்கு மாறாகச் செயற்பட்டு திடீர் திருமணங்கள் செய்து வைக்கிறார்கள். இது ஹராமாகும். இவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் முஸ்லிம்கள் ஏனைய நீதி மன்றங்களுக்கு கௌரவம் கொடுத்து அமைதியாகவும், மரியாதையாகவும் நடந்து கொள்ளப்பழகிக் கொள்ள வேண்டும்.
எடுத்தவற்றுக் கெல்லாம் காதி நீதிமன்றம் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோன்று ஒரு காதி நீதிபதியின் தீர்ப்பைத் தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் அதுபற்றி விமர்சிப்பதைத் தவிர்த்து தகுந்த காரணங்களுடன் காதிகள் மேல் முறையீடு மன்றில் பொதுமக்கள் மேன்முறையீடு செய்யலாம் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்றார்.
வழக்குகள் சம்பந்தமாக காதி நீதிபதிகளை தனிப்பட்ட முறையில் சந்திப்பதோ, தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வதோ, நன்கொடைகள் வழங்குவதற்கு முற்படுவதோ தண்டனைக்குரிய குற்றங்களாகும். இவ்விடயங்கள் பற்றி குருநாகல் நீதிப்பிரிவு பள்ளிவாசல்களுக்கு அறிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
-Vidivelli
Post a Comment