நான், இர்பான் ஹாபீஸ் பேசுகிறேன் - பகுதி 1
தமிழில்: அதீக் சம்சுதீன்
என்னைப் பற்றி.....
என்னால் தரம் 5 வரை மாத்திரமே கல்வி கற்க முடிந்தது. எனது 12 ஆவது வயதில் நான் சக்கர நாற்காலி ஒன்றில் முடங்கினேன், 18 வயதிலிருந்து எனது வாழ்வு படுக்கையிலேயே கழிந்தது.
எனது சிறுபராயம் மற்றும் பாடசாலை வாழ்க்கை......
எனது பெயர் இர்பான், நான் 1981 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி இலங்கையின் மாத்தறை பிரதேசத்தில் பிறந்தேன். 'டுசென்னே மஸ்குலர் டிஸ்த்ரோபி' (DMD) என்ற இன்றுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத அரிய வகை நோயால் நான் அவதிப்படுகின்றேன்.
எனது தந்தை ஓர் ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர். அவர் நிருவாக சேவை அதிகாரியாக இருந்தார். வீட்டு மனையாளான எனது தாய் என்னைப் பராமரித்துக் கொண்டிருக்கிறார். பிறந்ததிலிருந்து நானும் ஏனைய சிறுவர்களைப் போன்று சாதாரணமானவனாகவே இருந்தேன். என்னால் நடக்கமுடிந்த போதிலும் ஏனைய சாதாரண சிறுவர்களைப் போல் ஓடவோ பாயவோ முடியவில்லை. எனினும் என்னால் துவிச்சக்கர வண்டி ஓட முடிந்தது. அடிக்கடி நான் கீழே விழுவேன். மாடிப்படிகளில் ஏறுவதற்கு எனக்கு சிரமமாக இருந்தது. அவ்வாறு படிகளில் ஏறும்போது நான் எனது முழங்கால்களைத் தடவியபடி படிகளின் ஓரக் கைபிடிகளில் சாய்ந்தவாறே என்னால் ஏற முடிந்தது. இதை அவதானித்த எனது தந்தை எவ்வாறு படிகளில் ஏறுவது என்பதை எனக்கு கற்பிக்க பல தடவைகள் முயற்சி செய்தார். அதுமட்டுமன்றி எனது நடையும் சிறிது விநோதமானதாகவே இருந்தது. எனது தந்தை கல்விகற்ற பாடசாலையிலேயே நானும் அனுமதிக்கப்பட்டேன். எனினு தரம் 3 வரை என்னால் சுயமாக நிற்க முடியவில்லை. பின்னர் நடப்பதற்கும் சிரமப்பட்டேன். எனவே, எனது மூத்த சகோதரர் தனது துவிச்சக்கர வண்டியில் என்னைப் பாடசாலைக்கு ஏற்றிச் செல்வார்.
எனது சகோதரர்களைப் போல் கல்வியில் என்னால் பிரகாசிக்க முடியாதபோதும் என்னால் முடிந்தவரை நன்றாகக் கல்வி கற்று வந்தேன். கணித பாடம் எனக்கு சிரமமானதாக இருந்தது. வகுப்பறைப் பயிற்சிகளை சிறப்பாகச் செய்ய முடிந்தபோதும் பரீட்சைகளில் என்னால் பிரகாசிக்க முடியவில்லை. எனது வகுப்பாசிரியை என் மீது மேலதிக கவனம் கொண்டிருந்தார். எனது பயிற்சிகளில் பிழை திருத்தங்களை மேற்கொள்ள எனது மேசைக்கு அடிக்கடி வருபவராக அவர் இருந்தார். உதவி தேவைப்படும் நேரங்களில் எல்லாம் எனக்கு உதவக்கூடியவர்களாக எனது வகுப்பறைத் தோழர்கள் இருந்தனர். விழுந்து விடுவேன் என்ற பயத்தினால் முழுப் பாடசாலை நேரத்தையும் வகுப்பறையிலேயே கழித்தேன். ஒருநாள் காலைக்கூட்டம் இடம்பெற்ற வேளை நான் விழுந்துவிட்டேன். அதனைத் தொடர்ந்து காலைக்கூட்ட நேரத்தில் வகுப்பறையில் இருக்க வகுப்பாசிரியை எனக்கு விசேட அனுமதி வழங்கினார். அன்றிலிருந்து நான் வகுப்பறையை விட்டு ஒருபோதும் வெளியேறியதில்லை.
நான் தரம் ஒன்றில் கல்வி கற்கும்போது சிறுவர் ஓட்டத்தில் நான் கலந்துகொள்ள வேண்டியதாயிற்று. எனக்கு ஓடுவது மிகவும் சிரமமாக இருந்ததுடன் என்னால் போட்டியை கடைசியாகவே நிறைவு செய்ய முடிந்தது. இதனை அவதானித்த வகுப்பாசிரியர் போட்டியில் ஓட நான் எவ்வாறு சிரமப்பட்டேன் என்பதை எனது தந்தையின் கவனத்துக்கு கொண்டுவந்தார். தளர்ந்த நடை, படிகளில் ஏறுவதற்கு சிரமப்படல் மற்றும் அடிக்கடி கீழே விழுதல் போன்ற வித்தியாசமான பண்புகளை என்னில் அவதானித்த என் பெற்றோர் என்னை ஒரு வைத்தியரிடம் காண்பிக்க முடிவு செய்தனர்.
நோயை அடையாளம் காணுதல்.....
மாத்தறையிலுள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு என்னை அழைத்துச் செல்லுமாறு தந்தையிடம் எனது தாய் கூறினார். அதைத் தொடர்ந்து மருத்துவ முறைசார் சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு பெண் வைத்தியர் எனக்கு Duchenne Muscular Dystrophy (DMD) வியாதி இருக்கக்கூடும் எனக்கூறி மீள் மருத்துவ ஆலோசனை பெறும்படி எனது தாய்க்கு அறிவுரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து மேலதிக மருத்துவ பரிசோதனைக்காக நான் கொழும்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு அழைத்து வரப்பட்டேன். இறுதியாக needle biopsy என்ற சோதனை மூலம் ஏழு வயதான எனக்கு DMD வியாதி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த வியாதி எனக்கு இருப்பது அறியப்பட்டதுடன், குறித்த வியாதிக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்பதும் நான் 18 வயது வரை மட்டுமே உயிர்வாழக் கூடுமென்ற விடயங்கள் வைத்தியர்களால் எனது தந்தைக்கு அறிவிக்கப்பட்டது. இந்த விடயங்கள் எனது தந்தைக்கு மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுத்ததுடன் உண்மையாக அவர் தனது மகனின் இந்த கொடுமையான வியாதி பற்றி அறிந்ததும் மனமுடைந்து போனார். எனது தந்தை இந்த விடயத்தில் எவ்வளவு அதிர்ச்சியடைந்திருந்தார் என்பது அண்மையில் எனது தந்தை வழிப்பாட்டி இதுபற்றிக் கூறியதன் பின்னர்தான் என்னால் அறிய முடிந்தது. எனினும் அவர் தனது உணர்வுகளை என் முன்னால் ஒருபோதும் வெளிக்காட்டியது கிடையாது. இது மிகவும் உன்னதமான விடயம். நான் இது தொடர்பில் மனதளவில் பாதிக்கப்படக்கூடாது என்பதை அவர் தெரிந்திருந்தார்.
ஒரு வாரத்துக்கு மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த எனக்கு ஒரு சில விட்டமின் மாத்திரைகளைத் தவிர வேறெதுவும் வழங்கப்படவில்லை. எனது வாழ்வில் இவ்வளவு விடயங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை உண்மையைக் கூறுவதானால் என்ன நடக்கின்றது என்று எனக்குப் புரிந்திருக்கவில்லை. நான் என்ன நோயால் பீடிக்கப் பட்டிருக்கிறேன், அது எவ்வகையான வியாதி போன்ற விடயங்களை நான் அறிந்திருக்கவில்லை. நான் வைத்தியசாலையிலிருந்த காலத்தை சந்தோசமாகவே அனுபவித்திருந்தேன். அங்கு ஏற்ற இறக்க விளையாட்டு உபகரணம் மற்றும் ஊஞ்சல் என்பன காணப்பட்டன. அங்கு சிறுவர்கள் விளையாட ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த இடத்தில் நான் துவிச்சக்கர வண்டி ஓட்டினேன். அந்த நோயாளர் விடுதியின் சுவரில் பொருத்தப்பட்டிருந்த தொலைக்காட்சியில் நான் கார்ட்டூன் நிகழ்ச்சிகளை ரசித்தேன். நோயாளர்களுடன் தங்கியிருப்போர் தூங்குவதற்கு பொருத்தமான வசதிகளற்ற அந்த இடத்தில் என்னுடன் தங்கியிருந்த எனது தாயார் மிகவும் சிரமப்பட்டார். கொழும்பிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் இருந்த எனது சொந்த ஊரான தர்கா நகரிலிருந்து என்னைப் பார்க்க எனது தந்தை தனது மோட்டார் சைக்கிளில் தினமும் வருவார். கொழும்பில் வசிக்கும் எனது சிறிய தந்தை அடிக்கடி என்னைப் பார்க்க வருவார். வைத்தியசாலையில் இருந்து வெளியேறியதன் பின்னர் நீண்ட நாட்கள் மேலதிக மருத்துவ சோதனைகளுக்காக கொழும்பில் தங்கியிருக்க வேண்டி ஏற்பட்டது. எனவே, நான் எனது சிறிய தந்தையின் வீட்டில் தங்கியிருந்தேன். சிறிய தந்தை என்னை மிகவும் அதிகமாக உபசரித்தார், விசேடமாக எனது சிறிய தாயார் தனது மிகவும் சிறிய குழந்தைகளை பராமரிக்க வேண்டிய தேவை உள்ளவராக இருப்பினும் என்னை மிகவும் உபசரித்தார். அவர்கள் காட்டிய அன்புக்கும் கவனிப்புக்கும் நான் மிகவும் நன்றி உடையவனாவேன்.
DMD வியாதியுடன் எனது வாழ்வும் பெற்றோர் அடைந்த துன்பமும்....
DMD வியாதிக்கு எந்த சிகிச்சையும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதன் பின்னர் எனதும் தாயும் தந்தையும் மிகவும் துன்பமான காலப்பகுதியைக் கடந்து கொண்டிருந்தனர். எமது உறவினர்களும் அயலவர்களும் வேறுபட்ட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தனர். எனவே, நான் உள்நாட்டு மருத்துவர்கள், மதத் தலைவர்கள் ஏன் ஒரு மந்திரவாதியிடம் கூட அழைத்துச் செல்லப்பட்டேன். எதிலும் எந்தப் பயனும் கிட்டவில்லை. ஓர் உள்ளூர் மருத்துவரிடம் தொடர் சிகிச்சை பெற்றதனால் பல மாதங்கள் என்னால் பாடசாலைக்குச் செல்ல முடியவில்லை.
நான் தரம் ஐந்தில் கல்வி கற்கும்போது ஆகஸ்ட் மாத விடுமுறையின் பின்னர் மீண்டும் பாடசாலைக்குச் செல்லும் வேளை துவிச்சக்கர வண்டியின் முன்னால் அமர்ந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக இருந்தது. எனவே, எனது சகோதரர் திரும்ப என்னை வீட்டில் கொண்டு வந்துவிட்டு விட்டு பாடசாலைக்குச் சென்றார். அது நான் இறுதியாகப் பாடசாலைக்கு செல்ல வேண்டிய நாள். எனினும் என்னால் பாடசாலையை அடைய முடியவில்லை. எனது வகுப்பில் கற்பிக்கப்படும் பாடங்களை எனக்கு வீட்டில் கற்பிக்க எனது மூத்த சகோதரர் தன்னால் இயன்ற அளவு முயற்சித்தார். எனினும், அனைத்து பாடங்களையும் கற்க எனக்கு விருப்பம் ஏற்படவில்லை. இறுதியாக ஆங்கிலம் மற்றும் கணினி ஆகியவற்றில் மாத்திரம் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். சிறு வயதிலிருந்து நான் மின் ஓகன் இசைக்கருவியை இசைப்பேன். அதை எவ்வாறு இசைப்பது என்பதை எனது தந்தை எனக்கு கற்றுக் கொடுத்திருந்தார். தற்பொழுது என்னால் அதில் அதிக பாடல்களை இசைக்க முடியும். தமிழிலும் ஆங்கிலத்திலும் அதிகமான புத்தகங்களை வாசித்தேன். ஆங்கில மொழிப் புலமையை வாசிப்பின் மூலம் என்னால் மேம்படுத்த முடிந்தது. இதனிடையே எனது தந்தையின் அச்சகத்தில் அதிக நேரம் செலவளித்த நான் அச்சிடுதல் தொடர்பில் அதிக விடயங்களைக் கற்றுக்கொண்டேன். அச்சுக் கோர்த்தல் வேலைகூட என்னால் செய்ய முடிந்ததுடன் அது மிகவும் சுவாரஷ்யமானதாக இருந்தது. ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் விரிவுரையாளராகக் கடமையாற்றிய எனது தந்தை அங்கு செல்லவேண்டிய தேவையிருந்ததால் அச்சகத்தின் முகாமையாளராக என்னை நியமித்தார்.
நாற்காலியில் முடக்கப்படல்....
12 ஆவது வயதில் நாற்காலியில் முடக்கப்பட்ட எனது வாழ்வு அலுப்புமிக்கதாக மாறியதோடு எனது மனதில் ஒருவகை ஏமாற்றம் படர்ந்தது. எனது நகர்வுகள் மட்டுப்படுத்தப்பட்டதோடு நான் செய்ய விரும்பிய அனைத்து விடயங்களும் சாத்தியமற்றனவாக மாறியது. இது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. எனினும் என் மனதில் உருவான உள்ளக ஏமாற்றம் நடத்தைகளில் பிரதிபலிப்பதை என்னால் உணர முடியாமல் போய்விட்டது. சிறிய விடயங்களுக்கு எல்லாம் சத்தமிட ஆரம்பித்தேன். எனது தாயாரை உதவிக்கு அழைப்பதற்கு கூடக் கூக்குரலிட்டேன். சிறிய விடயங்களுக்கு கூட எனது சகோதரர்களிடம் கோபத்தை வெளிக்காட்டினேன். மிகவும் பிடிவாதமுள்ளவனாக மாறினேன். எனது தந்தைவழிப் பாட்டி இவ்வாறு கோபமடைவதையும் பிடிவாதம் பிடிப்பதையும் கைவிடுமாறு அறிவுரை வழங்கியபோதும் எனது தந்தை தவிர்ந்த எவரது அறிவுரையையும் கேட்பதற்கு நான் தயாராக இருக்கவில்லை.
மாலை வேளைகளில் எனது மூத்த சகோதரர் என்னை எமது வீட்டு முற்றத்துக்கு சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்வார். சக்கர நாற்காலியில் என்னை வைத்துவிட்டு முற்றத்தை சுற்றி வருவார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. அந்த தருணங்களை மிகவும் சந்தோசமாக அனுபவித்த என்னால் நிறைய விடயங்களைப் பார்க்க முடிந்தது. எமது வீட்டு முற்றத்தில் எனது இளைய சகோதரன் மற்றும் எமது மைத்துனர்கள் கிரிக்கெட் விளையாடுவதை நான் பார்த்து ரசிப்பேன். அவர்களது கிரிக்கெட் போட்டிகளுக்கு நான் நடுவராகக் கடமையாற்றுவேன். போட்டி மத்தியஸ்தம் தொடர்பில் எனக்கு சிறந்த அறிவிருப்பதை அவர்கள் அறிந்திருந்ததால் எனது தீர்மானங்களை அனைவரும் மதித்தனர். கிரிக்கெட் போட்டிகளை தொலைக்காட்சியின் ஊடாகப் பார்ப்பதன் ஊடாக அந்த விளையாட்டு தொடர்பில் நிறைய விடயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது. தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியையும் நான் தவறவிட மாட்டேன். கிரிக்கெட் விளையாட வேண்டுமென்ற கனவு எனக்குள் இருந்த போதும் பார்ப்பதும் மத்தியஸ்தம் வகிப்பதும் எனக்கு நிறைந்த இன்பத்தை வழங்கியதுடன் எனது ஆவலை ஓரளவு பூர்த்தி செய்தது.
மகிழ்வான தருணங்கள்...
நாற்காலியில் முடக்கப்பட முன்னர் யால தேசிய பூங்காவுக்கு சுற்றுலா செல்லும் அருமையான வாய்ப்பொன்று கிடைத்தது. அங்கு நான் மிகவும் துணிகரமாக நேரத்தை செலவிட்டேன். அது மிகவும் நினைவில் நிற்கக்கூடிய ஒரு பயணம். நாங்கள் அங்கு அதிகமான காட்டு விலங்குகளை, விசேடமாக யானைகளைக் கண்டோம். ஒரு யானை எமது வாகனத்தின் மிக அருகில் வந்தது. அது எனக்கு மிகுந்த கிளர்ச்சியையும் சிறிதளவில் பயத்தையும் கொடுத்தது. இந்தப் பயணத்தை ஏற்பாடு செய்த எனது தாய்வழி மாமாவுக்கு நான் மிகவும் நன்றியுடையவனாவேன். இந்த பயணத்தை மிகவும் சந்தோசமாக அனுபவித்த நாம் பொழுதை நன்றாகக் களித்தோம். நாற்காலியில் முடக்கப்பட்ட பின்னர் நான் பார்ப்பதற்கு மிகவும் ஆவலுடன் இருந்த மலைநாட்டுக்கு சுற்றுலாவொன்றை மேற்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது. எனது சிறுவயதில் மலைநாடு மிகவும் குளிரானது என அதிகமானோர் கூறக் கேட்டிருக்கிறேன். எனவே அங்கு சென்று அந்த அனுபவத்தைப் பெறுவதற்கு நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். இந்த சுற்றுலாகூட யால பயணத்தை ஏற்பாடு செய்த மாமாவினாலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வேன் ஒன்றில் அமர்ந்து பயணித்த எனது சக்கர நாற்காலி நான் நகர்வதற்கான தேவை ஏற்படும் பொது இலகுவாக எடுக்கும் விதத்தில் வேனின் பின்பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. பிரயாணங்களை மேற்கொள்ள இயலுமாயிருந்த காலப்பகுதிகளில் இந்த சுற்றுலாக்களை மேற்கொள்ளும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.
சில வருடங்களின் பின்னர் நான் முற்றுமுழுதாகப் படுக்கையில் விழும் முன்னர் எனது தந்தை, எனது மாமா ஒருவரின் வேனில் என்னை கொழும்புக்கு அழைத்துச் சென்றார். இந்தத் தடவை நான் வேனினுள் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே பயணித்தேன். எனது மாமாவின் வீட்டுக்கு சென்று இராப்போசனம் அருந்திய பின்னர் எனது தாய்வழி மாமாவின் வீட்டுக்குச் சென்றோம். அங்கு எனக்கு மிகவும் வேதனை தந்த விபத்தொன்று நிகழக் காத்திருந்தது. வேனிலிருந்து என்னை சக்கர நாற்காலியுடன் வெளியில் எடுக்கும் வேளை நான் கிட்டத்தட்ட கீழே விழுந்து விட்டேன். எனது இடது கணுக்காலில் அடி விழுந்து மிகுந்த வேதனை ஏற்பட்டது. வேதனை மிகுதியால் நான் கதறி அழுதேன். ஒருவழியாக எனது தந்தை என்னைத் தாங்கிப் பிடித்து ஒருவாறாக மீண்டும் என்னை சக்கர நாற்காலியில் இருக்க வைத்தார். நான் மிகப் பருமனாக இருந்ததால் ஏனையோருக்கு என்னைத் தூக்கிச்செல்ல மிகவும் கடினமாக இருக்கும். எனினும் ஒருவாறாக பாதுகாப்பாக வீட்டையடைந்த நான் சுகமடையப் பல வாரங்களை படுக்கையில் கழித்தேன்.
படுக்கையில் விழுதல்...
நாட்கள் வருடங்களாக மாறிக் கழிந்தன. நான் அப்போது ஏறத்தாழ 18 வயதானவனாக இருந்தேன். சக்கர நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பது முதுகு வலியை ஏற்படுத்துவதால் அமர்ந்து இருப்பது சிரமமாக இருந்தது. ஒருநாள் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த வேளை எனக்கு அசாதாரண உணர்வுகள் ஏற்பட்டதுடன் எனது முகம் வெளிறிப் போனது. மெதுவாக, ஆனால் உறுதியாக சுவாசிக்க சிரமப்படுவதை உணர்ந்தேன். இதை நான் தாயாரிடம் கூறியபோது உடனடியாக என்னை படுக்கையில் கிடத்திவிட்டு வெளியே சென்றிருந்த எனது தந்தைக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தினார். அது சுவாசிக்க சிரமப்படும் எனது முதல் அனுபவமாக இருந்தது. எனது சுவாச தசைநார்கள் நலிவடைந்து வருவதால் போதியளவு ஒட்சிசன் கிடைக்காமையே இதற்கு காரணமென எனது தந்தை புரிந்துகொண்டார். சுவாசத்துக்கு உதவும் தசைநார்களின் நலிவு எனது அனைத்து தசைநார்களிலும் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் நலிவின் காரணமாக ஏற்படுகின்றது. அத்துடன் அது DMD வியாதியின் பிரதான விளைவுகளில் ஒன்றாகும். அன்றிலிருந்து எனது அதிகமான நேரத்தை படுக்கையிலேயே செலவழித்ததுடன் என்னால் அடிக்கடி சக்கர நாற்காலிக்குப் போக முடியவில்லை. நாட்கள் செல்லச்செல்ல நான் முழுமையாக படுக்கையில் விழுந்தேன். சுவாசிப்பதில் ஏற்படும் சிரமம் காரணமாக ஒரு கணம் கூட என்னால் இருக்க முடியவில்லை. எனது வாழ்வு மிகவும் அலுப்புமிக்கதாக மாறியதுடன் எனது நேரம் மிகவும் மெதுவாகவே நகர்வதாக எனக்குத் தோன்றியது.
ஒரு தூர வெளிச்சம் தோன்றியது...
நான் ஒரு முதிர்ச்சிமிக்க பையனாக மாறிவரும் சூழ்நிலையில் எனக்கு வாழ்வில் என்ன உள்ளது என்று மெதுவாக ஆனால் தெளிவாக உணர ஆரம்பித்தேன். எனது அருகில் அமர்வதை வழமையாகக் கொண்ட என் தந்தை, வாழ்வு என்பது வாழ்வுக்கு முகம்கொடுக்க நாம் எவ்வாறு நம்மை தயார்படுத்துகிறோம் என்பது பற்றியதே ஆகும் என விளக்குவார். அவரின் வார்த்தைகளிலிருந்து ஏன் எனது வாழ்வில் பாரிய எதிர்பார்ப்புகள் இருக்கக் கூடாது எனப் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தக் காலப்பகுதியில் எனது குடும்பத்துக்கு அனைத்தும் மங்கலான விடயங்களாகவே தோன்றின. எனது தந்தைவழி மாமா ஒருவர் இணையத்தை பயன்படுத்திய வேளை அமெரிக்காவிலுள்ள 'டுசென்னே பெற்றோர்' திட்டம் பற்றி அறிந்துகொண்டார். அது தூரத்தில் ஓர் ஒளியாகத் தென்பட்டது.
-Vidivelli
தமிழ் கொண்டாடவேண்டிய சாகா வரம்பெற்ற எழுத்து.
ReplyDelete