SLTJ பின்வாங்கியது ஏன்...?
இலங்கை முஸ்லிம்களுக்கான முஸ்லிம் தனியார் சட்டம் கடந்த 67 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்ட ஒன்றாகும். முஸ்லிம்களின் விவாக, விவாக ரத்து தொடர்பான விடயங்களை இஸ்லாமிய முறைப்படி நடத்திக் கொள்வதற்கான வழிவகைகளை கொண்டமைக்கப்பட்டதே இந்த முஸ்லிம் தனியார் சட்டத்தின் முக்கிய பகுதியாகும்.
முஸ்லிம் தனியார் சட்டம் உருவாக்கப்பட்ட ஆரம்ப காலம் குர்ஆன், ஆதாரபூர்வமான சுன்னாக்களின் தெளிவுகள் குறைவான காலப்பகுதி என்பதினால் தனிமனித கருத்துக்களுடன் ஷாபிஈ மத்ஹபின் விளக்கங்களையும் இணைக்கப்பெற்றே அவை தயாரிக்கப்பட்டிருந்தன. குர்ஆன் சுன்னாவின் விளக்கங்கள் முழுமைப்படுத்தப்படாத ஒரு சட்டக் கோர்வையாகவே அவை இருக்கின்றன.
இந்த நிலையில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் மிலிந்த மொரகொட அவர்களின் பொறுப்பில் நீதி அமைச்சு இருந்த கால கட்டத்தில் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவருவதற்காக வேண்டி முன்னால் நீதியரசர் சலீம் மர்சூப் தலைமையில் 19 பேர்களை கொண்டதொரு குழு உருவாக்கப்பட்டது. 2009ம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்தக் குழு 10 வருடங்களை பூர்த்தியாக்கும் நிலையில் இருந்தும் முஸ்லிம் தனியார் சட்ட விடயத்தில் தீர்வுகள் எட்டப்பட வில்லை.
மிலிந்த மொரகொடவுக்குப் பின்னர் மு.காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் நீதி அமைச்சு செயல்பட்ட போதிலும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த விடயத்தில் போதிய கவனம் செலுத்தாமையினால் அவருடைய காலமும் முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்தின் இருண்ட காலமாகவே கழிந்தது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி நிறைவுக்கு வந்து மைத்திரி ஆட்சி உண்டாக்கப்பட்டு புதிய அரசு பொறுப்பெடுத்த பின்னர் மீண்டும் பேசுபொருளாக மாறியது முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம்.
ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இலங்கை GSP Plus வரிச் சலுகையை பெற்றுக் கொள்ள முயற்சித்த நேரத்தில் குறித்த வரிச்சலுகை இலங்கைக்கு கிடைக்க வேண்டுமாயின் முஸ்லிம் தனியார் சட்டத்தில் முக்கிய திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை அரசிடம் தெரிவித்திருந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக மீண்டும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் தேவை என்ற பேச்சை அரசாங்கமே ஆரம்பித்தது.
இந்நேரத்தில் தான் இலங்கை தெளஹீத் ஜமாஅத்தினர் - SLTJ முஸ்லிம் தனியார் சட்டத் திருதத்தை ஒரு முக்கிய விடயமாக கையிலெடுத்து பேசுபொருளாக்கினார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இலங்கை GSP Plus வரிச் சலுகையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் தான்தோன்றித் தனமாக கைவைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற நியாயமான கோரிக்கையை முன்வைத்து பேச ஆரம்பித்தவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மாணத்திற்கு எதிராக கொழும்பிலும், கிழக்கிலும் பாரிய அளவிலான ஆர்பாட்டங்களை முன்னெடுத்தார்கள்.
முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் என்பது முஸ்லிம்களின் தேவைக்காக குர்ஆன், சுன்னா அடிப்படையில் முறைப்படி செய்யப்பட வேண்டிய ஒன்று என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேவைக்காக முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் இலங்கை தெளஹீத் ஜமாஅத்தினர் - SLTJ பேசத் தலைப்பாட்டார்கள்.
இலங்கை தெளஹீத் ஜமாஅத்தினர் - SLTJ பேசும் வரை சுமார் 09 வருடங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்த முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் இவர்களின் ஆர்பாட்டத்தின் பின்னர் பலரது கவனத்தையும் பெற ஆரம்பித்தது. முஸ்லிம் தனியார் சட்டம் பற்றிய ஆர்பாட்டத்தின் போது அவ்வமைப்பின் செயலாளர் அப்து ராசிக் பேசிய பேச்சின் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்து ராசிக்கின் கைது முஸ்லிம் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை உண்டாக்கியது மட்டுமன்றி முஸ்லிம் தனியார் சட்டத் திருத்த விடயத்தில் முன்னேற்றத்தை கொண்டுவரும் ஒரு தேவையையும் உணர்த்தியது.
ஆனால் இதன் பின்னர் நடைபெற்ற செயல்பாடுகள் காரணமான மீண்டும் முஸ்லிம் தனியார் சட்ட திருத்த விடயம் முடவன் ஆசைப்பட்ட கொம்புத் தேனைப் போல் கண்டும் காணாத நிலைக்கு தள்ளப்பட்டது.
மிலிந்த மொரகொட அமைத்த குழுவும் மந்த கதியில் காலம் கடத்தியது. அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா சபையும் ஒரு சில அறிக்கைகளுடன் சுருக்கிக் கொண்டது.
முஸ்லிம் தனியார் சட்ட பிரச்சினைக்காக ஆர்பாட்டம் செய்து, கவனிப்பாரற்றுக் கிடந்த முக்கிய பிரச்சினையை பேசுபொருளாக்கி மீண்டும் கவன ஈர்ப்பை பெற காரணமாக இருந்த இலங்கை தெளஹீத் ஜமாஅத்தினர் - SLTJ கூட இது தொடர்பாக அடுத்த கட்ட நகர்வுகள் எதனையும் செய்யாமல் கவனமற்று இருந்து விட்டார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்திய ஒரு சில மாதங்களில் இலங்கை தெளஹீத் ஜமாஅத் - SLTJ பாரிய நிர்வாக மாற்றமொன்றை அதிரடியாக முகம் கொடுத்தது. நிர்வாக மாற்றத்தின் பின்னர் நாட்டு முஸ்லிம்களின் நலன் கருதிய செயல்பாடுகளில் எவ்விதமான கருத்துக்களையும் வெளியிடுவதை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தவித்து வந்தது இலங்கை தெளஹீத் ஜமாஅத் - SLTJ இதற்கான காரணம் என்னவென்பது அவர்களைத் தவிர யாருக்கும் இதுவரை தெரியவில்லை.
தற்போது மீண்டும் முஸ்லிம் தனியார் சட்ட திருத்த விடயம் பற்றிய கலந்துரையாடல்கள், சந்திப்புகள் என்று மும்முரமான பேச்சுக்கள் முஸ்லிம் தனியார் சட்டம் பற்றி நடைபெற்று வருகின்றன. உலமா சபைக்கும், முஸ்லிம் தனியார் சட்ட திருத்தக் குழுவுக்கும் இடையிலான சந்திப்புக்கள் நடைபெறுகின்றன. உலமா சபை மற்றும் திருத்தக் குழுவுக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பல சுற்று பேச்சுவார்தைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இவை எவற்றிலும் இலங்கை தெளஹீத் ஜமாஅத்தினர் - SLTJ எவ்விதமான கருத்துக்களை வெளியிடவோ அல்லது திருத்தக் குழுவுடனோ, உலமா சபையிடமோ இதுபற்றிய எவ்விதமான பேச்சுவார்த்தைகளை நடத்தியதாகவோ இதுவரை செய்தி இல்லை.
இலங்கை தெளஹீத் ஜமாஅத்தினரின் பின்வாங்களுக்கான காரணம் என்னவென்பதை ஆராய்வது இந்த ஆக்கத்தின் நோக்கமன்று. மற்ற அமைப்பினர்களை விட சமுதாய விடயங்களில் பலத்த அக்கறை கொண்டு பல காரியங்களை ஆற்றி வந்தவர்கள் திடீரென எந்தவொரு சமூக காரியங்களையும் கவனத்தில் கொள்ளாமல் இருப்பது பத்தோடு பதினொராவது அமைப்பாக இலங்கை தெளஹீத் ஜமாஅத்தும் ஆகிவிட்டதை தெளிவாக படம் பிடித்து காட்டியுள்ளது.
இந்த செய்தியை படித்த பின்னர் கடமைக்காக அறிக்கை விட முயற்சிக்காமல், அல்லது உலமா சபையின் தலையில் குறையை பாரம் சாட்டிவிட்டு கதவை மூடாமல் சமுதாய அக்கறையை மீண்டும் முன்நிறுத்தி சமுதாயத்திற்காக இலங்கை தெளஹீத் ஜமாஅத்தினர் - SLTJ பேச வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.
கைதுகள் எமது காரியங்களை கட்டிப் போடும் என்றால் உலகில் புரட்சிகளே உண்டாகியிருக்காது. பேசுபவர்கள் அமைதியானால் உண்மை ஊமையாகி விடும் என்பதே உலக வழமை. அந்த வகையில் மீண்டும் அதே பலத்துடனும், உத்வேகத்துடனும் இலங்கை தெளஹீத் ஜமாஅத்தினர் - SLTJ முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்காகவும் பேசவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
உஸ்மான் உவைஸ்
கட்டுரை ஆசிரியர் முன் வைத்த காரணங்களில் பின் வருபவை அவசியமற்றவையாகும்.
ReplyDelete1. முஸ்லிம் தனியார் சட்டம் ஏற்படுத்தப்பட்ட காலம் குர்ஆன் ஹதீஸின் தெளிவுகள் குறைந்த காலம்
2. SLTJ தான் இதை பேசு பொருளாக மாற்றியது என்ற விடயம்
3. SLTJ அப்துல் ராசிக்கின் கைதை இதனுடன் ஒப்பிட்டுக் காட்டியது
நாம் எந்த ஒரு விடயத்தையும் இயக்க வெறிக்கும் கொள்கை வெறிக்கும் அப்பால் நின்று குர்ஆன் ஹதீஸின் அடிப்படையில் உலமாக்களும் துறை சார் நிபுணர்களும் ( நீதிபதிகள் + சட்ட வல்லுனர்கள் + முஸ்லிம் அரசியல்வாதிகள் ) ஒன்று சேர்ந்து எம் எதிர்கால சந்ததிகளின் நலனையும் கருத்திற் கொண்டு இஸ்லாமிய சட்ட விதிக்கமைய உருவாக்கப்பட வேண்டிய இந்த விடயத்தை எல்லோரும் நினைத்த மாதிரி பேசவும் முடியாது எழுதவும் முடியாது. (தடி எடுத்தவர்களெல்லாம் வேட்டைக்காரர்கள் ஆக முடியாது)
அல்ஹம்துலில்லாஹ்.உவைஸின் நல்ல வேண்டுகோள் எம் உம்மத்துக்காக.
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்,தேவையான நேரத்தில் தேவையானதை வலியுறுத்திய உவைசிக்கு அல்லாஹ் ரஹ்மத்செய்வானாக.,இயக்க வேறுபாடு இல்லாமல் உவைஸின் கருத்துகளுக்கு மதிப்பளிப்போம்.
ReplyDeleteSLTJ இன் பின்வாங்களுக்கான காரணம் ACJUவின் கீழ் சமுதாயம் ஒற்றுமைப்படட்டும் என்பதற்காக இருக்கலாம் என்று ஏன் நாம் அவர்கள் மீது நல்லபிப்பிராயம் கொள்ளக் கூடாது?
ReplyDelete