"பள்ளிவாசல்களை பாதுகாக்க, முன்வருமாறு கோரிக்கை"
முஸ்லிம்கள் இந்நாட்டில் மூன்றாம் பெரும்பான்மையினராக வாழ்கின்றார்கள். இவர்களும் நீண்ட வரலாற்றைக் கொண்டவர்கள். அவர்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகள். ஆரம்பகாலம் தொட்டு அரசியல் செல்வாக்குமிக்கவர்கள். பல்லின சமூகம் வாழும் இலங்கையில் முஸ்லிம்கள் அரசியல், பொருளாதாரம், கலை, பாதுகாப்பு, போராட்டம், இறைமை போன்ற பல்வேறு விடயங்களில் நாட்டுக்கு அளப்பரிய பங்களிப்புக்களை வழங்கி வருகின்றார்கள்.
அரேபிய வர்த்தகர்கள் சென்ற இடங்களிலெல்லாம் தமது குடியிருப்புக்களையும், வர்த்தக கேந்திர நிலையங்களையும் விஷேடமாக துறைமுகங்களை அண்மித்த பிரதேசங்களில் அமைத்துக்கொள்ளப் பின்வாங்கவில்லை. துறைமுகங்களை அண்மித்த பிரதேசங்கள் வியாபாரிகள் தமது கப்பல்களை நிறுத்தி வைக்கவும் அவற்றை திருத்திக்கொள்ளவும் ஏதுவாக அமைந்தது.
காலப்போக்கில் முஸ்லிம்கள், மன்னர்களுடன் மிக நெருக்கம் கொண்டு அவர்கள் அரச சபையில் அங்கத்தவர்களாக நியமிக்கப்பட்டார்கள். சிங்கள மன்னர்களின் நன்மதிப்பைப் பெற்று அம்மன்னர்;களின் ஆட்சிக்கு பக்கபலமாகவும், படை வீரர்களாகவும், வைத்தியர்களாகவும், சமையல் செய்பவர்களாகவும், பொருளாதார உதவிகளை வழங்குபவர்களாகவும் வாழ்ந்து வந்த முஸ்லிம்களுக்கு சிங்கள உயர் குலப் பெண்களை மணம் முடித்துக் கொடுத்து முஸ்லிம்களாக வாழ அனுமதியும் நிலபுலங்களும் வழங்கி கௌரவித்த வரலாறுகள் ஏராளம் இருக்கின்றன.
மேலும், முஸ்லிம்கள் நாடுகளுக்கிடையில் சமாதானம் பேணும் சமாதானம் விரும்பிகளாகவும் செயற்பட்டார்கள். அதனால் வெளிநாடுகளில் முஸ்லிம்கள் இலங்கைக்கான பிரதிநிதிகளாக கலந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் வழங்கப்பட்டன.
இவ்வாறாக உயர்பதவிகளை முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ள அவர்களிடம் நாடுபிடிக்கும் எண்ணம் கொண்டிராமையும் மற்றுமொரு காரணமாக இருந்தது எனலாம்.
நாம் அறியப்படாத முஸ்லிம்கள் பற்றிய பல தகவல்கள் பதியப்படாமை காரணமாக அவை அழிந்தொழிந்து போய் விடுகின்றன. இன்று எமது சமூகம் தொடர்பான எத்தனையோ தகவல்கள் பெற்றுக்கொள்ள முடியாதவாறு இருக்கின்றன. இவற்றை ஒழுங்கமைத்து பதிவு செய்வது யார் பொறுப்பு என்ற கேள்வி அக்கறைகொண்ட ஒவ்வொருவருக்குள்ளும் எழுந்துள்ளது.
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு குறித்து பல்வேறு அபிப்பிராயங்கள் நிலவிவரும் காலம் இது. முஸ்லிம்களை நிந்தித்துவரும் பொதுபலசேனா, ராவணா பலய, மகசேன பலகாய போன்ற அமைப்பினர் முஸ்லிம்களுக்கு நீண்ட வரலாறு இந்நாட்டில் இல்லை. அவர்கள் கள்ளத் தோணிகள், முஸ்லிம்கள் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளல்ல என்ற கருத்துக்களை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றமை கவனிக்கத்தக்கவையாகும்.
ஒரு சமூகத்தின் அரசியல் உரிமைகளை தகர்த்தெறிவதற்காக அச்சமூகத்தின் வாழ்வாதாரங்களை அழித்து, பொருளாதாரத்தை முடக்கி உளவியல் தாக்கங்களை ஏற்படுத்தி இந்நாட்டில் அவர்களின் எதிர்காலத்தை அச்சம்கொண்டு சிறைப்பிடிக்க பேரினவாத குழுக்கள் மேற்கொள்ளும் செயற்பாடாகவே முஸ்லிம்கள் மீது அண்மையில் அளுத்கமை முதல் திகன வரையாக அவர்களினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட கலவரங்களின் மூலம் பெற்றுக்கொண்ட அனுபவங்களை கொள்ளலாம்.
இலங்கையில் கொதிநிலை இனவாதப் போக்குகளால் முஸ்லிம்கள் வரலாறு நெடுகிலும் இரையாகி வருகின்றார்கள். இச்சம்பவங்களின் போது தமது வரலாற்றை திரும்பிப் பார்க்கும் அசைவுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
முஸ்லிம்களில் வரலாற்றுத்துறை ஆய்வாளர்கள் ஓரிருவர்களை கொண்டுள்ளமை, தொல்லியல் ஆய்வாளர் எவரையும் கொண்டிராமை இச்சமூகத்தின் துரதிஷ்டம் எனலாம். இந்நிலை உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாற்றாசிரியர்களின் நூல்களை அடிப்படை மூலாதாரமாகக் கொண்டு முஸ்லிம் தேசத்தை விஞ்ஞான ரீதியில் நிறுவிய வரலாறு ஆவணப்படுத்தப்படாமைக்கு பிரதான காரணியெனலாம்.
முதலில், வரலாறு தொடர்பான அவசியத்தை இலங்கை முஸ்லிம்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். வரலாறு பேசுவதையோ, எழுதுவதையோ, படிப்பதையோ அதிகமானோர் விரும்புவதில்லை. இவர்கள் அரசியலில் ஆர்வம், ஆத்மீக அதீத பற்று போன்றவை மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.
வரலாறு நெடுகிலும் தமது சமூகத்தின் அதிகார இருப்புக்கு அரசியல் ரீதியாகவும், ஆத்மீக ரீதியாகவும் முரண்பட்டு விவாதித்துக்கொள்ள விரயமாக்கும் சக்திகளும், வளங்களும் எமது பாரம்பரியங்களை பாதுகாப்பதற்கான குழுக்களோ, குரல்களோ வெளியில் தோன்றவில்லை.
இலங்கை முஸ்லிம்கள் தொன்மைவாய்ந்த பள்ளிவாசல்கள் பல இடித்து நொருக்கப்பட்டுவிட்ட பின்னரும் ஆயிரம் வருடகால வரலாற்று சான்றுகூறும் சில பள்ளிவாசல்கள் காணப்படுகின்றமை ஓர் அதிஷ்டம் எனலாம். அவற்றின் பெறுமானங்கள் உணர்த்தப்பட்டு பாதுகாக்கப்படுவது மிக முக்கியமானதாகும்.
அந்தவகையில் இலங்கையின் நிருவாக மாவட்டங்களில் மொனராகல மாவட்டம் கூடிய நிலப்பரப்பையும் குறைந்த சனத்தொகையையும் கொண்டதாகவும் காணப்படுகின்றது. கடந்த 2012ஆம் ஆண்டின் குடிசன மதிப்பீட்டின் பிரகாரம் இம்மாவட்டத்தில் 448,142 மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
இச்சனத்தொகையில் பெரும்பான்மையினராக 423,972 பேர் சிங்களவர்களும், இலங்கைத் தமிழர்கள் 9783பேரும், இந்தியத் தமிழர்கள் 4590 பேரும், இலங்கை முஸ்லிம்கள் 9552 பேரும், பேகர் 109 பேரும், மலே 46 பேரும் ஏனையேர் 90 பேரும் வாழ்கின்றார்கள்.
இலங்கையை பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் கைப்பற்றும் போது அவர்களை எதிர்த்து நாட்டின் இறைமையை பாதுகாக்கப் போராடிய எஹலபொல, வீரபுரன் அப்பு, ரட்டேநாள போன்ற தியாகிகள் வாழ்ந்த பிரதேசம் இம்மாவட்டமாகும்.
அதேபோல் உணவுற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் இரண்டு இலட்சம் ஏக்கர் நிலத்தில் நெற்பயிர் செய்யப்பட்டு வரலாற்று சாதனைபுரிந்த பெருமை இம்மாவட்டத்துக்குரியதே. இக்காரணத்தினாலேயே இம்மாவட்டம் வெல்லஸ்ஸ என்றழைக்கப்பட்டது.
மொனராகல மாவட்டத்தில் வாழும் 9552 முஸ்லிம்களில் 60 வீதமான 4950 முஸ்லிம்கள் வாழும் பிரதேச செயலக பிரிவாக மெதகம திகழ்கின்றது.
மெதகம பிரதேச செயலக பிரிவினுள் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பெரிய கிராமமாக பகினிகஹவெல விளங்குகின்றது. இக்கிராமம் மொனராகல - பிபிலை பிரதான வீதியில் சுமார் 20 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது.
இக்கிராமத்தின் எல்லைகளாக வடக்கே மெதகமவும், தெற்கே மெறகஹமட, கிழக்கே புப்பரயும், மேற்கே பொல்கஹபிடியையும் கொண்டதாக அமைந்துள்ளது. இங்கு சுமார் 720 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன.
இக்கிராமத்தின் தொன்மையையும் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றினையும் எடுத்துக்கூறும் சான்றாதாரமாக இங்குள்ள பழைய ஜும்ஆ பள்ளிவாசல் திகழ்கின்றது.
சுமார் 800 வருடங்கள் பழைமை வாய்ந்த இப்பள்ளிவாசல் சவூதி அரேபியாவைச்சேர்ந்த அலி மௌலானா என்பவரால் கட்டப்பட்டதாக அக்கிராமவாசிகளின் வாய்வழிவந்த சான்றுகளாகும்.
இப்பள்ளிவாசல் நிர்மாணத்தின்போது கற்கள், சீமெந்துகள் பயன்படுத்துவதற்குப் பதிலாக முட்டை, பாணி, சுண்ணாம்பு போன்ற கலவை பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. இக்கலவையின் உறுதித்தன்மையினால் இன்றுவரை இப்பள்ளிவாசல் சிதைவுறாமல் காணப்படுகின்றது.
இப்பள்ளிவாசலை மெருகூட்டுவதற்காக சுமார் ஒரு அடியில் அமைக்கப்பட்டுள்ள கொங்றீட் அற்ற வளைவுகளுடன் கூடிய புராதன கட்டிடக் கலை பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் காணப்படுகின்றது.
மேலும் இப்பள்ளிவாசலின் முன்னால் காணப்படும் திண்ணை, இருமருங்கிலுமுள்ள விறாந்தைகள், உள்பள்ளிவாசல், மிம்பர், கதவுகள், நிலைகள் போன்றன எமது புராதன கட்டடக் கலையின் எச்சங்களாக மிளிர்கின்றன.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இப்பள்ளிவாசலை இலங்கை தொல்பொருட் திணைக்களத்தினர் பார்வையிட்டு இதன் காலத்தை உறுதிப்படுத்தியுள்ளனர். இதன்போது இப்பள்ளிவாசலை தொல்பொருள் திணைக்களத்தின் பராமரிப்புப்புக்கு அவர்கள் கேட்டபோது அதனை கிராமத்தவர்கள் மறுத்துவிட்டனர்.
இப்பள்ளிவாசல் இன்றுவரை உடைக்காமல் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. தற்கால சனத்தொகைப் பெருக்கத்தை ஈடுசெய்ய ஊரில் புதிய ஜும்ஆ பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
மெதகம கொட்டப்பேவ கிராமத்தில் இப்பள்ளிவாசலின் வயதையொத்த பள்ளிவாசல் சில திருத்தங்கள் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அத்தோடு புராதன காலத்தில் வுளூ செய்வதற்கென மழைநீரை தேக்கி வைப்பதற்காக கற்பாறையை குடைந்து நீர் தேக்கி வைக்கும் வகையில் செய்யப்பட்ட 'ஹெளளு' ஒன்றும் காணப்படுகின்றது.
இவ்விரு பள்ளிவாசலின் வயதுடன் ஒத்ததான மொனறாகல மாவட்டத்தின் அழுப்பொத்தே என்னும் கிராமத்தில் இன்னுமொரு பள்ளிவாசல் காணப்பட்டது. அப்பள்ளிவாசல் புனர்நிர்மாணம் என்ற பெயரில் நிர்மூலமாக்கப்பட்டுவிட்டது.
உலகில் இஸ்லாம் பரவ ஆரம்பமான நாள் முதல் முஸ்லிம்கள் தமது வணக்க வழிபாடுகளை மேற்கொள்வதற்கான ஒரு பள்ளிவாசலை அமைக்கத் தவறியிருக்க மாட்டார்கள். இவ்வாறாக இலங்கையில் பரந்து வாழும் முஸ்லிம்களும் தமக்கென ஒரு பள்ளிவாசலை நிச்சயமாக அமைத்திருப்பர். இவ்வாறு அமைக்கப்பட்ட பள்ளிவாசல்கள் காலத்தின் நவீனத்திற்கேற்ப புனரமைப்பு, விஸ்தரிப்பு என்ற அடிப்படையில் அவை இருந்த தடயம் அற்றுவிட்டன. இவற்றை நாம் பாதுகாக்க முனைந்திருப்போமேயானால் இன்று எமது தொன்மையும், வரலாறுகளும் உறுதிசெய்யப்பட்டிருக்கும்.
இன்றைய சூழலில் முஸ்லிம்கள் பள்ளிவாசலை சனத்தொகையை மிஞ்சி பிரமாண்டமாக விஸ்தரிப்பதும் அவற்றை; அலங்கரிக்கும் செயற்பாட்டினை அவதானிக்க முடிகின்றது. இதனால் தோற்றத்தில் அவை அழகாக காட்சியளிக்கின்றதே தவிர மனித உள்ளங்களின் செல்வாக்கிழந்து வருகின்றன.
எனவே, முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால இருப்பை இந்நாட்டில் நிரூபிப்பதற்கான மிக முக்கியமான ஆதாரம் இதுபோன்ற பள்ளிவாசல்களாகும். இதுவரையில் அழிக்கப்பட்டமை போக மீதமுள்ள தொன்மைவாய்ந்த பள்ளிவாசல்களையாவது பாதுகாக்க முன்வரவேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
ஏ.எம். பறக்கத்துல்லாஹ்
Post a Comment