இஸ்ரேலில் நிறைவேற்றப்பட்டுள்ள, கொடூரமான சட்டம்
இஸ்ரேல் யூத மக்களுடைய நாடு என வரையறுக்கும் சர்ச்சைக்குரிய சட்டம் ஒன்று இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இது இஸ்ரேலில் உள்ள அரபு பிரஜைகள் மீது அப்பட்டமான பாகுபாட்டுக்கு இட்டுச் செல்லும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த சட்டத்தை இனவாதம் கொண்டது என அரபு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பலஸ்தீனர்கள் சாடியுள்ளனர். இஸ்ரேல் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது குழப்பம் ஏற்பட்டதோடு, இது இனப்பாகுபாட்டை சட்டமாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
எனினும் இந்த சட்டம் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் 62 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதோடு இதற்கு எதிராக 55 வாக்குகள் பதிவாகின. இதில் ஹிப்ரூ இஸ்ரேலின் தேசிய மொழி என அங்கீகரிக்கப்பட்டதோடு, யூத நலன்களே தேசிய நலனாக வரையறுக்கப்பட்டுள்ளது.
முன்னர் உத்தியோகபூர் மொழியாக கருதப்பட்ட அரபு மொழிக்கு, சிறப்பு அந்தஸ்த்து மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. இதனால் இஸ்ரேலுக்குள் அரபு மொழியில் அரச செயற்பாடுகளில் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இஸ்ரேல் யூதர்களின் வரலாற்று பூமி என்றும் அங்கு யூதர்களுக்கு சுயநிர்ணய உரிமை இருப்பதாகவும் நேற்றுக் காலை இஸ்ரேல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் குறிப்படுகிறது. இது தவிர, பிரிக்கப்படாத ஜெரூசலம் இஸ்ரேல் தலைநகர் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டமானது இஸ்ரேலின் அடிப்படை சட்டங்களின் ஓர் அங்கமாக மாறி இருப்பதோடு, அது நடைமுறை அரசியலமைப்பாகவும் செயற்படவுள்ளது.
“எமது மொழி, எமது தேசிய கீதம், எமது கொடியை கல்லில் பொறிக்கும் இஸ்ரேல் தேசத்தின் வரலாற்று முக்கியம் வாய்ந்த தருணம் இது” என்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்புக்கு பின்னர் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டார். “சியோனிஸ மற்றும் இஸ்ரேல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க தருணம் இது” என்று அவர் கூறினார். இஸ்ரேல் பாராளுமன்றத்தில் உள்ள அரபு உறுப்பினர்கள் இந்த சட்டமூலத்திற்கு கண்டனம் வெளியிட்டனர்.
“யூத மேலாதிக்கத்திற்காக நிறைவேற்றப்பட்ட இந்த சட்டம் நாம் எப்போதும் இரண்டாம் தர பிரஜைகள் என்று எம்மிடம் கூறுவதாக உள்ளது” என்று அரபு கூட்டணியின் தலைவர் ஐமன் ஒதேஹ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுக் கூறினார்.
“ஜனநாயகத்தின் அதிர்ச்சி மற்றும் துக்ககரமான மரணத்தை நான் அறிவிக்கிறேன்” என்று மற்றொரு அரபு எம்.பியான அஹ்மத் திமி குறிப்பிட்டார். இதில் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பலர் இந்த சட்டத்தை எதிர்த்தனர்.
இதனை இனவாதம் கொண்டது என சாடிய அரபு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த சட்டமூலத்தின் பிரதிகளை பாராளுமன்றத்திற்குள் கழித்து எறிந்தனர்.
நெதன்யாகுவின் லிகுட் கட்சி நிறுவனரான முன்னாள் இஸ்ரேல் பிரதமர் மெனாசம் பெகினின் மகன் பென்னி பெகின் வாக்களிப்பதை தவிர்த்துக் கொண்டார். ஆளும் கட்சி மனித உரிமைகளில் இருந்து விலகிச் செல்கிறது என்று குறிப்பிட்டார். “லிகுட் தலைமைகளிடம் இருந்து நான் இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை” என்றார்.
எட்டு மில்லியனுக்கும் அதிகமான இஸ்ரேல் மக்கள் தொகையில் அரபு பிரஜைகள் 17.5 வீதமாக உள்ளனர். தாம் பாகுபாட்டுக்கு முகம்கொடுத்து வருவதாக அவர்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர்.
பலஸ்தீன விடுதலை அமைப்பின் பொதுச் செயலாளர் சயேப் எரகத் இதனை மிக ஆபத்தான இனவாதச் சட்டம் என வர்ணித்துள்ளார். இது இனப்பாகுபாட்டை சட்டபூர்வமாக்குவதோடு இஸ்ரேல் இனப்பாகுபாடு கொண்ட அரசு என்ற சட்டபூர்வ வரையறைக்குள் வருகிறது என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேல் ஒரு யூத மற்றும் ஜனநாயக நாடு என்பதை பாதுகாக்கும் இலக்குடனேயே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டதாக இதற்கு அனுசரணை வழங்கிய நெதன்யாகுவின் லகுட் கட்சியைச் சேர்ந்த அவி டிச்டர் குறிப்பிட்டார்.
இந்த சட்டத்தின் பல்வேறும் சரத்துகளும் பல ஆண்டுகளாக விவாதத்திற்கு உள்ளாகி வந்தது.
இஸ்ரேலிய வரலாற்றில் திவீர வலதுசாரி அரசாக கருதப்படும் தற்போதை நெதன்யாகுவின் அரசு பாராளுமன்றத்தின் கோடைகால அமைர்வு முடிவதற்குள் இந்த சட்டத்திற்கு ஒப்புதலை பெற முயற்சிக்கிறது.
1948 ஆம் ஆண்டு இஸ்ரேல் உருவாக்கப்பட்டபோது அதன் எல்லைக்குள் எஞ்சி இருந்த பலஸ்தீன சந்ததியினரே தற்போது இஸ்ரேலின் அரபு பிரஜைகளாக உள்ளனர். இஸ்ரேல் உருக்கப்பட்டபோது ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் தமது பூர்வீக நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டமை குறிப்பித்தக்கது.
Post a Comment