எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும், மரணதண்டனையை நிறைவேற்றுவோம் - ஜனாதிபதி திட்டவட்டம்
எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும் போதைப்பொருள் குற்றத்திற்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டே ஆகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
சீன அரசாங்கத்தின் அன்பளிப்பில் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்படவுள்ள சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலையின் நிர்மாணப்பணிகளின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார்.
மேலும், “இலங்கையின் மொத்த சனத்தொகையில்,1.4 வீதமானோர் போதைப்பொருள் பாவனைக்கும், 18 வீதமானோர் சிகரட் பாவனைக்கும், 14 வீதமானோர் மதுவுக்கும் அடிமையாகி உள்ளனர்.
அத்துடன், கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றிற்கு போதைப் பொருள் கொண்டு செல்லப்பட்டு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது என்று எனக்கு நேற்று தகவல் கிடைத்திருந்தது.
ஆகவே எவ்வித எதிர்ப்புகள் வந்தாலும், இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டே ஆகும்” என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, போதைப்பொருள் குற்றத்திற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றப் போவதாக அண்மையில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இலங்கையில் மரண தண்டனையை நிறைவேற்றினால் பாரிய பிரச்சினைகள் ஏற்படும் என உலகநாடுகளில் சில எச்சரிக்கை விடுத்திருந்தன.
அத்துடன் மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது என இலங்கையிலும் பலர் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்கள்.
இந்த நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பெயர் பட்டியல் ஜனாதிபதியின் கைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில், மரண தண்டனை விதிக்கப்படுமா இல்லையா என்று அனைவர் மத்தியிலும் கேள்வி எழுந்திருந்தது.
அந்த வகையில் இன்று மீண்டும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி உறுதியாக தெரிவித்துள்ளார்.
Post a Comment