இலங்கைக்கு போர்க்கப்பலை, கொடையாக வழங்கவுள்ள சீனா
சிறிலங்காவுடனான இராணுவ உறவுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும், சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்றை கொடையாக வழங்கவுள்ளதாகவும் சீனா தெரிவித்துள்ளது.
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கொழும்பில் உள்ள ஷங்ரி லா விடுதியில் நேற்று நடந்த நிகழ்வில், சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வெய் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய சீனத் தூதரக பாதுகாப்பு ஆலோசகர் கேணல் சூ ஜியான்வெய்,
“இந்த ஆண்டு சிறிலங்காவின் முப்படையினருக்கும் சீனா, பல்வேறு பயிற்சிநெறிகளையும் தொடர்ந்து வழங்கியது.
சிறிலங்கா இராணுவ பயிற்சி அகடமியில் சீனாவின் உதவியுடன் அரங்க வளாகம் கட்டப்பட்டு வருகிறது. சிறிலங்கா கடற்படைக்கு போர்க்கப்பல் ஒன்று கொடையாக வழங்கப்படவுள்ளது.
பரஸ்பரம் மூலோபாய நம்பிக்கையை வலுப்படுத்த சீனா விரும்புகிறது.
முக்கியமான நலன்கள் சார்ந்த பிரச்சினைகளின் போது இரண்டு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்ந்து ஆதரவுடன் செயற்படுவதைக் காண சீனா அக்கறை கொண்டுள்ளது.
இரண்டு நாடுகள் மற்றும் இராணுவங்களுக்கு இடையில், நடைமுறை ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக, அணை மற்றும் சாலைத் திட்டத்தின் அபிவிருத்தியைப் பலப்படுத்த சீனா விருப்பம் கொண்டுள்ளது.
ஒரு நல்ல மற்றும் உண்மையான நண்பன் என்ற வகையில், கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக சிறிலங்காவின் சமூக- பொருளாதார அபிவிருத்தி மற்றும் இராணுவம், மற்றும் பாதுகாப்பு கட்டுமானங்களுக்காக சீனா தொடர்ந்து வலுவான ஆதரவை வழங்கியுள்ளது.
சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகள் சோதனையான தருணங்களிலும் பலமாக வளர்ச்சியடைந்துள்ளது.
சிறிலங்காவுடனான இராணுவ உறவுகளை முன்னேற்றுவதற்கு சீனாவின் பாதுகாப்பு ஆலோசகர்கள் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளில் இரண்டு இராணுவங்களும், பயிற்சி, கூட்டுப் பயிற்சி, கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களில் ஆழமான தொடர்பு மற்றும் ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன.” என்று தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்ன, “சிறிலங்காவுக்கான சீனாவின் இராணுவ உதவிகள், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளின் வெற்றியை சுட்டிக்காட்டுகின்றன.
எனினும், சிறிலங்காவில் சீனாவின் இணக்கப்பாடுகளின் நன்மைகளை சிறிலங்கா இன்னமும் அறுவடை செய்யவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், மற்றும் சிறிலங்கா படை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
Post a Comment