Header Ads



மகிந்த அணிக்கு கிடைத்த இறைச்சித் துண்டு, பயங்கரவாதத்துக்கு ஆதரவளிப்பவருடன் பாராளுமன்றில் இருக்க வெட்கப்படுகிறோம்

பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் கருத்துத் தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சருடன் பாராளுமன்றத்தில் இருப்பது குறித்து வெட்கப்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக கட்சித் தலைமை ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கும் அவர்கள், இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை மூடிமறைப்பதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முயற்சிப்பதாகவும் விமர்சித்தனர்.

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்துடன் நாம் இணங்கவில்லை. அவருடைய கருத்தைக் கண்டிப்பதுடன், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேஷான் விதானகே, துஷார இந்துநில் அமரசேகர மற்றும் சமிந்த விஜயசிறி ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.

பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று நடத்திய விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்கள் இந்தக் கருத்தை முன்வைத்தனர். இராஜாங்க அமைச்சருடைய கருத்து மோசமானது. அதனுடன் நாம் இணங்கவில்லை. அவருடன் பாராளுமன்றத்தில் இருப்பதையிட்டு வெட்கம் அடைவதாக துஷார இந்து நில் எம்பி கூறினார்.

அவரை இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்தும், கட்சிப் பதவிகளிலிருந்தும் நீக்கவேண்டும். நாட்டைப் பிளவுபடுத்தும் வகையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக முன்வைத்த கருத்துத் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என கட்சித் தலைமைத்துவத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

அதேநேரம், இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் அரசியல் இலாபம் தேட முயற்சிக்கின்றனர். நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் கட்டுரையால் ஆட்டம் கண்டுபோயிருந்த ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினருக்கு தற்பொழுது இறைச்சித் துண்டு கிடைத்ததுபோல விஜயகலா மகேஸ்வரனின் கருத்து அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட குழுவினர் ஊடகங்களுக்கு நாடகங்களை அரங்கேற்றி தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை மறைப்பதற்கு முயற்சிப்பதாக ஹேஷான் விதானகே எம்.பி குற்றஞ்சாட்டினார்.

விஜயகலா மகேஸ்வரனின் கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற நிலைப்பாட்டிலேயே நாமும் இருக்கின்றோம். இவ்வாறான நிலையில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பாக பிரசன்ன ரணவீர செங்கோலை பறித்துச் செல்ல முயற்சித்து ஊடக கண்காட்சிகளை நடத்துவதற்கு முயற்சிக்கின்றனர். எதிர்க்கட்சியில் இருக்கும்போது இவ்வாறு நடப்பவர்கள் நிர்வாக பலம் கிடைத்தால் எப்படி நடந்து கொள்வார்கள் எனவும் துஷார இந்துநில் எம்.பி கேள்வியெழுப்பினார்.

1 comment:

  1. என்ன தான் நடந்தாலும், அமேரிக்க-மேற்கு நாடுகளை மீறி மகிந்த-கொத்தா ஆட்சியை பிடிப்பது கடினம்.
    அப்படி தான் பிடித்தாலும், திரும்பவும் ஜெனிவா-UN-யுத்த மனித உரிமைகள் அது இது...என அலைய வைத்து ஒரு வழி பண்ணிவிடுவார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.