கிழக்கில் அரச தொழில் வெற்றிடங்களுக்கு, பட்டதாரிகளை நியமனம் செய்ய பேச்சு
கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகளை இருக்கின்ற அரச தொழில் வெற்றிடங்களுக்கு நியமிப்பது சம்பந்தமாக கிழக்கு மாகாண ஆளுனருடன் கலந்துரையாடியுள்ளதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் 8 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள வகுப்பறை கட்டிட அடிக்கல் நடும் விழா இன்று திங்கட்கிழமை பாடசாலை வளாகத்தில் பாடசாலை அதிபர் யாசீர் அரபாத் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் பங்கேற்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதேபோன்று, காத்தான்குடி தாருஸ்ஸலாம் வித்தியாலயத்தில் 6 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இரு மாடி வகுப்பறை கட்டிட அடிக்கல் நடும் நிகழ்வும் இன்று திங்கட்கிழமை பாடசாலை அதிபர் முனீர் அஹமட் தலைமையில் நடைபெற்றது. இதிலும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர்,
“காத்தான்குடி கல்வி கோட்டம் கல்வியில் முன்னேற்றம் காண்பதற்காக நாங்கள் எப்போதும் எம்மால் இயன்ற பங்களிப்புக்களை வழங்கி வருகின்றோம். பாடசாலைகளுக்கு இடையில் ஒற்றுமையுடன் கூடிய புரிந்துணர்வு இருக்க வேண்டும். கல்வித்துறையில் நாங்கள் முன்னேற்றம் காண அது மிக முக்கியம்.
நவீன யுகத்தில் வாழ்கின்ற மாணவர்கள் அதற்கேற்றாற் போல் தமது கல்வித்துறைகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன், புதிய துறைகளை தெரிவு செய்வதன் ஊடாக போட்டி மிகுந்த தொழிற்சந்தையில் முன்னோக்கி செல்ல வேண்டும்.
நாட்டில் பட்டதாரிகள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு அரசாங்க வேலைவாய்ப்புக்கள் இல்லை. அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும் பலருக்கு இன்னும் தீர்வில்லை. அரசாங்கம் நெருக்கடிகளுக்கு மத்தியில் இருப்பதால் அவர்களுக்கு நிரந்தர தீர்வினை வழங்க முடியாதுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் வெளியேறிக்கொண்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தொழில் வழங்கும் வாய்ப்பு – வசதி அரசாங்கத்திடம் இல்லை.
இருப்பினும் பட்டதாரிகள் விடயத்தில் நாங்கள் தொடர்ந்தும் பேசி வருகின்றோம். கிழக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் விடயம் சம்பந்தமாகவும், இருக்கின்ற அரசாங்க தொழில் வெற்றிடங்களுக்கு அவர்களை நியமிப்பது சம்பந்தமாகவும் ஆளுனருடன் கலந்துரையாடியுள்ளேன். – என்றார்.
ஹிஸ்புல்லா முழு இலங்கைக்கும் கிடைத்த மாபெரும் பொக்கிசம். இவர் சொல் வீரர் அல்லர். செயல்வீரர். இவரை தகுந்த முறையில் பயன்படுத்த வேண்டியது முழு முஸ்லீம் உம்மாவினதும் கடமையாகும்.
ReplyDelete