தாய்லாந்து குகையில் சிக்கிய, சிறுவர்கள் வீடு திரும்பினார்கள்
தாய்லாந்தின் தாம் லுவாங் குகைக்குள் வெள்ளத்தின் நடுவே சிக்கியிருந்த 12 சிறுவர்களும் தங்கள் சந்தித்த இன்னல்களையும், முக்குளிப்பு வீரர்கள் தங்களை கண்டறிந்த 'அற்புத தருணம்' குறித்து முதல் முறையாகப் பேசியுள்ளனர்.
ஆங்கிலம் பேசத்தெரிந்த, அந்தக் கால்பந்து குழுவின் 14 வயதாகும் அதுல் சாம் எனும் சிறுவன், பிரிட்டன் முக்குளிப்பு நிபுணர்கள் தங்களைக் கண்டறிந்தபோது தங்களால் 'ஹலோ' மட்டுமே சொல்ல முடிந்தது என்று கூறியுள்ளார்.
அவர்களை மீட்ட தாய்லாந்து கடற்படை குழுவினருடன் சியாங் ராயில் செய்தியாளர்களை சந்தித்த அவர்கள் கால்பந்து சீருடையில் இருந்தனர்.
புதன்கிழமை அன்று மருத்துவமனையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முடிவுக்கு வந்து, அவர்கள் வீடு திரும்பி வருகின்றனர்.
பாறைகளில் வடிந்த நீரை மட்டும் அருந்தி இரண்டு வாரங்களுக்கும் மேலாக அந்தக் குகைக்குள் தங்கியிருந்த அக்குழுவைச் சேர்ந்த ஒரு சிறுவன், "நீர் தூய்மையாக இருந்தது. உணவு எங்களிடம் இல்லை," என்று கூறினார்.
தங்களின் இந்த இன்னல் மிக்க அனுபவத்தில் இருந்து கற்றுக்கொள்வோம் என்று அந்த சிறுவர்களில் சிலர் கூறினார்கள். இனிவரும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பேன் என்றும் எனது வாழ்வை இயன்றவரை முழுமையாக இனி வாழ்வேன் என்று ஒரு சிறுவன் கூறினார்.
அமைதியாகவும் வலிமையாகவும் இருக்க இந்த அனுபவம் கற்றுக்கொடுத்துள்ளது என்று இன்னொரு சிறுவன் தெரிவித்தார்.
இதுதான் அந்த சிறுவர்களின் ஒரே அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு என்று கூறியுள்ள சியாங் ராய் மாகாண ஆளுநர் பிரசோன் பிராஸ்துகான், இனிமேல் அவர்கள் ஊடகங்களிடம் பேச மாட்டார்கள் என்று கூறினார்.
அந்த சிறுவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் முன்கூட்டியே அதிகாரிகளிடம் வழங்கப்பட்டன. அவற்றை ஒரு குழந்தைகளுக்கான உளவியல் நிபுணர் ஒருவர், ஆராய்ந்து தேர்வு செய்தார். அந்த சிறுவர்களுக்கு மன அழுத்தம் எதையும் உண்டாக்காது என்று கருதப்பட்ட அந்த கேள்விகள் மட்டுமே அவர்களிடம் கேட்கப்பட்டன.
அந்த சிறுவர்களை சில காலம் மட்டுமே புத்த துறவிகளாக்கும் திட்டமும் உள்ளது. மோசமான அனுபவங்களுக்கு உள்ளன ஆண்களை சில காலம் துறவிகளாக்கும் வழக்கம் தாய்லாந்தில் உள்ளது.
Post a Comment