முஸ்லிம் சோதரனுக்கு, ஓரு மடல்
-சட்டத்தரணி YLS ஹமீட்
எனதருமை முஸ்லிம் சோதரனே! நீண்டநாட்களாக உனக்கு ஒரு தொடர் மடல் வரைய வேண்டும்; நிறைய விடயங்களை அளவளாவ வேண்டும்; அரசியல் இருட்டில் மீண்டும் தள்ளப்பட்டுள்ள நம் சமூகம் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும். பலரின் உள்ளத்தில் முகிலாய் அடைத்துக்கொண்டும், தூறலாய் சிதறிக்கொண்டும், கோடைமழையாய் அவ்வப்போது உதிர்த்துக்கொண்டும், மாரிமழையாய் தொடராக கொட்டிக்கொண்டும் இருக்கின்ற சமூகத்தின் எதிர்காலம் குறித்த கவலைகள், வேதனைகள் தீர்வை நோக்கித் திருப்பப்பட வேண்டும். இவைகள் தொடர்பாக ஒரு சகோதரன் என்ற முறையில் அந்த சகோதர வாஞ்சையோடு என் உள்ளக்கிடக்கைகளை உன்னுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்; என்ற எனது நீண்டநாள் அவாவுக்கு வடிகானாக இம்மடலை எழுத விழைகிறேன்.
ஒவ்வொரு முஸ்லிமும் தினமும் தன் சமூகம் குறித்து சிந்திப்பதற்கு கடமைப்பட்டுள்ளான். உனக்கிருக்கின்ற சமூகம் குறித்த கவலைதான் எனக்கும் இறக்கின்றது. எனவே நீயும் நானும் நம் உள்ளிக்கிடக்கைகளை பகிர்ந்துகொள்ளாமல், தீர்வுகளை இதையசுத்தியுடன் பேசாமல் தீர்வைக்
காணமுடியுமுடியுமா? தீர்வைத் தருவதற்கு போதுமானவன் அல்லாஹ். ஆனால் அதற்கான முயற்சியை எடுக்கவேண்டியது நமது கடமையல்லவா?
எனவே இறைவனில் தவக்குல் வைத்து நம் கடமையைச் செய்வோம். மிகுதியை அவனிடம் விட்டுவிடுவோம்.
முஸ்லிம் அரசியலில் மாற்றத்திற்கான ஓர் புதிய பயணம் அவசியமா?
—————————————————————
நான் அண்மையில் மேற்படி தலைப்பை ஓர் கேள்வியாக இட்டு ஓர் சிறிய பதிவை இட்டிருந்தேன். அதற்குப் பின்னூட்டம் இட்ட சகோதரர்களில் தொண்ணூறு வீதத்திற்குமதிகமானவர்கள் ‘ மாற்றம் வேண்டும்’ என்ற கருத்தைத் தெரிவித்திருந்தார்கள். இது சமகால முஸ்லிம் அரசியலில் சமூகத்தில் நிலவுகின்ற பாரிய அதிருப்திக்கான ஒரு sample ஆகும். அவர்களுள் சிலர் அந்த மாற்றம் எவ்வகையில் அமையவேண்டும்; என்பதில் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள்.
அவர்களின் அக்கருத்துக்களை முதலில் இங்கு தொகுத்துத் தருகின்றேன்.
மாற்றம் வேண்டும்.
மாற்றம் கட்டாயம் வேண்டும்
மாற்றம் அவசரமாக வேண்டும்
மாற்றம் வேண்டும் ஆனால் பழையவர்கள் மீண்டும் தலைவராக வரக்கூடாது. புதிய தலைமைத்துவத்தின்கீழ் அவர்கள் செயற்படவேண்டும்.
முதலில் பொருத்தமான தலைமைத்துவம் இனம் காணப்படவேண்டும்.
ஒரே தலைமையின்கீழ் மாற்றம் வேண்டும்.
அனைத்துக் கட்சிகளும் உள்ளடங்கிய கூட்டமைப்பு வேண்டும்.
முதலில் சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும்
அனைவரும் முஸ்லிம் காங்கிரசின்கீழ் ஒற்றுமைப்பட வேண்டும்.
புதிய கட்சி ஒன்றைத் தொடங்குவது நன்றல்ல.
மாற்றம் ஒரு போதும் நடக்காது.
சகல கட்சிகளும் இணைந்த முஸ்லிம் கூட்டமைப்பு
—————————————————
இதில் ஆய்வுக்காக முதலாவது மேற்படி தலைப்பை எடுப்போம். இஸ்லாம் ஒற்றுமையை வலியுறுத்துகின்றது. எந்தவொரு முஸ்லிமும் ஒற்றுமைக்கெதிராக பேசமுடியாது. அதேநேரம் யதார்த்தத்தையும் மறந்துவிடமுடியாது.
இத்தலைப்பை ஆய்கின்றபோது பல கேள்விகளுக்கு விடை காணவேண்டும். அவற்றில் முக்கியமானவை
கூட்டமைப்பு என்கின்றபோது எவ்வாறான கூட்டைப்பைப்பற்றிப் பேசுகின்றோம்?
அவ்வாறான கூட்டமைப்பு சாத்தியமா?
இல்லையாயின் ஏன்?
அவ்வாறு இணைந்தாலும் அது எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும்?
அவ்வாறான கூட்டமைப்பினால் நாம் அடைய எதிர்பார்க்கும் இலக்குகள் எவை?
அந்த இலக்குகளை நாம் அடைவதில் இதுவரை இருந்துவருகின்ற தடைகள் என்ன?
அந்தத்தடைகள் ‘ஒற்றுமையின்மை’ என்பது மாத்திரமா? அல்லது அதற்கு அப்பாலும் செல்கின்றதா?
அப்பாலும் செல்லுமாயின் வெறும் ஒற்றுமை மாத்திரம் அவ் இலக்குகளை அடைய உதவிடுமா?
இல்லையெனில் அப்பால் உள்ள காரணிகளை அடையாளம் கண்டுள்ளோமா?
அக்காரணிகளையும் இவ்வொற்றுமை, களையும் என்று நம்புகின்றோமா? எந்த அடிப்படையில்?
இவை எல்லாவற்றிற்குமுன் தமது இலக்குகளை அடையாளம் கண்டிருக்கின்றோமா?
அவை நெடுந்தூர இலக்குகளா? குறுந்தூர இலக்குகளா? இரண்டுமா?
இவ்வாறான பல கேள்விகளுக்கு விடைகாண வேண்டும்.
இவை தொடர்பாக அடுத்த மடலில் உனைத்தொடர்புகொள்கிறேன்.
Post a Comment