ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த போட்டியிட, சட்டத்தில் இடம் உள்ளது - காலம் வரும்வேளை வெளிப்படுத்துவோம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கான சந்தர்ப்பமொன்று சட்டத்தில் உள்ளது. எனினும் அதனை நாம் தற்போது வெளிப்படுத்த மாட்டோம் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை நிறைவேற்றுவது குறித்து பேசப்பட்டு வருககிறது. எனினும் அத்தண்டணையை நிறைவேற்றப்போவதில்லலை. மாறாக அதன்பால் மக்களின் கவனத்தை திசைதிருப்பிவிட்டு அரசியலமைப்பின் இருபாதாவது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளவே அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
மேலும் போதைப்பொருள் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டணை விதிக்கப்பட்டவர்களுக்கு மாத்திரம் மரண தண்டனை நிறைவேற்றுவதாக இருந்தால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். அத்துடன் போதைப்பொருள் வர்த்தக குற்றவாளிகளுக்கு மரண தண்டணை நிறைவேற்றப்படுவதாக இருந்தால் பாரபட்சம் பாராது தண்டணை விதிக்கப்பட்டுள்ள சகலருக்கும் தண்டணை நிறைவேற்றப்பட வேண்டும்.
இந் நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் குறித்து கூட்டு எதிர்க்கட்சி இன்னும் இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை. எவ்வாரெனினும் எப்போதும் எமது தலைவர் மஹிந்த ராஜபக்ஷதான்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு சட்டத்தில் இடமிருக்கிறது. அதனை நாம் தற்போது வெளிப்படுத்த மாட்டோம். காலம் வரும்வேளை வெளிப்படுத்துவோம் என்றார்.
Post a Comment