ஹிட்லர், மீண்டும் வந்து விட்டார்..!!
-Kalai Marx-
Er ist wieder da: ஹிட்லர் உயிர்த்தெழுந்து, மீண்டும் ஜெர்மனியில் தோன்றினால் என்ன நடக்கும்? இதனை மையக்கருவாகக் கொண்டு, ஹிட்லர் பற்றிய நகைச்சுவைப் படம் ஒன்று ஜெர்மனியில் வெளியாகியது. நாற்பதுகளில் சார்லி சாப்ளின் நடித்த The Great Dictator பாணியில் இந்தக் காமெடிப் படம் எடுக்கப் பட்டுள்ளது.
"Er ist wieder da" (அவர் மீண்டும் வந்து விட்டார்) என்ற பெயரில் எடுக்கப் பட்ட ஜெர்மன் மொழிப் படம் ஜெர்மனியில் அது ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியதாகத் தகவல். இது ஒரு காமெடிப் படமாக இருந்தாலும், சிந்திக்கவும் தூண்டுகின்றது.
கற்பனையாக இருந்தாலும், ஹிட்லர் பெர்லின் நகரில் உயிர்த்தெழுந்து வந்து நடமாடுகிறார் என்று வைத்துக் கொள்வோம். இன்றைய ஜெர்மன் மக்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுவார்கள்? பொது இடங்களில் நடக்கும் சில காட்சிகள், கமெராவை ஒளித்து வைத்து படமாக்கப் பட்டுள்ளன.
எதிர்பார்த்த படியே, அந்த "உண்மையான" ஹிட்லரை யாருமே சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. எல்லோரும் அவர் ஒரு நடிகர் என்று நம்புகிறார்கள். அவரது பேச்சு, நடை, உடை, பாவனை எல்லாம், பார்ப்போருக்கு சிரிப்பை உண்டாக்குகின்றன.
ஜெர்மனியில், ஹிட்லரை தலைவராகக் கொண்டாடும், NPD போன்ற நவ நாஸிக் கட்சி உறுப்பினர்கள் கூட, அவரை ஒரு காமெடியனாகத் தான் பார்க்கிறார்கள். இறுதிக் கட்டத்தில், இரண்டு நவ நாஸி இளைஞர்கள் ஹிட்லரை அடித்து நொறுக்கி மருத்துவமனைக்கு அனுப்புவதாக காட்சி ஒன்றுள்ளது. (உண்மையான ஹிட்லருக்கும் இது தான் நடக்கும்?)
பெர்லினில் உயிர்த்தெழுந்த ஹிட்லரை, முதன் முதலாக ஒரு வேலையிழந்த ஆவணப் படப் பிடிப்பாளர் கண்டுபிடிக்கிறார். ஹிட்லரை வைத்து படமெடுத்து, மீண்டும் அந்த தொலைக்காட்சி நிறுவனத்தில் வேலைக்கு சேர்வது அவரது நோக்கம்.
எதிர்பார்த்த படியே, அவரை வேலையை விட்டு துரத்திய உள்ளூர் தொலைக்காட்சி நிறுவன முகாமையாளர்களை ஹிட்லர் கவருகின்றார். தொலைக்காட்சி நிலையத்தில், ஹிட்லரை வைத்து நிகழ்ச்சிகளை தயாரிக்கிறார்கள். மக்கள் அந்த நிகழ்ச்சிகளை விரும்பிப் பார்க்கிறார்கள். ஹிட்லர் பேசுவதற்கெல்லாம் சிரிக்கிறார்கள்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஹிட்லர் நாற்பதுகளில் பேசிய அதே பேச்சுக்கள், இன்றைய மக்களுக்கு சிரிப்பை உண்டாக்குகின்றன. ஆனால், முப்பதுகளில், ஹிட்லர் பதவிக்கு வருவதற்கு முன்னரும், அவர் சொன்னதைக் கேட்டு மக்கள் சிரித்தார்கள் என்ற உண்மையை திரைப்படம் வலியுறுத்துகின்றது.
தற்செயலாக, தொலைக்காட்சியில் வேலை செய்யும் யூதப் பெண் செயலாளரின் வீட்டுக்கு ஹிட்லர் செல்ல நேரிடுகின்றது. அப்போது ஹோலோகோஸ்ட் அழிவில் இருந்து உயிர்தப்பிய வயதான தாய், இது உண்மையான ஹிட்லர் என்று நினைத்து பதறுகின்றார்.
"இவர் ஒரு நடிகர்... அரசியல் காமெடி நிகழ்ச்சியில் நடிக்கிறார்..." என்று மகள் விளக்கம் கொடுக்கிறார். அதற்கு அந்த வயோதிப மாது கூறுகின்றார்: "இந்த மக்கள் இப்போது சிரிப்பதைப் போன்று தான், அப்போதும் ஹிட்லர் சொன்னதெற்கெல்லாம் சிரித்தார்கள். அன்று கூட யாரும் அவரை சீரியஸாக நினைக்கவில்லை."
இதற்கிடையில், ஹிட்லரை கண்டுபிடித்த ஆவணப் படப் பிடிப்பாளர், அது என்ன இடம் என்று ஆராய்கிறார். இரண்டாம் உலகப்போர் முடிவில், உண்மையான ஹிட்லர் மறைந்திருந்த பங்கர் என்பதை அறிந்து கொள்கிறார். உடனே மீண்டும் உயிர்த்தெழுந்த ஹிட்லரை பிடிப்பதற்கு ஓடுகிறார். மருத்துவமனையில் அட்டகாசம் செய்யும் அவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று பிடித்து அடிக்கிறார்கள்.
இறுதிக் கட்டத்தில், ஆவணப் படத் தயாரிப்பாளர், ஹிட்லரை மொட்டை மாடிக்கு கூட்டிச் சென்று சுட்டுக் கொல்வதை போன்று காட்சி வருகின்றது. அப்போது அங்கே நடக்கும் உரையாடல் மக்களை சித்திக்கத் தூண்டும் வகையில் உள்ளன.
- "நீ ஒரு அரக்கன்... உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன்..."
- "அப்படியானால் என்னை தேர்தலில் வெற்றி பெற செய்த மக்களும் அரக்கர்கள் தான். ஒரு ஹிட்லரை கொன்று விடலாம். உன்னால் தேர்தல்களை நடக்க விடாமல் தடை செய்ய முடியுமா? அன்றிருந்த மக்களுக்கு என்னைத் தேவைப் பட்டது. அதனால் தேர்ந்தெடுத்தார்கள். எனக்கு ஓட்டுப் போட்ட மக்களின் மனதில், எனது கருத்துக்கள் ஏற்கனவே இருந்துள்ளன. அவர்கள் தங்களில் ஒருவனாக என்னைக் கண்டார்கள்."
இவ்வாறு பேசி விட்டு சூடு வாங்கி விழுந்த ஹிட்லர் மீண்டும் அங்கே தோன்றுகிறார். கமெரா நிகழ்கால காட்சிகளை காண்பிக்கின்றது. ஜெர்மனியில் பல இடங்களில் நவ நாஸி கட்சிகள், மற்றும் PEGIDA போன்ற வெகுஜன அமைப்புகளும் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள் காட்டப் படுகின்றன. அவை யாவும் இஸ்லாமியர்கள், வெளிநாட்டுக் குடியேறிகளுக்கு எதிராக நடக்கின்றன. அத்துடன் படம் முடிகின்றது.
இந்தத் திரைப்படம் உணர்த்தும் படிப்பினைகள்:
- ஹிட்லர் என்ற தனி மனிதனின் மரணத்துடன் பிரச்சினைகள் முடிந்து விடவில்லை.
- அன்றைய ஹிட்லர் இன்றைக்கு தேவையில்லை. ஆயினும், இனவாத அரசியல் அன்றும் இன்றும் ஒரே தன்மை கொண்டதாக இருக்கின்றது.
- அன்றைய காலத்திலும் ஹிட்லரை யாரும் கணக்கெடுக்கவில்லை. பலர் அவரை ஒரு கோமாளியாக கருதினார்கள். அதே மாதிரி, இன்றைய இனவாத அரசியல்வாதிகளை பற்றியும் நினைக்கிறார்கள். வரப்போகும் அபாயத்தை முன்கூட்டியே அறியும் தன்மை யாரிடமும் இல்லை.
- ஹிட்லரின் அழிவுடன் நாசிஸம் முடிவுக்கு வந்து விடவில்லை. அது இன்று அகதி எதிர்ப்பு, இஸ்லாமிய வெறுப்பு என்ற போர்வையின் கீழ் தொடர்கின்றது.
Post a Comment