இலங்கையின் முதலாவது, பள்ளிவாசல் நூதனசாலையாகிறது - மாற்று மதத்தினரும் தினமும் பார்வையிடலாம்
பேருவளையில் அமைந்துள்ள இலங்கையின் முதலாவது பள்ளிவாசலான மஸ்ஜிதுல் அப்ராரை முஸ்லிம் அல்லாத ஏனைய சமூகத்தினர் தினமும் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அப்ரார் பள்ளிவாசலில் முஸ்லிம்களின் சமயம், கலை, கலாசாரம் என்பவற்றையும் பிரதிபலிக்கும் வகையிலான நூதனசாலையொன்றும் நிறுவப்படவுள்ளது.
முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்குமிடையில் நல்லிணக்கத்தை பலப்படுத்தல், தேசிய ஒருமைப்பாட்டுக்கு வழி சமைத்தல் மற்றும் ஏனைய சமூகங்கள் இஸ்லாமிய கலை, கலாசாரம் மற்றும் வரலாறுகளில் தெளிவு பெறுதல் என்பனவற்றை இலக்காகக் கொண்டே மஸ்ஜிதுல் அப்ராரை ஏனைய சமூகத்தினர் பார்வையிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன என முஸ்லிம் சமய விவகார அமைச்சின் பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷ்ரப் தெரிவித்தார்.
இது தொடர்பான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 31ஆம் திகதி அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எம்.ஏ.ஹலீம் தலைமையில் அப்ரார் பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் பள்ளிவாசல் நிர்வாகிகள், பிரதேசத்தின் அரசியல்வாதிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரிகள் என்போர் கலந்து கொள்ளவுள்ளனர்.
பேருவளையில் அமைந்துள்ள முதலாவது பள்ளிவாசலை முஸ்லிம் அல்லாத ஏனைய சமூகத்தினர் பார்வையிடுவதற்காக திறந்துவிடும் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் செப்டெம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் ஏற்பாடு செய்யப்படுமெனவும் நிகழ்வில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்தார்.
Post a Comment