மௌலவி ஆசிரியர் நியமனத்தில், பந்தாடப்படும் முஸ்லிம் சமூகம் - யானையின் வாக்குறுதி காற்றில் பறப்பு
-நவமணி பத்திரிகை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்-
நல்லாட்சி அரசு பதவிக்கு வருவதற்கு முன் ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்ட அதன் கொள்கைப் பிரகடனத்தில் பாடசாலைகளில் நிலவும் மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது.
ஐ.தே.க ஆட்சிபீடமேறி நான்கு வருடங்களை நெருங்குகின்ற நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாதிருப்பது முஸ்லிம் சமூகத்தைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
நாட்டிலுள்ள அரச பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மூலம் இஸ்லாம் மற்றும் அறபுப் பாடங்களைப் போதிப்பதற்கு 600க்கும் மேற்பட்ட ஆசிரிய வெற்றிடங்கள் காணப்படுகின்றன.
நீண்ட நாட்களாக வழங்கப்பட்டு வந்த மௌலவி ஆசிரியர் நியமனம் சிறிது காலம் வழங்கப்படாதிருந்து முஸ்லிம் சமூகம் வழங்கிய அழுத்தத்தையடுத்து 2005இல் 650 மௌலவி ஆசிரியர் நியமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்திருந்த போதும் சுமார் 200 பேருக்கே நியமனம் வழங்கப்பட்டது. அதன் பின்பு மகிந்த அரசும் அதில் அக்கறை காட்டாதிருந்தது. இந்தப் பின்னணியிலே ஐ.தே.க அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மௌலவி ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்தது.
மௌலவி ஆசிரியர் நியமனங்களைத் தனியாக மேற்கொள்ளாது 5000 சமய பாடசாலை ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்தது. முஸ்லிம்கள் விடுத்த வேண்டுகோளினால் முஸ்லிம்களுக்கு மட்டும் வழங்காமல் பௌத்த, இந்து, கத்தோலிக்க சமய ஆசிரியர்களை நியமிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்தது. இத் தீர்மானம் எடுக்கப்பட்டு ஒரு வருடம் கழிந்தும் இது தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்கு கல்வி அமைச்சு தவறியுள்ளது.
இப்படியிருக்க கல்வி அமைச்சரிடம் தபால் தபால் சேவைகள் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் அண்மையில் கல்வி அமைச்சரிடம் மௌலவி ஆசிரியர் நியமனங்களை துரிதப்படுத்துமாறு கேட்டபோது இது தொடர்பாக பிரதமரிடம் கேட்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டு வெலிமடையில் நடைபெற்ற தேசிய மீலாத் விழாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விரைவில் மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதன் பிறகு பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கல்வி அமைச்சின் கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில் பேசிய போது அமைச்சின் செயலாளர் விரைவில் விண்ணப்பங்கள் கோரப்படும் எனத் தெரிவித்திருந்தார். அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டுத் தூதுக் குழு ஒன்று கல்வி அமைச்சின் செயலாளரைச் சந்தித்தபோது தமிழ் மொழி மூலம் மட்டுமன்றி சிங்கள மொழி மூலமும் மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் விண்ணப்பம் கோரப்படும் என தெரிவித்திருந்தார்.
இதேநேரம் புதிதாக கல்வி அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராக நியமிக்கப்பட்ட இம்ரான் மஹ்ரூப் மௌலவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பிக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.
கல்வி அமைச்சுக்குள்ளிருந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகக் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். எமது அவதானப்படி முஸ்லிம் சமூகம் இந்த விடயத்தில் பந்தாடப்படுகிறது என்றே கூற வேண்டியுள்ளது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இந்த விடயத்தில் தலையிட்டு வழங்கப்பட்ட வாக்குறுதியை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும்.
Post a Comment