Header Ads



மோடியின் காட்டுமிராண்டி இந்தியாவில், பசுக் காவலர்களால் கொலைசெய்யப்படும் அப்பாவி முஸ்லிம்கள்

ராஜஸ்தான் மாநிலம், அல்வாரில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் பசுக் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டமை குறித்து கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, "பிரதமர் மோடியின் காட்டுமிராண்டித்தனமான புதிய இந்தியா இதுதானா" என்று ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் அல்வார் அருகே உள்ள ராம்கர் என்ற கிராமத்தில் சில தினங்களுக்கு முன்னர் இரண்டு பசு மாடுகளுடன் வந்த இளைஞர்கள் இருவரை ஒரு கும்பல் வழிமறித்துள்ளது. பசு மாடுகளைக் கடத்திச் செல்வதாக கூறி, அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் உருட்டுக்கட்டை உள்ளிட்டவற்றால் இருவரையும் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இதில் ஒருவர் அந்தக் கும்பலிடம் இருந்து தப்பியோடினார். இதையடுத்து மற்றொரு இளைஞரான ரக்பர் கானை அந்தக் கும்பல் கடுமையாகத் தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இதற்கிடையே கும்பலால் தாக்குதலுக்கு ஆளான இரு முஸ்லிம் இளைஞர்களும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில், அவர்களைச் சிகிச்சைக்காக மருத்துவனையில் சேர்க்க பொலிஸார் தங்கள் வந்திருந்த வாகனத்தில் கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்கு இருவரையும் கொண்டு செல்வதற்கு முன்பாக, தனியாக ஒரு மினிவானைப் பிடித்து இரு பசுமாடுகளையும், 10 கி.மீ தொலைவில் உள்ள காப்பகத்தில் சேர்த்து விட்டு பொலிஸார் திரும்பியுள்ளனர்.

அதுவரை காயத்துடனும், வலியுடன் இருவரும் புலம்பிக் கொண்டிருந்தனர் என்று நேரில் பார்த்த மக்கள் தெரிவித்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

மேலும், உயிருக்குப் போராடிய இரு இளைஞர்களையும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் முன்னர், பசுமாடுகளைக் கடத்தியது ஏன் எனக் கேட்டு இருவரையும் பொலிஸார் தாக்கி அதன் பின்னர் 4 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

உடனடியாக மருத்துவமனைக்குச் செல்லாமல், வழியில் ஒரு ஹோட்டலில் நிறுத்தி பொலிஸார் தேநீர் அருந்தி விட்டு அதன் பின்னர் இரு இளைஞர்களையும் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இரு இளைஞர்களையும் பரிசோதித்த மருத்துவர்கள், ரக்பர் கான் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

அன்றைய தினம் நள்ளிரவு 1.20 மணிக்கு பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவர்கள் அதிகாலை 4.30 மணிக்குத்தான் 4 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனையில் இரு இளைஞர்களையும் அனுமதித்துள்ளனர் என்று முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆல்வாரில் வன்முறைக் கும்பலால் தாக்கப்பட்ட ரக்பர் கானை 6 கி.மீ தொலைவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க பொலிஸார் 3 மணிநேரம் எடுத்துக் கொண்டுள்ளனர். ரக்பர் கானை தாமதமாக மருத்துவமனைகுக்கு கொண்டு சென்றதால், அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஏன் இந்தத் தாமதம்? பொலிஸார் தங்கள் வாகனத்தில் காயமடைந்து உயிருக்குப் போராடிய ரக்பர் கானை வைத்துக் கொண்டே ஹோட்டலில் தேநீர் குடித்துள்ளனர். இந்தத் தாமதத்தால்தான் அவர் உயிரிழந்துள்ளார்.

இதுதான் மோடியின் காட்டுமிராண்டித்தனமான புதிய இந்தியா. இந்த புதிய இந்தியாவில், மனிதநேயம் வெறுப்புணர்ச்சியால் அகற்றப்பட்டு விட்டது. மக்கள் நசுக்கப்பட்டுக் கொல்லப்படுகின்றனர்.

இவ்வாறு ராகுல் காந்தி கடும் தொனியில் பதிவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.