தூக்கு தண்டனை நடைமுறைபடுத்தினாலே எதிர்காலத்தில் மாணவர்களை பாதுகாக்கமுடியும்
இலங்கையில் இருக்கின்ற பாடசாலை மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தூக்கு தண்டனையை நடைமுறைபடுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
வலப்பனை ஸ்ரீ சுமங்கல தேசிய பாடசாலையில் கல்வி அமைச்சின் மூலமாக நிர்மாணிக்கப்பட்ட தமிழ் கற்கை நெறிக்கான கட்டிட திறப்பு விழாவும் மாணவர்களின் கற்றல் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் நேற்று (17) நடைபெற்றது.
இதன்போது உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், இலங்கையில் தூக்கு தண்டனை சட்டத்தை அமுல்படுத்துவதா? இல்லையா? என்ற கேள்வி இப்பொழுது அனைவரிடம் ஒரு முக்கிய விடயமாக மாறியிருக்கின்றது.
என்னைப் பொறுத்த வரையில் கல்வி இராஜாங்க அமைச்சர் என்ற நிலைப்பாட்டில் இருந்து பார்க்கின்ற பொழுது எதிர்கால மாணவ சமுதாயத்தை பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாக இருந்தால் கட்டாயமாக அந்த சட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும்.
இன்று பாடசாலை மாணவர்களை குறிவைத்தே போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறிப்பாக பாடசாலைகளுக்கு அருகில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அநேகமான பாடசாலைகளின் அருகில் தேடுதல் நடத்திய பொழுது பொலிஸார் பலரை கைது செய்திருக்கின்றார்கள். மாணவர்களும் இந்த செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றமை தெரியவந்துள்ளது. இது மிகவும் கவலைக்குறிய ஒரு விடயமாகும்.
பெற்றோர்கள் பல எதிர்பார்ப்புகளுடன் தங்களுடைய பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புகின்றார்கள். அவர்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டுமாக இருந்தால் இந்த சட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும்.
இன்று இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. ஒரு சில சம்பவங்கள் மாத்திரமே வெளியில் வருகின்றது. ஊடகங்களில் வெளிவருகின்றது. பல சம்பவங்கள் வெளிவருவதில்லை. அதற்கு காரணம் பெற்றோர்கள் வெளியில் சொல்ல முடியாமல் இருக்கின்றார்கள். அவர்கள் கல்வி அமைச்சையும் இந்த அரசாங்கத்தையுமே நம்பியிருக்கின்றார்கள்.
எனவே நாங்கள் சரியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். எங்களுடைய நாட்டின் சட்டதிட்டங்களுக்கு பொது மக்கள் அஞ்சுவதில்லை. அதற்கு மதிப்பளிப்பதில்லை. எனவே மக்களை கட்டுப்பாடாக வைத்திருக்க வேண்டுமானால் நிச்சயமாக சட்டங்கள் மிகவும் இறுக்கமாக இருக்க வேண்டும்.
மேலும் இந்த சட்டத்தை நடைமுறைபடுத்துகின்ற பொழுது யாருக்கும் உடனடியாக மரண தண்டனை வழங்க முடியாது. அதனை பல முறை நீதிமன்றத்தில் விவாதம் செய்து அதில் குற்றவாளிகளாக இனம் காணப்படுகின்றவர்களையே இந்த தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
எனவே நிரபராதிகள் தண்டிக்கப்படமாட்டார்கள். குற்றம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயமாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.
இந்த சட்டத்தை நடைமுறைபடுத்தினால் மாத்திரமே எங்களுடைய எதிர்கால மாணவர்களை பாதுகாத்துக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் ஆண்டவனால் கூட எங்களுடைய மாணவர்களை காப்பாற்ற முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment