சுதந்திரக்கட்சி செயலாளராக தயாசிறி..? மைத்திரியின் வீட்டில் பிரத்தியேகச் சந்திப்பு
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சரும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்படவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி சுதந்திரகட்சியின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் குறித்த தினமன்று இது தொடர்பான தீர்க்கமான அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
முன்னதாக சுதந்திரக் கட்சியின் தற்காலிக பொதுச்செயலாளராக செயற்பட்டு வரும் பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸவுக்கும் தயாசிறி ஜெயசேகரவுக்கும் இடையில் பிரத்தியேக சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது பொதுச்செயலாளர் பதவி உட்பட கட்சியின் எதிர்காலச் செயற்பாடுகள் குறித்த பேச்சுக்கள் சுமுகமாக இடம்பெற்றுள்ளதாக அறியமுடிகின்றது.
இதேவேளை இன்று காலையில் பொலநறுவையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் நடைபெற்ற பிறிதொரு கலந்துரையடலிலும் தயாசிறி பங்கேற்றுள்ளார்.
இந் நிலையில், தயாசிறியிடம் மேற்குறித்த விடயம் சம்பந்தமாக வினவியபோது,
"ஜனாதிபதியை சந்தித்துள்ளேன். பொதுச்செயலாளர் விடயம் உள்ளிட்ட கட்சி விடயங்கள் தொடர்பில் பேசவில்லை. பிறிதொரு கலந்துரையாடலே இடம்பெற்றது. எவ்வாறாயினும் சுதந்திரக் கட்சியை கட்டியெழுப்புவதற்காக ,செயற்படுவதற்காக தயாராகவே உள்ளேன். பொதுச்செயலாளர் பதவியை வழங்கினால் அதனை ஏற்றுக் கொள்வதற்கு தயாராகவே இருக்கின்றேன். அமைச்சுப்பதவி குறித்து பேச்சுக்கள் எவையும் நடைபெறவில்லை. தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப்பதவியை ஏற்கும் எண்ணமும் எனக்கு இல்லை." என்றார்.
1994ஆம் ஆண்டு பல்கலைக்கழக மாணவர் மன்றத்தின் ஊடாக அரசியலுக்குள் பிரவேசித்த தயாசிறி ஜெயசேகர சுதந்திரக் கட்சியின் இளைஞர் சம்மேளத்தின் செயலாளராக செயற்பட்டுள்ளதோடு 1997ஆம் ஆண்டு குருநாகலில் பிரதேச சபை உறுப்பினராக அதிக வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் 'செரசமலங்கா' திட்டத்தின் ஊடாக கட்சிக்கு 20இலட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை இணைப்பதிலும் அதிகளவு பங்காற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தனது இலக்ைக அடைந்து கொண்டார்.
ReplyDelete