'கிருஷ்ணா, போதைப்பொருள் வியாபாரி’
நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார, சுட்டுக்கொல்லப்பட்ட மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா, போதைப்பொருள் வியாபாரி என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், “நாட்டில் இடம்பெற்றுவரும் அநேகமான குற்றச்செயல்களுக்குப் பின்னணிக் காரணியாக குடும்பப் பிரச்சினையே அமைந்துள்ளது. எனவே, தனிப்பட்ட குடும்ப விவகாரங்களில் பொலிஸார் தலையீடு செய்வது கடினமானதாகும்.
“பாடகியொருவர் கத்திரியால் குத்தி அண்மையில் கொலை செய்யப்பட்ட சம்பவமும் அவ்வாறான ஒன்றுதான். அதனைத் தொடர்ந்து கொழும்பு - ஜம்பட்டா வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் இரு அப்பாவிகள் உயிரிழந்துள்ளனர்.
“குறித்த இடத்திலேயே இடம்பெற்ற மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் உயிரிழந்த கொழும்பு மாநகரசபை உறுப்பினர் போதைப்பொருள் வியாபாரியாவார். அவருக்கு எதிராக “கஞ்சா” போதைப்பொருளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் இரண்டு வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன” என்றார்.
“தற்போது பாதுகாப்பு தரப்புகளின் முயற்சியால் போதைப்பொருள் வியாபாரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனால் தற்போது போதைப்பொருள் விலையேறியுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது“ என்றார்.
“எவ்வாறாயினும், போதைப்பொருள் வியாபாரம் முற்றாக ஒழிக்கப்படவில்லை. சிறைச்சாலைகளுக்குள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பாதாள குழு உறுப்பினர்களால் போதைப்பொருள் வியாபாரம் வழிநடத்திச் செல்லப்படுகின்றது” என்றார்.
“எனவே, மேற்படி செயற்பாடுகளைத் தடுக்கும் நோக்கில் இனிவரும் நாள்களில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் சிறைச்சாலைக்குள் சென்று சோதனையிடுவதற்கான சட்டதிருத்திருத்தங்களை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
'குடு' கிருஷ்ணா, முகுந்தா, முராரே!
ReplyDeleteதியாகராஜ பாகவதரின் பாடல் நினைவிற்கு வருகிறது.