யாழில் மீன்களுக்கு தட்டுப்பாடு, விலைகளும் அதிகம்
யாழ். குடாநாட்டில் கடந்த சில தினங்களாக சீரற்ற காலநிலை அமாவாசை காரணமாக மீன்களின் பிடிபாடு குறைவடைந்து காணப்படுவதால் மீன் வகைகளின் விலைகள் சடுதியாக உயர்வடைந்துள்ளதுடன் மீன் வகைகளுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வடமராட்சியில் தொண்டைமானாறு முதல் சுண்டிக்குளம் பகுதி வரையுள்ள கடற்பரப்பு தீவகப் பகுதிக் கடற்பரப்பு உள்ளிட்ட கடற்பிராந்தியத்தில் மீன்களின் பிடிபாடு பெருமளவில் குறைவடைந்துள்ளது.
இதற்கு காரணம் சடுதியாக ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் அமாவாசை காரணமாக நிலவு வெளிச்சம் போன்றன மீன்களின் பிடிபாடு வெகுவாகக் குறைவடைந்தமைக்கான காரணமென மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
கடும் காற்றுக் காரணமாகக் கடல் கொந்தளிப்பு அதிகரித்துக் காணப்படுகின்றமை கடும் வரட்சியுடனான காலநிலை நிலவுகின்றமை ஆகிய காரணங்களே மீன்களின் விலை அதிகரிப்பிற்குக் காரணமெனவும் வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஒரு கிலோ விளைமீன் 700 ரூபாவாகவும் பாரை மீன் ஒரு கிலோ 1000 ரூபாவாகவும் இறால் ஒரு கிலோ 800 ரூபாவாகவும் கணவாய் ஒரு கிலோ 750 ஆகவும் சூடை மீன் ஒரு கிலோ 600 ரூபாவாகவும் சுறா மீன் ஒரு கிலோ 1200 ரூபாயாகவும் வளையா மீன் 900 ரூபா ஆகவும் நண்டு ஒரு கிலோ 650 ரூபா ஆகவும் தற்போது மீனவர்களால் கடற்பரப்புக்களை அண்டிய பகுதிகளில் வைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் இதர சில்லறை மீன் வகைகளின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
யாழ்.நகரை அண்டிய குருநகர் நாவாந்துறை பாசையூர் பண்ணை காக்கைதீவு கல்வியன்காடு குளப்பிட்டி பகுதிகளிலுள்ள மீன் சந்தைகளிலும் சாவகச்சேரி அச்சுவேலி பருத்தித்துறை திருநெல்வேலி சுன்னாகம் உள்ளிட்ட மீன் சந்தைகளிலும் மீன் வரத்துக்கள் மிகவும் குறைவடைந்துள்ளமையால் மீன்களின் விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
கடற்கரையை அண்டிய பகுதிகளில் விற்கப்படும் விலைகளிலும் பார்க்க மூன்று மடங்கு அதிகரிப்பில் மேற்படி சந்தைகளில் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்
எங்க பகுதியில் எப்பவும் விலை அதிகமாக இருக்கும்
ReplyDelete