இலங்கை பிக்குகள் சமாதானத்துக்கு, எதிரானவர்கள் என்பதே உலக நிலைப்பாடு - சந்திரிக்கா
இலங்கையிலுள்ள பௌத்த தேரர்கள் சமாதானத்துக்கு எதிரானவர்கள் என்பதே உலகளவில் உள்ள நிலைப்பாடாகும் என முன்னாள் ஜனாதிபதியும், தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கத்திற்கான செயலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
தாம் பயணித்துள்ள பல்வேறு நாடுகளில் இது தொடர்பில் தம்மிடமே அங்குள்ள தலைவர்கள் விசாரித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள பெருமளவிலான பௌத்த துறவிகள் நல்லவர்கள். சமாதானத்தை விரும்புகிறவர்கள். எனினும் சிலர் அடிப்படைவாதிகள். ஒரு பௌத்த தேரர் எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் அடிப்படைவாதியாக இருக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற சர்வமதப் பேரவை மாநாட்டில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி," சர்வமத நல்லிணக்கத்தின் மூலம் இனங்களுக்கிடையிலும் சமூகங்களுக்கிடையிலும் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியும். நல்லிணக்கம், சமாதானம் என்பது நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்திக்கு மிக முக்கியமானதாகும்.
எமது நாட்டின் வடக்கு, கிழக்கில் மூன்று தசாப்த காலம் ஓர் இனம் தமது அடையாளத்தை உறுதிப்படுத்திக்கொள்ள யுத்தம் செய்தது. வடக்கு, கிழக்கில் யுத்தம் அம்மக்களின் உரிமை தனித்துவம், தேசிய அடையாளம் என்பதை உறுதிப்படுத்துவதற்காகவே இடம்பெற்றது.
இந்தப் போராட்டம் முதலில் சமாதானமாக ஆரம்பித்து பின்னர் யுத்தமாக உருவெடுத்து நாட்டின் பாரிய அழிவுக்கு வழிவகுத்தது. அந்த வீழ்ச்சியிலிருந்து இன்னும் மீள முடியாதுள்ளது. அதற்குக் காரணம் கடந்த கால அரசாங்கம் ஊழல் மோசடிகளுடன் செயற்பட்டமையே.
இந்த வகையில் இனங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் உள்ள முரண்பாடுகள் இல்லாமற் போவதற்கு இன்னும் பல வருடங்கள் எடுக்கலாம். எந்த இனத்துக்கும் தமது மொழி, தமது மதம், தமக்கான சுதந்திரம், தனித்துவம் என்பது மிக அவசியமானதாகும்.
சமூகம், நாடு என்ற வகையில் பல்வகைத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதனை கௌரவிக்க வேண்டும். எச்சந்தர்ப்பத்திலும் அதற்குப் பாதிப்பு ஏற்படக்கூடாது.
இலங்கையில் சிங்களவரோ, தமிழரோ, முஸ்லிமோ அனைவருக்கும் இது பொதுவானது.
தமிழ் மக்களின் தனித்துவத்தை ஏற்றுக்கொள்வதால் சிங்கள பௌத்த மக்களுக்கு எந்தக்குறைபாடும் ஏற்படப் போவதில்லை. மாறாக பெளத்தமே பெருமை பெறும். ஜுலை கலவரத்தின் போது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பௌத்த தேரர் ஒருவர் ஒரு மனிதரை பெற்றோல் ஊற்றி தீவைத்ததை நான் கண்டேன்.
நாரஹேன்பிட்டி சந்தியால் நான் சென்று கொண்டிருக்கும் போது தமிழர் ஒருவரை தீமூட்டிக் கொன்றதையும் நான் கண்டேன். சற்று தாமதித்திருந்தால் எனக்கும் ஏதாவது நடந்திருக்கும். பிற இனத்தினரை அன்பு செய்து அவர்களை ஏற்றுக்கொண்டு வாழ முடியுமானால் அதுவே நாட்டுக்கான பெரும் பலம்.
இதனை எத்தனையோ உரைகள் மூலம் வழங்கினாலும் மிகச் சிலரே இதனை ஏற்றுக்கொள்கின்றனர்.
பெருமளவிலானோர் அரச துறை தொழில்வாய்ப்பையே எதிர்பார்க்கின்றனர். ஏனென்றால், அங்குதான் நேரத்தைக் களவாடலாம். தமது இஷ்டம் போல் வேலை செய்யலாம். பிறரைப் பழிவாங்கலாம் என்பதாலேயே அப்படி எதிர்பார்க்கின்றனர். 12 பெரும்பான்மை இனத்தவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கிவிட்டு அதில் ஒரு சிறுபான்மை இனத்தவருக்கு தொழில் வழங்கினாலும் முரண்பட்டு கிளர்ந்தெழுகின்றனர். எனது காலத்தில் கூட இது நடந்தது.
தற்போது மூன்று அமைச்சுக்கள் ஒன்றிணைந்து இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்காக செயற்பட்டு வருகின்றன.
இந்த அமைச்சை எனது காலத்திலேயே உருவாக்கினேன்.
அரசியலமைப்பில் தமிழ் மொழியும் அரச கருமமொழியாக உள்ளது. எனினும் தமிழர் ஒருவர் தமிழில் கடிதம் அனுப்பினால் அதற்குச் சிங்களத்திலேயே பதில் வருகிறது. இது போன்ற நடவடிக்கைகளாலேயே முரண்பாடு தோன்றுகின்றது.
எல்லா அரச நிறுவனங்களிலும் தமிழ் தெரிந்தவர்கள் நியமிக்கப்பட வேண்டும். தற்போது இயங்கும் 950க்கும் மேற்பட்ட அரச நிறுவனங்களில் வெறும் 15 தமிழ் பேசும் அதிகாரிகளே உள்ளனர்.
அரச நிறுவனங்களில் தமிழ் மொழி தெரிந்தவர் எத்தனை பேர் உள்ளனர் என நான் பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரிடம் கோரியிருந்தேன்.
அதற்கு இதுவரை எனக்குப் பதில் வரவில்லை. சில நிறுவனங்களில் தமிழில் விளம்பரங்களைத் தயாரித்து பத்திரிகைகளில் வெளியிடுவதற்கு ஒரு தமிழ் மொழி தெரிந்தவர் கிடையாது. 83 ஜுலை கலவரத்தின் பின் 84இல் மேற்கொண்ட குடிசன மதிப்பீட்டில் 12 இலட்சம் தமிழர்கள் இடம்பெற்றிருந்தனர்.
அவர்களில் ஏழரை இலட்சம் பேர் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து விட்டனர்.
இதில் சிறந்த கல்விமான்களும், டாக்டர்களும், என்ஜினியர்களும் உள்ளடங்குகின்றனர். அவ்வாறு சென்ற ஒருவரே அமெரிக்க நாஸா நிறுவனத்தின் பெரும் விஞ்ஞானியாக உள்ளார்.
சிறுபான்மை மக்களின் உரிமையைப் பாதுகாப்பதற்கு சட்ட ரீதியான நடவடிக்கைகள் அவசியம். அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வந்தோ புதிய அரசியலமைப்பைக் கொண்டு வந்தோ அதற்கு வழிவகுக்க வேண்டும். அரசியலமைப்பு தொடர்பில் பேசப்படுகிறது, எனினும் அது மிக மந்தமாகவே செயற்படுகின்றது. அதனை விரைவுபடுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்
தாம் பின்பற்றும் மதத்தின் தலைவரானாலும் தவறைச் சுட்டிக்காட்ட தைரியம் வேண்டும். இலங்கையிலுள்ள எல்லா மார்க்கத்திலுள்ளவர்களில் அனேகமானோர் தமது மதத்தலைவர்கள் தான் தோன்றித்தனமாக செயற்படும் போதும் சரிகாணவே முற்படுகின்றனர். அதனால் அவர்கள் தொடர்ந்தும் தவறு செய்து கொண்டிருக்கின்றனர்
ReplyDelete