இரும்பு மனிதன் இர்பான் பற்றி, அகார் முகம்மத்
-அஷ்ஷெய்க் அகார் முகம்மத்-
சிறுபராயம் முதல் சோதிக்கப்பட்டவர்தான் இர்பான். இறுதிக் கணம் வரையும் இர்பான் சோதிக்கப்பட்டார். மிகவும் ஆபத்தானதும் அபூர்வமானதுமான நோயினால் மிகக் கஷ்டமான நிலையில் அல்லாஹ்வினால் சோதிக்கப்பட்டார்.
இந்த சோதனையில் வெற்றி பெற்ற ஒருவராக சகோதரர் இர்பான் இருக்கிறார் என்பதற்கு நானும் நீங்களும் சாட்சியாக இருக்கிறோம். அல்லாஹ் கொடுத்த இந்த சோதனையை அவர் மிகவும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டார் என்பதற்கு அவரோடு நெருக்கமாக இருந்தவர்கள் சாட்சி. அவர் அல்லாஹ்வுடைய கழாவை முழுமையாக பொருந்திக் கொண்டார்.
அல்லாஹ் ஏன் எனக்கு இந்த நோயை சோதனையைத் தந்தான்? எனக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு நோய் வர வேண்டும் என அவர் ஒருபோதும் சிந்திக்கவில்லை.
அவர் ஒருபோதும் சோர்வடையவில்லை. அதேபோன்று தன்னுடன் இருந்தவர்களுக்கு எந்தவித கஷ்டங்களையும் கொடுக்காது பொறுமையைக் கடைப்பிடித்தார். அதுமாத்திரமன்றி அவர் எந்த நிலையிலும் அல்லாஹ்வுக்கு ஷுகூர் செய்பவராக இருந்தார். அதற்கு நானும் சாட்சியாக இருக்கிறேன்.
அவர் இறுதி வரைக்கும் தனது எழுத்துக்கள் மூலமாகவும் பேச்சுக்கள் மூலமாகவும் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்திக் கொண்டே இருந்தார். அடுத்தவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதும் அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என அல்லாஹ்வைப் புகழ்வார். அல்லாஹ்வுடை ய திருநாமங்களில் அர்ரஹ்மான் என்ற திருநாமத்தை அடிக்கடி உச்சரிப்பதை நான் கேட்டிருக்கிறேன்.
அல்லாஹ்வை அருளாளன் என்று சொல்வதற்கு அவரது பக்கத்தில் என்ன நியாயம் இருந்தது என்று நமக்குத் தெரியவில்லை. ஆனால் அவர் அல்லாஹ் எனக்கு நல்ல பெற்றோரைத் தந்தான் நல்ல குடும்பத்தைத் தந்தான். இவ்வாறு தனது பாரிய நோயைக் கூட அல்லாஹ்வின் அருளாக நினைத்து வாழ்ந்த சகோதரரின் ஜனாஸாவில்தான் நாம் இப்போது கலந்து கொண்டிருக்கிறோம்.
இந்த இளைஞர் வீட்டுக்கும் ஊருக்கும் தேசத்துக்கும் சமூகத்திற்கும் சர்வதேசத்திற்கும் நிறைய செய்திகளைச் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார். ஒரு மனிதனுடைய பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும் அவருடைய இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். இர்பானைப் பொறுத்தவரையில் அவருடை பிறப்பும் ஒரு சரித்திரம்தான். அவருடைய இறப்பும் ஒரு சரித்திரம்தான்.
நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்; ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
ReplyDelete(அல்குர்ஆன் : 2:155)
www.tamililquran.com