இஸ்ரேலில் தங்கியுள்ள இலங்கையர்களை, நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை
இஸ்ரேலில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் முதலாம் திகதி வரை பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் நாடு திரும்பாத தொழிலாளர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதியமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலில் தொழிலுக்காக சென்ற 500 பேரில் 150 பேர் உரிய காலத்தில் இலங்கைக்கு மீண்டும் வருகைத்தராமல் சட்டவிரோதமாக அந்த நாட்டில் தங்கியுள்ளனர்.
இதன் காரணமாக இலங்கையர்கள் பல தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழங்கப்பட்டுள்ள பொது மன்னிப்பு காலத்தில் இலங்கை வருபவர்களுக்கு மீண்டும் அந்த நாட்டிற்கு செல்ல சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
தொழிலுக்காக இஸ்ரேல் சென்றுள்ள பலர் சட்டத்தரணிகள் ஊடாக போலி ஆவணங்கள் சமர்ப்பித்து அரசியல் பாதுகாப்பு கோருகின்ற காரணத்தினால் மனித உரிமை தொடர்பில் இலங்கைக்கு மிகவும் தவறான பெயர் கிடைத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment