வீழ்ச்சிப் பாதையில், இலங்கை முஸ்லிம் அரசியல்
-A.J.M.Nilaam-
முஸ்லிம் தனித்துவக் கட்சியை ஆரம்பிப்பதென்பது வியாபாரக் கடைகளை ஆரம்பிப்பதைப் போல் இப்போது ஆகிவிட்டது. அரச கட்சி நிறுவனத்தில் முகவர்களாக இவை பதிவுசெய்து கொள்கின்றன. சமூக அடிப்படையில் உரிமைகளை முன்வைத்து சமபங்கு வகிக்காமல் சமூகத்தின் பெயரால் இலாபமடைகின்றன. இத்தகைய தலைவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் வளர்வதென்பது முஸ்லிம் சமூகம் வளர்வதல்ல. இவர்கள் வளர்வதேயாகும்.
ஒரு சஹன் எனும் மிகப்பெரும் சாப்பாட்டுப் பாத்திரத்துக்கு சாப்பிட ஆறு பேர் இருப்பது போன்றே இப்போது ஆறு முஸ்லிம் தனித்துவத் தலைமைகள் இருக்கின்றார்கள். அஷ்ரப் இருந்தது போல் முஸ்லிம் ஏக தனித்துவத் தலைமை இப்போது இல்லை. அதை இனி எதிர்பார்க்க முடியுமா? அதிவிரைவில் இரு சஹன்களும் ஆகிவிடலாம்.
இத்தலைமைகள் தத்தமது கட்சிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. இது ஜனநாயகமல்ல என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். சதாவும் சச்சரவுகளையும் முரண்பாடுகளையும் சண்டைகளையும், ஏற்படுத்திக்கொண்டு முஸ்லிம் சமூகத்தைப் பிளவுபடுத்துகின்றன. முஸ்லிம் வாக்கு வங்கியிலிருந்து அதிக கொள்வனவு செய்வதற்காகச் சிலது முகவர்களாகிக் கிடைத்த பணத்திலிருந்து பட்டுவாடாவும் செய்கின்றன. முஸ்லிம் வாக்கு வங்கியைப் பெறப் பேரினவாதக் கட்சிகள் இந்த தரகு நிறுவனங்களையே தம்வசம் வைத்துக் கொண்டிருக்கின்றன. இவை அதிக இலாபம் பெறப் பேரம் பேசிக் கொண்டிருக்கின்றன. இந்த தரகு முகவர் நிறுவனங்கள் இப்போது பேரினவாதக் குபேரர்களுக்கு முஸ்லிம் சமூகத்தை சகட்டுமேனிக்கு ஏலம் விட்டுக்கொண்டிருக்கின்றன. இதனாலேயே "நக்குண்டான் நாவிழந்தான்" என்பது போல முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் அபகரிக்கப்படும்போதும் செயலற்றிருக்கின்றன. தத்தமது கட்சிக்குள்ளும் சக கட்சிகளுக்கிடையிலும் அன்றாடம் அடிபிடிபடுகின்றன. முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமை எதையும் அபகரிக்கப்படுகையில் மேலெழுந்தவாரியாக மட்டும் குரலெழுப்பிவிட்டு சலனமாகிவிடுகின்றன.
ஐந்து ஆண்டுகளே ஆட்சியின் ஆளும் காலம், கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வரும். எனவே அமைச்சுப் பதவி நிரந்தரமல்ல எனினும் இலங்கை முஸ்லிம் சமூகம் அமைச்சர்களையே தலைவர்களாக வகுத்துக்கொண்டு அவர்களுக்குப் பின்னாலேயே அணி வகுத்து நிற்கிறது. தற்போதுள்ள முஸ்லிம் அமைச்சர்களின் பதவிகளைப் பேரினவாதிகள் அகற்றிவிட்டால் முஸ்லிம் சமூகத்தின் நிலை என்ன?
கண்களை விற்றுச் சித்திரம் வாங்குவதைப் போல் மேலதிக சலுகைகளுக்காகவும் அமைச்சுப் பதவிகளுக்காகவும் முஸ்லிம் சமூகம் அடிப்படை உரிமைகளைப் பணயம் வைத்துக் கொள்ளக்கூடாது. சிலபோது முக்கிய அமைச்சுக்களும் கூட காரிய நோக்கங்களுக்காகவே பேரினவாதிகளால் சிறுபான்மைகளுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. காரணம் சிறுபான்மைகளைப் பாதிக்கும் விடயங்களை சிறுபான்மைப் பிரதிநிதி மூலம் சாதித்துக் கொள்வதற்கேயாகும்.
இவ்வாறுதான் பேரினவாதிகள் தமது நிகழ்ச்சி நிரலை நுட்பமாகவே சாதிக்கிறார்கள். 1949 ஆம் ஆண்டு பிரதமர் டி.எஸ்.சேனநாயக்க என்ன செய்தார்? ஜி.ஜி.பொன்னம்பலத்தையும், கேட்முதலியார் எம்.எஸ்.காரியப்பரையும் அமைச்சர்களாக வைத்துக்கொண்டே மலையகத் தோட்டத் தொழிலாளரின் பிரஜா உரிமையை இரத்தாக்கி கிழக்கில் பேரினக் குடியேற்றத்தையும் செய்தார்.
ஸ்ரீமாவோ அம்மையார் பிரதமராக இருக்கையில் கலாநிதி பதியுதீன் மஹ்மூதை கல்வியமைச்சராக்கியே சிறுபான்மைகளுக்கு அதிக பயனளித்த தனியார் பாடசாலைகளை சுவீகரித்ததோடு கல்வியில் பெரும்பான்மைச் சமூகத்துக்குக் கூடுதல் வெட்டுப்புள்ளி வழங்கல் எனும் தரப்படுத்தல் முறையையும் கொண்டு வந்திருந்தார்.
எனினும் ஜி.ஜி.பொன்னம்பலம் பிற்காலத்தில் பேரின போலி தேசியவாதத்தை உணர்ந்துகொண்டு 1976 ஆம் ஆண்டு வட்டுக்கோட்டை மகாநாட்டில் கலந்துகொண்டு தந்தை செல்வாவை வாழ்த்தினார். அதுபோல் கலாநிதி பதியுதீன் மஹ்மூதும் பிற்காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் கம்பளை மகாநாட்டில் கலந்துகொண்டு அஷ்ரபை வாழ்த்தினார். எனினும் முருகேசு திருச்செல்வம் 1965 ஆம் ஆண்டு கொள்கைக்காக அமைச்சுப் பதவியைத் துறந்திருந்தார். இந்த நிலைத் தனித்துவக் கட்சியாலேயே ஏற்பட்டிருந்தது.
அஷ்ரப் மூலமே தேசிய ஐக்கிய முன்னணியையும் உருவாக வைத்து, அஷ்ரப் அகால மரணமுற்றதும் ஹக்கீமோடு பேரியலையும் அமைச்சர்களாக்கிப் பேரினவாதிகள் பிளவுபடுத்தினார்கள். பிறகு ஹக்கீமோடு அதாவுல்லாஹ்வையும் அமைச்சர்களாக்கிப் பிளவுபடுத்தினார்கள். பின்னர் ஹக்கீமோடு பஷீர் ஷேகுதாவூத்தையும் அமைச்சர்களாக்கி பிளவுபடுத்தினார்கள். அதன் பிறகு ஹக்கீமோடு ரிஷாத் பதியுதீனையும் அமைச்சர்களாக்கிப் பிளவுபடுத்தினார்கள். இப்போது இராஜாங்க அமைச்சுப் பதவிகளிலும் தேசிய எம்.பி. பதவிகளிலும் கடுமையான போட்டிகள் ஏற்பட்டு தனித்துவமாக அஷ்ரப் கட்டிக்காத்த முஸ்லிம் சமூகத்தின் ஏகோபித்த வாக்கு வலிமை சிதைந்து சிதறியிருக்கிறது.
குட்டி குட்டி சுல்தான்களை உருவாக்கியே ஏகாதிபத்தியவாதிகள் அரபிகளைப் பிரித்தாண்டார்கள். 1000 கோடி எண்ணெய் பீப்பாய்கள் இருந்தால் அதற்கு ஒரு சுல்தான், 2000 கோடி பீப்பாய் எண்ணெய் இருந்தால் அதற்கும் ஒரு சுல்தான் என்றே பிரித்துவிட்டார்கள். அதிகாரம், சொகுசு வாழ்வு ஆகியவற்றையும் வழங்கினார்கள். இவற்றுக்கிடையில் பிளவுகளையும் ஏற்படுத்திவிட்டார்கள். இவற்றிடமிருந்து எண்ணெய்க் கொள்முதலுக்கான ஏகபோகத்தையும் பெற்றுக்கொண்டார்கள். பாதுகாப்புக்கான ஏகபோகத்தையும் பெற்றுக்கொண்டார்கள். குட்டி ராச்சியங்கள் தமது முதலீடு, பணவைப்பு, பணப் பரிமாற்றம் ஆகிய யாவற்றையும் தம்முடனேயே வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் கூட விதித்தார்கள்.
இந்த அடிப்படையில்தான் தற்போது வெளிரங்கமாகவே வன்னிக்கு ரிஷாத் பதியூதீன், அக்கரைப்பற்றுக்கு அதாவுல்லாஹ், காத்தான்குடிக்கு ஹிஸ்புல்லா எனவும் தனித்துவத் தலைமைகள் பிளவுபட்டு அல்லாடுகின்றன. கிழக்கில் ரிஷாதும் வலிமை பெற்றிருக்கையில் ஹக்கீமும் வலிமை பெற்றிருக்கிறார். எனினும் ரிஷாத் வன்னியையும், ஹக்கீம் நாவலப்பிட்டியைச் சேர்ந்தவர்கள் எனப் பிரதேசவாதமும் உருவாகியிருக்கிறது. இது அகல வேண்டுமாயின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் தனித்துவத் தலைமை வழங்கப்பட வேண்டும். ஏனெனில் பிரதேச உணர்வு ஆபத்தானதாகும். எனினும் இதில் நியாயம் உண்டு. இலங்கை முஸ்லிம்களின் மார்பு கிழக்கு, அம்பாறை மாவட்டம் இதயம் என அஷ்ரப் கூறியிருப்பதேயாகும். காரணம் தனித்துவத்தோடு, பிற இன ஆளுமையின்றி சில எம்.பி.க்களையேனும் தெரிவுசெய்யும் வாய்ப்பு அங்கு இருப்பதோடு முழு இலங்கையிலும் முஸ்லிம் சனப் பரம்பல் அங்கு நிறைந்து காணப்படுவதுமேயாகும். ஆக, இலங்கை முஸ்லிம்கள் எங்கேனும் பாதிக்கப்பட்டால் அரவணைக்கும் ஸ்தலமாகவே அதை அவ்வாறு அஷ்ரப் நாடியிருந்தார். அதனால் தான் கரையோர மாவட்டம், முஸ்லிம் அதிகார அலகு என்றெல்லாம் கோரிக்கைவிட்டார்.
இலங்கை முஸ்லிம்களின் வாழ்வாதாரங்களையும், இருப்பையும், வரலாற்றையும், சுய நிர்ணயத்தையும், இறைமையையும் வலியுறுத்துவதாகவே அவரது இலட்சியங்கள் அமைந்திருந்தன. காங்கிரஸ் பிறந்தது எதற்காக? சலுகையும் உரிமையும் தெளிவாக்க எனும் அவரது பாடல் வரிகள் இதையே ஞாபகப்படுத்துகின்றன.
முஸ்லிம் தனித்துவம் ஆறாகப் பிளவுப்பட்டதால் நிகழ்ந்ததென்ன? அமைச்சர் பைசர் முஸ்தபா தற்போதிருக்கும் தேர்தல் முறையை எதிர்த்ததற்காக அமைச்சர் ஹக்கீமையும், அமைச்சர் ரிஷாத் பதியுதீனையும் குறை கூறுகிறார். முன்பு ஏற்றுக்கொண்டவர்கள் இப்போது எதிர்ப்பதாகவும் குற்றம் சுமத்துகிறார். இவர் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர் அல்ல. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தயவால் எம்.பி.யாகி அமைச்சரானவர். ஹக்கீமும், ரிஷாதும் முஸ்லிம் சமூகத்தால் தெரிவு செய்யப்பட்டவர்கள். பைசர் ஜனாதிபதிக்கும் ஹக்கீமும், ரிஷாதும் முஸ்லிம்களுக்கும் பதில் கூற வேண்டியவர்கள். சமீபத்தில் நிகழ்ந்த உள்ளூராட்சித் தேர்தல் முறை பிழையானது என்பது இப்போது அனுபவத்தினூடாகத் தெரிந்துவிட்டது. முன் பின் காணாத புதிய முறை என்பதால் போதிய நுணுக்கமின்றி ஹக்கீமும் ரிஷாதும் அப்போது ஆதரித்தது உண்மைதான். என்றாலும் கூட இப்போது அது பிழையானது என அனுபவத்தில் கண்ட பிறகும் கூட அவர்கள் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கவேண்டும் என அமைச்சர் பைசர் முஸ்தபாவால் வலியுறுத்த முடியாது. எந்த அமைச்சராயினும் எதையும் மக்கள் மீது திணிக்க முடியாது. ஒரு விடயத்தை அது அனுபவித்தல் பிழை எனத் தெரிந்தும் கூட சரி கண்டேயாக வேண்டும் என்றா அமைச்சர் பைசர் முஸ்தபா கூறுகிறார். அண்மையில் நிகழ்ந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தல் நிர்வாகச் சீரழிவையும் பிரிதிநிதித்துவச் சிக்கலையும் ஏற்படுத்தியதோடு சிறுபான்மைகளின் பிரதிநிதித்துவங்களை பாரிய அளவில் குறைத்தும்விட்டது. இதற்கான முழுப்பொறுப்பும் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடையதாகும்.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலிலும் இதே நிலைமைகள் ஏற்பட வேண்டும் என்றா இவர் விரும்புகிறார்? தெரிந்தோ தெரியாமலோ உள்ளூராட்சித் தேர்தலில் சீரழிந்தாகிவிட்டது. சிறுபான்மைகளையும் சிறுபான்மைக் கட்சிகளையும் சின்னாபின்னப்படுத்திய அத்தகைய தேர்தல் முறையை மாகாண சபைத் தேர்தலிலும் அமுல்படுத்துவதென்பது சிறுபான்மைகளுக்குரிய அதிகாரக்கட்டமைப்பை மேலும் சிதைத்து விடும். இத்தகைய தேர்தல் முறை பேரினவாதிகளின் திட்டமிட்ட செருகுதலாகும்.
13 ஆம் ஷரத்தின் மாகாண சபைத் தீர்வின் மூலம் சிறுபான்மைகளுக்கு கிடைத்திருக்கும் ஓரளவு சுயாதீனத்தையும் கூட இது நிர்மூலமாக்கிவிடும். அதனால்தான் உள்ளூராட்சித் தேர்தல் மூலம் பரீட்சித்துவிட்டு மாகாண சபைத் தேர்தலில் அமுலாக்கப்பார்க்கிறார்கள். இத்தகைய தேர்தல் முறையையே மாகாண சபைத் தேர்தலிலும் அமுல்படுத்த வேண்டும் என அமைச்சர் பைசர் முஸ்தபா ஏன் வற்புறுத்துகிறார். இதனால் சிறுபான்மைகளுக்குப் பாதிப்பு எனக் கூறப்பட்ட பின்பும் இவர் ஏன் முந்திக்கொள்கிறார்? இவர் பெரும்பான்மை சமூகத்தை முன்னிலைப்படுத்தும் கட்சியின் தயவால் தேர்தலில் போட்டியிடாமல் எம்.பியுமாகி அமைச்சருமாகியிருப்பதால் அதற்கு விசுவாசமாகவே இருக்க வேண்டியிருக்கிறது. இத்தகைய கடமை நிறைவேற்றப்படாவிட்டால் வைத்திருப்பதில் பயனில்லாமற் போய்விடும். உண்மையில் பேரினவாதிகள் சிறுபான்மைப் பிரதிநிதித்துவங்களை பலவீனப்படுத்தவே விகிதாசார முறையை நீக்கியிருந்தார்கள். தொகுதி நிர்ணயத்தின் மூலமும் அதற்கே முயற்சி செய்கிறார்கள். இதை அவர்களே செய்து பழியை சுமக்க வேண்டியதில்லை என்பதற்காகவே தமக்குக் கட்டுப்பட்ட சிறுபான்மைப் பிரதிநிதி மூலம் இதை சாதித்துக் கொள்கிறார்கள். பேரின யாப்பு மாற்றப்பட்டு பல்லின யாப்பு இயற்றப்படுவதை எதிர்த்து அண்மையில் பௌத்த உயர்பீடங்கள் என்ன கூறின? இருக்கும் யாப்பு அப்படியே இருக்கட்டும். விகிதாசார தேர்தல் முறையை மட்டும் மாற்றுங்கள் என்றன. காரணம் விகிதாசார தேர்தல் முறை சிறுபான்மைகளின் ஆளுமையைக் கூட்டுகிறது என அவை கருதுவதேயாகும். அதனால்தான் ஜனாதிபதி விகிதாசார தேர்தல் முறைக்கு எதிராக உறுதியாக நிற்கிறாரோ? அதனால்தான் அமைச்சர் பைசர் முஸ்தபாவும் அதே நிலைப்பாட்டில் இருக்கின்றாரோ?
அம்பாறை மாவட்டத்தில் கல்முனை, பொத்துவில், சம்மாந்துறை ஆகிய முஸ்லிம் தேர்தல் தொகுதிகளையும் உள்ளடக்கிய பிரதேசத்திலிருந்து பகுதி பகுதியாக பிரித்தெடுத்து மூன்று சிங்கள பாராளுமன்றத் தொகுதிகளை உருவாக்கத் திட்டம் இடப்படுகின்றதாமே. இதுபற்றி அமைச்சர் பைசர் முஸ்தபா என்ன சொல்கிறார். பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் இவ்விடயத்தை வெளிப்படுத்தி பல மாதங்களாகின்றனவே. தொகுதி நிர்ணய விடயத்தில் முஸ்லிம் சமூகம் விழிப்புடனேயே இருக்க வேண்டும். ஜனாதிபதிக்கோ, பிரதமருக்கோ, அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கோ இவ்விடயத்தில் முஸ்லிம்களை நிர்பந்திக்க முடியாது.
கட்சி நலன் வேறு, தனிப்பட்ட நலன் வேறு. முஸ்லிம் சமூகத்தின் நலனே முஸ்லிம்களுக்கு முக்கியமானதாகும். தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கெல்லாம் எதிர்கால சந்ததியின் வாழ்வாதாரத்தை பணயம் வைக்கக்கூடாது. இவ்வாறு செய்வோரை அடுத்த தலைமுறை குற்றம் கூறும் என்பதில் சந்தேகமில்லை.
Post a Comment