Header Ads



தற்கொலையை தவிர்த்து பிரச்சனைகள், சோதனைகளை வெற்றி கொள்வோம்...!!

எ.எச்.எம்.மின்ஹாஜ் முப்தி (காஷிபி)

ஒரு முஸ்லிம் தனது நம்பிக்கையை பூரணப்படுத்த விசுவாசம் கொள்ள வேண்டிய அடிப்படை அம்சங்களுள் ஒன்றாக கழாகத்ர் பற்றிய நம்பிக்கை காணப்படுகிறது. இதனை மறுக்கும் நிலையில் ஒருவன் முஸ்லிமாக கருதப்பட முடியாது.

ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களிடம், 'ஈமான் பற்றி எனக்கு அறிவியுங்கள்?' என்று கேட்டமைக்கு பதிலளித்த நபியவர்கள், 'அல்லாவையும், மலக்குமார்களையும், வேதங்களையும், இறைத்தூதர்களையும் நம்பிக்கை கொள்வதோடு, நன்மை, தீமை யாவும் (அல்லாஹ்) அவனது நிர்ணயப்படி நடைபெறும் என்பதையும் நீங்கள் நம்பிக்கை கொள்வதாகும்.' என குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்)

மற்றுமொரு முறை நபி (ஸல்) அவர்கள்; கூறியதாக உபாதா இப்னுஸ் ஸாமித் (ரழி) கூறினார்கள், 'தன் படைப்புகளில் முதன் முதலாக எழுதுகோலைப் படைத்த அல்லாஹ், 'எழுதுவாயாக' என்று கூறினான். 'என் இறைவா எதை எழுத வேண்டும்?' எனக் கேட்டது. அல்லாஹ், 'கத்ரை எழுதுவாயாக' என பதிலளித்தான். அன்று முதல் கியாம நாள் வரை இவ்வுலகில் நிகழும் சகல விடயங்களும் பதிவு செய்யப்பட்டன. நன்மையையும் தீமையையும் உள்ளடக்கிய இக்கத்ரை கொண்டு விசுவாசம் கொள்ளாதவர்களை அல்லாஹ் நெருப்பினால் பொசுக்குவான். (திர்மிதி)

இந்த பிரபஞ்சததில் காணப்படும் அனைத்து படைப்பினங்களையும் அவதானித்து நோக்கும் போது, இவை ஒவ்வொன்றுமே இறை நியதியுடன் தொடர்பு பட்டதாக காணப்படுகின்றன. இறை நியதிக்கேற்பவே மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் தொழிற்படுகின்றது. ஆரோக்கியமும், நோயும், இன்பமும,; ,துன்பமும் , செல்வமும்,ஏழ்மையும்,பலமும்,பலவீனமும்... இறைநாட்டத்தின் அடிப்படையிலானது என்ற வகையில் ஒரு விசுவாசியின் வாழ்வுடன் இந்நம்பிக்கை பின்னிப்பிணைந்துள்ளது.

இது குறித்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லா{ஹ அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: இறை நம்பிக்கையாளரின் நிலையைக் ;கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது. இதை ஸுஹைப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம் 5726

பிரச்சனைகள்,;சோதனைகள் எல்லோருக்கும் பொதுவானவை


ஆதம் அலைஹிஸ்ஸலாம் முதல் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வரை நபிமார்களும்; ;இன்னும் இறைநேசர்களும் அல்லாஹ்வின் சோதனைக்கு ஆளானவர்களே. ஹஸ்ரத் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது மனைவி ஹாஜர் அலைஹிஸ்ஸலாம் ,பச்சலம் பாலகன் இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம் ஆகியோரை பாலைவனத்தில் விட்டுச்சென்ற போது அல்லாஹ்வின் கட்டளை என்பதால் ஏற்பட்ட சகல சோதனைகளையும் ,கஷ்டங்களையும் பொருத்துக் கொண்டதன் பயணாக அல்லாஹ் அந்த தியாகத்தை இருதி நாள் வரை ஞாபகப்படுத்தி படிப்பினையையும் புகட்டியுள்ளான். மேலும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது துனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்க கலங்கம் ஏற்படுத்தப்பட்ட போது அவர்கள் மனம் தளராமல் பொருமையை கடைபிடித்ததன் காரணமாக அல்லாஹ் திருமறையில் தெளிவுபடுத்தியுள்ளான். இவ்வாறு பல்வேறு நபிமார்களின் வரலாறுகளைக் கூறுகின்றான். அதில் எல்லா நபிமார்களும் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை தெளிவாக அறிய முடிகிறது. ஆக நாங்கள் மாத்திரம் சோதனைகளை,சிரமங்களை எதிர் நோக்கவில்லை என்பதனை ஆழ் மனதில் பதிக்கவேண்டும் அச்சோதனையின் போது நாம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் என்ன? என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

01. பிரச்சனைகள், சோதனையின் போது பொறுமையைக் கடைப்பிடித்தல்

குடும்பரீதியாக, சமூகரீதியாக, தொழில்ரீதியாக, கல்விரிதீயாக, பொருளாதாரரிதீயாக ,சுய கௌரவத்தில் இழுக்கு எற்படுதல் ரிதீயாக  உமக்குச் பிரச்சனை,  மன சஞ்சலம் ஏற்பட்டால் நீர் அழகிய முறையில் பொறுமை செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். உமது பொறுமைக்கான கூலியை அல்லாஹ்விடம் மட்டுமே எதிர்பார்க்க வேண்டும். அல்லாஹ் அடியார்களுக்கு அநீதி இழைப்பவன் அல்ல என்பதை உறுதியாக நம்ப வேண்டும். உமக்குக் கஷ்டம் ஏற்படும் பொழுதுகளில் கூட அதற்காக கூலிகளைப் பதிவு செய்வது அல்லாஹ் உமக்குச் செய்திருக்கும் பெரும் கிருபையாகும். உம்மைச் சோதிப்பது அல்லாஹ்வின் விதியில் இருந்தால் நீர் என்னதான் செய்ய முடியும்? ஆக சோதனையின் போது பொறுமை செய்வதுதான் முதல் தீர்வும், அதிக நன்மையைப் பெற்றுத் தரும் அம்சமும் என்பதை நினைவிற் கொள்! அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) நீங்கள் கூறுங்கள்: 'நம்பிக்கை கொண்ட (என்) அடியார்களே! உங்கள் இறைவனுக்கு நீங்கள் பயந்து கொள்ளுங்கள். இம்மையில் நன்மை செய்தவர்களுக்கு (மறுமையில்) நன்மைதான் கிடைக்கும். அல்லாஹ்வுடைய பூமி மிக விசாலமானது. நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு அவர்களுடைய கூலி கணக்கின்றியே (அதிகமாக) கொடுக்கப்படும். (அல்குர்ஆன் 39:10)

02. பிரச்சனைகள், சோதனையின் போது உறுதியைக் கைக் கொள்ளல்

சோதனைகளைக் கண்டு நாம் ஒரு போதும் கலக்கமடையக் கூடாது. சோதனையின் போது நாம் உறுதியைப் பற்றிப் பிடிப்பது அவசியமாகும். நமக்குச் சோதனை வரும் போது 'நாம் அல்லாஹ்வால் சோதிக்கப்படுகிறோம். நமக்கு வந்திருக்கும் சோதனை நம்மையும், நமது ஈமானையும் பரீட்சிக்க‌ வந்த சோதனை. இந்தச் சோதனையின் மூலம் அல்லாஹ் நமது பாவங்களை மன்னித்து, அந்தஸ்துக்களை உயர்த்துவான். இதற்காக நமக்குக் கூலியும் உண்டு' எனும் நம்பிக்கையை நாம் ஆணித்தரமாக மனதில் பதிய வைக்க வேண்டும்.
சோதனை ஏற்படும் போது இறை நினைவுடன் இருக்கும் இறை விசுவாசிகளுடன் நாம் அதிக தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். நமக்குச் சோதனை ஏற்பட்டு நாம் உறுதியுடன் இருக்கும் போது நமது உறுதியைக் குழைக்கும் விதமாக நடந்து கொள்ளும் நயவஞ்சகர்களுடனும், கொள்கை கெட்டவர்களுடனும் நாம் சகவாசம் கொள்ளக் கூடாது. அவர்கள் நமது ஈமானையும், உறுதியையும் கெடுத்து, நம்மைக் கலக்கமடையச் செய்து விடுவார்கள். அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) எவர்கள் கஷ்டங்களைச் சகித்துத் தங்கள் இறைவனின் திருமுகத்தையே நாடி அவனையே காலையிலும், மாலையிலும் (பிரார்த்தனை செய்து) அழைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் உங்களையும் நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள். இவ்வுலக அலங்காரத்தை நீங்கள் விரும்பி அத்தகைய (நல்ல)வர்களை விட்டு உங்கள் கண்களைத் திருப்பி விடாதீர்கள். அன்றி, தன் சரீர இச்சையைப் பின்பற்றியதன் காரணமாக எவனுடைய உள்ளத்தை நம்மைத் தியானிப்பதிலிருந்து நாம் திருப்பி விட்டோமோ அவனுக்கும் நீங்கள் கட்டுப்படாதீர்கள். அவனுடைய காரியம் எல்லை கடந்து விட்டது. (அல்குர்ஆன் 18:28)

03. பிரச்சனைகள், சோதனையின் போது திக்ர் செய்தல்

ஒரு மனிதனுக்குச் சோதனை ஏற்பட்டால் அவன் மன நிம்மதியை இழந்து விடுவான். அதுவே அவனுக்கு மனக் கலக்கத்தை ஏற்படுத்தப் போதுமானதாகும். இந்நிலையில் மன அமைதிக்கு ஒரே தீர்வு அல்லாஹ்வை நினைவு கூறும் திக்ர் மாத்திரமே! அல்லாஹ் கூறுகிறான்: (நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன் அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க! (அல்குர்ஆன் 13:28)

நீர் சோதனையில் சிக்கித் தவிக்கும் போது திக்ர் செய்து மன நிம்மதியைப் பெறுவதை விட சிறந்த ஒரு வழி இல்லை!

04. பிரச்சனைகள், சோதனையின் போது பிரார்த்தனை செய்தல்

பிரார்த்தனை பலமான ஓர் ஆயுதமாகும். பிரார்த்தனை செய்வது நபிமார்களின் வழிமுறையாகும். ஒரு அடியான் அல்லாஹ்விடம் அவன் விரும்பிய நேரத்தில், அவன் விரும்பும் விடயத்தை தாராளமாகக் கேட்க அனைத்து வாசல்களையும் அல்லாஹ் திறந்து வைத்துள்ளான். துஆ எனும் பிரார்த்தனை ஓர் வணக்கமாகும். அது அனைத்து நலவுகளின் திறவுகோலும், அனைத்துத் தீமைகளின் பூட்டுமாகும். பிரார்த்தனை மூலம் பல நன்மைகளைப் பெறவும் முடியும். பல தீமைகளைத் தடுக்கவும் முடியும். அல்லாஹ் ஏற்படுத்திய களா கத்ர் எனும் விதியில் கூட‌ மாற்றத்தைக் கொண்டு வர சக்தி பெற்ற ஒரு வணக்கமென்றால் அது துஆ எனும் பிரார்த்தனை மட்டுமே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லா{ஹ அலைஹி வசல்லம் கூறினார்கள்: 'பிரார்த்தனை மட்டுமே களா கத்ரை மாற்றும்' நூல்: முஸ்னத் அஹ்மத் 22466

நமக்குச் பிரச்சனை, சோதனை ஏற்படும் நேரங்களில் 'யாஅல்லாஹ் எனக்கு ஏற்பட்ட இச்சோதனை என்னை விட்டும் நீக்கி விடுவாயாக!' 'யாஅல்லாஹ் எனது சோதனையின் அளவைக் குறைத்து விடுவாயாக, 'யாஅல்லாஹ் எனது சோதனைக்கான கூலியை எனக்கு நிறைவாகத் தருவாயாக!' என்று நாம் பிரார்த்திக்கலாம். இன்னும் சொல்லப்போனால் 'சோதனையின் போது கலக்கமடையாத உறுதியையும், சீர்குலையாத‌ ஈமானையும் எனக்குத் தருவாயாக!' என்றும் கேட்கலாம்.

இதனை விட்டு விட்டு மௌத்தை கேட்பது கூடாது அவ்வாறு கேட்பதாயின் பின்வருமாறு கேற்க வேண்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹீ வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

உங்களில் யாரும் தமக்கு நேர்ந்துவிட்ட ஒரு துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித் தான் ஆகவேண்டும் என்றிருந்தால், 'இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் மரனித்துவிடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு மரனத்தைத் தருவாயாக!' என்று கேட்கட்டும். இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.(ஸஹிஹுல் முஸ்லிம் இல: 5 203.) ஒருவர் தமக்கு நேர்ந்த துன்பத்தின் காரணத்தால் மரணத்தை விரும்புவது வெறுக்கத்தக்கதாகும் என இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள. இதற்கு மாற்றமாக இறை விசுவாசி எச்சந்தர்ப்பத்திலும் பிரச்சனைக்கு, சோதனைக்கு தீர்வாக தனது உயிரைத்தானே பொக்கிக் கொளளக்;;கூடாது. 

தற்கொலை செய்தவருடைய சட்டம்

ஒரு மனிதன் தன்னை தற்கொலை செய்து கொள்வது ஹராமாகும் .இது நபியவர்களினால் வன்மையாக கண்டிக்கப்பட்ட ,எச்சரிக்கப்பட்ட  பெரும்பாவங்களில் ஒன்றாகும் . இதைப்பற்றி அல்லாஹுதஆலா பின்வருமாறு கூறுகின்றான் : 

நம்பிக்கை கொண்டவர்களே!;; நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக ,இருக்கின்றான். (04:29)

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார்.  என அபூ {ஹரைரா(ரலி) அறிவித்தார். (ஸஹிஹுல் புகாரி இல: 5778)

தற்கொலை செய்தவருக்க தொழுவிக்கலாமா?

தற்கொலை பெரும்பாவம் என்பது நாம் அறிந்ததே. அதனை செய்பவர் இஸ்லாத்தை விட்டும் வெளியேரியவராக ஆகமாட்டார.; அவருடைய ஜனாஸா குளிப்பாட்டப்படும், கபனிப்படும் ,தொழுவிக்கப்படும,; முஸ்லிம்களுடைய மைய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.என   ஷாபிஈ மத்ஹபின் அறிஞர்கள் உட்பட, பெரும்பான்மையான மார்க்க அறிஞர்கள் மற்றும் தற்கால பத்வா அமைப்புகளினதும் கருத்தாகும். 

சில அறிஞர்கள் பின் வரும் ஹதீஸை ஆதாரமாக வைத்து தற்கொலை செய்தவர் மீது தொழுவிக்கப்படமாட்டாது என்று கூறுகின்றனர்.

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அகலமான அம்பால் தற்கொலை செய்து கொண்ட ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுவரப்பட்டபோது, அவருக்காக நபி (ஸல்) அவர்கள் தொழவைக்கவில்லை. (ஸஹிஹுல் முஸ்லிம்1779).  

மேற்குறிப்பிட்ட ஹதீஸிற்கு இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பின்வருமாறு; விளக்கம் கூறியுள்ளார்கள்;: தற்கொலை செய்வது பெரும் பாவம் என்பதனை மக்களுக்கு எச்சரிப்பதற்காக நபியவர்கள் அவருக்காக தொழுவிக்கவில்லை  எவ்வாறு கடனாளியாக மரணித்தவருக்கு நபியவர்கள் தொழுகை நடத்தாமல் விட்டார்களோ அதேபோன்று. ஆனாலும் ஸஹாபாக்களை தொழுவிக்குமாறு ஏவினார்கள்.

ஆகவே நபியவர்கள் தொழுவிக்காமல் விட்டது தற்கொலை செய்வது மற்றும் கடனுடயை விடயத்தில் அலட்சியமாக இருப்பதனை எச்சரிப்பதற்காகவே அன்றி மரணித்தவர் இறை நிறாகரிப்பாளராக மாறிவிட்டார் என்பதற்காக அல்ல (ஸஹிஹுல் முஸ்லிம்1779).  

மேற்குறிப்பிட்ட விளக்கத்ததையே பின்வரும் அறிஞர்களான இமாம் இப்னு தைமிய்யா, அஷ்ஷேக் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் போன்ற அறிஞர்களும்; கூறியுள்ளனர்.

எனவே சோதனைகளைக் கண்டு நாம் ஒரு போதும் கலக்கமடையாது. பொருமையோடு இருந்து வாழ்க்கையில் வேற்றியடைவோம்

நம் அனைவரையும் அல்லாஹ் ஏற்றுக்கொன்டு இறுதி முடிவை நல்லதாக்கி வைப்பானாக...                                             
அல்லாஹ்வே மிக அறிந்தவன்.

1 comment:

Powered by Blogger.