ஆட்டோ சாரதியின், மனிதாபிமானச் செயல்
கொழும்பில் பலரும் வியக்கும் வகையில் மனிதாபிமானத்துடன் செயற்பட்ட முச்சக்கரவண்டி சாரதி தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
முச்சக்கரவண்டியில் 5 லட்சத்திற்கும் அதிகமாக பணம், கையடக்க தொலைபேசி, விமான கடவுச்சீட்டுகள் இரண்டினை நபர் ஒருவர் விட்டுச் சென்றுள்ளார்.
எனினும் மறந்து விட்டு சென்ற பயண பையை அதன் உரிமையாளரை தேடி ஒப்படைத்த சாரதி ஒருவர் தொடர்பிலேயே தகவல் வெளியாகியுள்ளது.
தெஹிவளை, களுபோவில வசிக்கும் முச்சக்கர வண்டி சாரதியான செல்வராஜ் என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு மனிதாபிமானத்துடன் செயற்பட்டுள்ளார்.
கடந்த 28ஆம் திகதி காலை தனது முச்சக்கர வண்டியை பழுது பார்ப்பதற்காக அதில் இருந்த பொருட்களை வெளியே எடுத்த போது பின்னால் இருந்த ஆசனத்தில் இந்த பை காணப்பட்டுள்ளது.
பின்னர் அவர் இது தொடர்பில் தனது மனைவியிடம் அறிவித்துவிட்டு பையை திறக்கும் போது, கையடக்க தொலைபேசி, விமான கடவுச்சீட்டுகள் இரண்டு மற்றும் 5 லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் இருப்பது தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் பொலிஸார் ஊடாக குறித்த பயண பையை உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் முச்சக்கர வண்டியின் சாரதி செல்வராஜ் கருத்து வெளியிடுகையில்,
நான் சற்று சிந்தித்தேன். இந்த பையுடன் முச்சக்கர வண்டியில் வந்தது யார் என்பது? எனக்கு ஓரளவு ஞாபகம் இருந்தது. பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இருந்து தெஹிவளைக்கு சென்றார்கள். எனினும் அவர்கள் எவ்விடத்தை சேர்ந்தவர்கள் என எனக்கு தெரியாது.
நான் முச்சக்கர வண்டியை பழுது பார்க்கும் நடவடிக்கையினை பிற்போட்டுவிட்டு கொள்ளுப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு சென்றோம். காலை 6 மணி அளவில் உயர் அதிகாரியிடம் தகவலை வெளியிட்டேன்.
பொலிஸ் உயர் அதிகாரி எனக்கு நன்றி கூறிவிட்டு தேனீர் விருந்து ஒன்றை வழங்கினார்கள். வெள்ளிக்கிழமை மாலை இவ்வாறு பை ஒன்றை முச்சக்கர வண்டியில் விட்டு சென்றுவிட்டதாக முறைப்பாடு ஒன்று கிடைத்தது என அதிகாரி என்னிடம் கூறினார்.
அதற்கமைய உரிமையாளருக்கு பொலிஸ் அதிகாரி அழைப்பேற்படுத்தி அங்கு வரவழைத்தார். பையை உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு பொருட்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என அதிகாரி உரிமையாளரிடம் வினவினார்.
அவர்கள் அதனை பார்த்துவிட்டு ஒன்றுமே குறையவில்லை என கூறினார்கள். அத்துடன் அவர்களின் பணத்தில் 50 ஆயிரம் ரூபாயை என்னிடம் வழங்க முயற்சித்தார்கள். எனினும் நான் அதனை பெற்றுக்கொள்ளவில்லை. பணத்தைவிட மனிதாபிமானம் பெறுமதியானது என நான் கூறிவிட்டு வந்தேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Hats off to you
ReplyDeleteHats off sir!
ReplyDelete