Header Ads



"பேயே வந்து பக்கத்தில் உறங்கினாலும் நாம் அதோடு உறங்கி, நமது காரியத்தை சாதிக்க வேண்டும்"

மத்திய, ஊவா மாகாணங்களின் தமிழ் கல்வி அமைச்சுகள் கல்வி இராஜாங்க அமைச்சோடு இணைந்து செயலாற்றுவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் அனுமதி வழங்கியுள்ளார்.

இவ்வாறு இணைந்து செயலாற்றவில்லை என்றால் மத்திய மற்றும் ஊவா மாகாண கல்வி அமைச்சர்களான எம்.ரமேஷ்வரன் மற்றும் செந்தில் தொண்டமானுக்கு எதிராக கட்சியின் ஊடாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட புரூட்ஹில் தமிழ் வித்தியாலயத்திற்கான கட்டிடத்தின் மாடி பகுதியை மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் தலைமையில் இன்று மதியம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொது செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான், மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான கணபதி கனகராஜ், பிலிப்குமார், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

இன்று நாட்டின் அரசியல் சூழ்நிலை போகும் போக்கை பார்த்தால் அடுத்த மூன்று நான்கு மாதத்தில் மாற்றம் ஒன்று ஏற்படவிருக்கின்றது..

என தெரிவித்த அவர் கடந்த வாரம் கல்வி இராஜாங்க  அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் அவர்கள் மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சரையும், ஊவா மாகாண தமிழ் கல்வி அமைச்சரையும், கல்வி இராஜாங்க  அமைச்சோடு இணைந்து மாகாண அமைச்சின் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்ல வேண்டும் என ஊடகங்களின் ஊடாக எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

அந்த அழைப்பின் பிரகாரம் இவ்விரண்டு மாகாண அமைச்சர்களும் இதுவரை ஏன் இணைந்து செயல்பட முன்வரவில்லை. இவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறித்த அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சோடு இணைந்து செயலாற்ற நான் அனுமதி கொடுக்க வேண்டும் என்றல்ல.

கல்வி மற்றும் சமூகம் முன்னேற்றத்திற்கு யாரோடு வேண்டுமென்றாலும், இணைந்து செயல்பட வேண்டும். பேயே வந்து பக்கத்தில் உறங்கினாலும் நாம் அதோடு உறங்கி கொண்டு நமது காரியத்தை சாதிக்க வேண்டும்.

மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் அக்கறை காட்டுவதைவிட ஆசிரியர்களும், அதிபர்களும் அக்கறை காட்டி சாரியான அடித்தளம் இட்டால் மாத்திரமே எதிர்கால அத்திவாரம் சரியாக அமையும்.

அதனால் கல்வி இராஜாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கமைய மத்திய மற்றும் ஊவா மாகாண அமைச்சர்களை கல்வி இராஜாங்க  அமைச்சோடு இணைந்து கல்வியை முன்னேற்றமடைய முழுமையான அதிகாரத்தை கொடுக்கின்றேன்.

நமது சமூகம் மேலோங்க கருத்து வேறுபாடுகளை அப்புறப்படுத்தி யாருடனும் இணைந்து மக்களுக்காக சேவை செய்யும் அதிகாரத்தையும் வழங்குகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.