Header Ads



தன் மார்பில், பாலூட்டிய தந்தை

தங்களின் குழந்தையை பெற்றெடுக்க விஸ்கான்ஸின் ஜோடி ஒன்று மருத்துவமனைக்குச் செல்லும்போது தாய்க்கு மட்டும் அது மறக்க முடியாத இரவாக அமையவில்லை. அக்குழந்தையின் தந்தைக்கும்தான். கனவில் கூட நினைத்துப்பார்க்காத செயலைச் செய்தார் அந்த தந்தை.

ஏப்ரல் நியூபவுரின் பிரசவம் அவ்வளவு எளிதாக இல்லை. அவருக்கு முன்- சினைப்பருவ வலிப்பு நோய் மட்டுமின்றி உயர் ரத்த அழுத்தமும் இருந்தது. வலிப்பு காரணமாக ஏப்ரலை அவசரகால சிசேரியன் பிரிவுக்கு அழைத்துச் சென்றனர்.

ஜூன் 26-ல் ஏப்ரலுக்கு மகள் பிறந்தாள். அவளுக்கு ரோசாலி என்று பெயரிட்டனர். அப்போது திடீரென மீண்டும் வலிப்பு ஏற்பட ஏப்ரலை காப்பாற்றுவதற்காக சிகிச்சையின் பொருட்டு குழந்தையை தாயுடன் நெருங்கவிடவில்லை. 3.6 கிலோ எடையிருந்த அக்குழந்தை அதன் தந்தை மேக்ஸாமில்லியனிடம் ஒப்படைக்கப்பட்டது.

''ஒரு செவிலி எங்களது அழகான குழந்தையுடன் வெளியே வந்தார். என்னிடம் அக்குழந்தையை கொடுத்து விவரங்களை சொன்னார். எனது குழந்தைக்கு என் மார்பை சிறிது நேரம் கொடுப்பதற்காக நான் எனது சட்டையை கழட்டினேன்'' என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

''உங்களால் மார்புக் காம்பினை பயன்படுத்தி உண்மையாக பால் ஊட்ட முடியும். இது உங்களுக்கு சாத்தியப்படுமா?' என செவிலியர் கேட்டார்.

''ஏன் முடியாது? '' என்றேன் நான்.

செவிலியர் ஒரு பிளாஸ்டிக் முலைகாம்பு உறை ஒன்றை ஒரு குழாயுடன் இணைந்து ஊசி மற்றும் சில வழிமுறைகளைப் பயன்படுத்தி, அந்த பிளாஸ்டிக் முலைகாம்பு உறையை மேக்மில்லனின் மார்புகாம்போடு பொருத்தினார்.

'' நான் இதுவரை பால் தந்தது கிடையாது. ஒரு குழந்தைக்கு மார்பில் இருந்து பால் ஊட்டிய முதல் ஆண் நான் தான் . எனது மாமியார் என்னைப் பார்த்தபோது என்ன நடக்கிறது என்பதை நம்பமுடியாமல் பார்த்தார். தாத்தாவுக்கு என்னிடம் சொல்ல எதுவுமில்லையென்றாலும் இறுதியில் அங்கு வந்து நின்றார் '' என்கிறார் அந்த தந்தை.

'' எனது குட்டி பெண் குழந்தையை நான் பார்த்தவுடன் எனக்கு ஒரு பந்தம் உருவானது. குழந்தையை பிடித்து அவளுக்கு என் மார்பை கொடுத்தவுடன் அவளால் மார்பில் இருந்து பால் அருந்த முடியும் என நம்பினேன்'' என்றார்.

இந்தச் செய்தியை அவர் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார்.

மாக்ஸாமில்லியனின் இந்த 'தந்தைப் பால்' முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகியது.

'' MOM என எழுதிய டாட்டூவுக்கு கீழ் சரியான விஷயம் நடந்துள்ளது'' என ஒரு பேஸ்புக் பயனர் பின்னூட்டம் இட்டுள்ளார்.

வேறு சிலரோ இப்படியொரு வாய்ப்பை வழங்கிய செவிலியரை பாராட்டினார். வேறு சிலர் இது மிகவும் வினோதமாக இருக்கிறது என பதிவிட்டுள்ளனர். தாயால் தன் மார்பில் இருந்து பால் ஊட்டமுடியாவிட்டால் பாட்டிலை பயன்படுத்துங்கள் என பலர் பதிவிட்டனர்.

இருப்பினும் இந்த பேஸ்புக் பதிவு முப்பதாயிரம் தடவைக்கு மேல் பகிரப்பட்டுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான பேஸ்புக் ரியாக்சன் கிடைத்துள்ளது. எந்தவொரு தந்தையும் செய்யமுடிவதைத்தான் நானும் செய்தேன் என மாக்ஸாமில்லியன் தெரிவித்துள்ளார்.

''நான் ஒரு நல்ல தந்தையாக இருப்பதற்கும் செவிலியர்களுக்கு ஹீரோவாக இருப்பதற்கும்தான் அதைச் செய்தேன். உண்மையில் செவிலியர்கள்தான் சூப்பர் ஹீரோக்கள்''

'' அம்மாவையும் மறந்துவிடாதீர்கள். நான் அவருக்காகவும்தான் செய்தேன்'' என்கிறார் மாக்ஸாமில்லியன்.

தாயும் சேயும் தற்போது நலம் என அவர் பேஸ்புக் பதிவில் எழுதியுள்ளார்.

BBC

No comments

Powered by Blogger.