Header Ads



தூக்குத் தண்டனை கைதிகள் விபரம், ஜனாதிபதிக்கு செல்கிறது

போதைப் பொருள் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிறைக் கைதிகளின் தகவல்களை தனக்குப் பெற்றுத் தருமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரலவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று (10) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தூக்குத் தண்டனை தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு  பெரும்பாலான அமைச்சர்கள் தமது கைகளை உயர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

போதைப் பொருள் வியாபாரத்திலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்கு தனக்கு வெறுப்புடனாவது இந்த தீர்மானத்தை எடுக்க வேண்டியுள்ளதாகவும் ஜனாதிபதி அமைச்சரவையில் கூறியதாகவும் சிரேஷ்ட அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

2

போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நாட்டில் மீண்டும் தூக்குத் தண்டனையை செயற்படுத்த இன்று (10) கூடிய அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர இதனைக் கூறியுள்ளார்.

நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் போதைப் பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வரலாற்றில் ஒருவரை நிலையாக நிற்க வைத்து கொலை செய்தல், தலையைத் துண்டித்து கொலை செய்தல், தண்ணீரில் அமிழ்த்து கொலை செய்தல் உட்பட மரண தண்டனை முறைமைகள் காணப்பட்ட போதிலும், முதல் முறையாக ஒருவரை தூக்கில் தொங்க வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது 1812 ஆம் ஆண்டு பெப்ருவரி மாதம் 10 ஆம் திகதியே ஆகும்.

இலங்கையில் கடைசியாக ஒருவருக்கு மரண தண்டனையாக தூக்கில் போட்டது 1976 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி ஆகும். அன்று முதல் கடந்த 42 வருடங்களாக தூக்குத் தண்டனை நாட்டில் அமுலில் இருக்க வில்லை.
நாட்டுச் சட்டத்தின் படி, அரசுக்கு எதிராக சதி செய்தல், இராணுவ கிளர்ச்சி செய்தல், போதைப் பொருள் வியாபாரம், கொலை செய்தல் போன்ற குற்றச் செயல்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.   (மு)

No comments

Powered by Blogger.