மரண தண்டனையை அமுல்படுத்த முடியாது - பேராசிரியர் பீரிஸ்
இலங்கையில் மரண தண்டனையை அமுல்படுத்த முடியாது. மரண தண்டனை தொடர்பில் சர்வதேச உடன்படிக்கைகளில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். அத்துடன் விசேட நீதிமன்றத்தின் மூலம் நியாயம் நிலைநாட்டப்படப்போவதில்லை. நீதிமன்ற நடவடிக்கைகளை அரசியல்மயப்படுத்துவதற்கே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பெளத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மக்கள், வாழ்வாதாரத்தை கொண்டு நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அதனால் அரசாங்கத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். ஆகவே அதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்குப் பல்வேறு உபாயங்களை அரசாங்கம் பிரயோகித்து வருகிறது. அதற்காக ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு விவகாரத்தை வெளிக்கிளப்பி விடுகிறது. அதன் பின்னர் ஊடகங்களும் அதன்பால் ஈர்க்கப்பட்டு விடுகின்றன.
அதற்கிணங்க தற்போது போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டணை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனையை அமுல்படுத்துவது குறித்து கவனம் திருப்பப்பட்டுள்ளது. எனினும் அத்தண்டனையை அமுல்படுத்த முடியாது. ஏனெனில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் மேன்முறையீடு செய்துள்ளனர். அத்தீர்ப்பு வரும் வரையில் தண்டனையை நிறைவேற்ற முடியாது. மரண தண்டனை தொடர்பில் இலங்கை, சர்வதேச உடன்படிக்கைகளில் குறிப்பிட்டுள்ள விடயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.
பெற்றோல், டீசல் விலை அதிகரிப்பு விடயத்திலும் அரசாங்கம் மக்களை ஏமாற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கிறது. அமைச்சர்கள் ஒவ்வொரு கருத்தை தெரிவிக்கின்றனர். இரவில் விலையை அதிகரித்துவிட்டு காலையில் விலை குறைக்கின்றனர். அதன்பின்னர் அமைச்சரவையில் மீண்டும் விலை அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கின்றனர்.
ஆகவே, அரசாங்கத்திடம் திட்டமிடப்பட்ட கொள்கைத்திட்டமோ ஒழுங்கமைக்கப்பட்ட வேலைத்திட்டமோ இல்லை. இதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறான நிலையில் தற்போது பேக்கரி உற்பத்திகள், பஸ் கட்டணம், ரயில்வே கட்டணம், முச்சக்கர வண்டி கட்டணம் என்பன அதிகரிக்கப்படவுள்ளன. இவை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தாது வேறு விடயங்கள் சம்பந்தமாகவே பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இவ்வார பாராளுமன்ற அமர்வில் விசேட நீதிமன்றம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம். இந்த நாட்டிலுள்ள நீதிபதிகள் தமது கடமைகளை உரிய முறையில் மேற்கொள்கின்றனர். அவர்கள் மனச்சாட்சிக்கு எதிராகப் பணியாற்றுபவர்கள் அல்ல. அவ்வாறெனின் எதற்காக விசேட நீதிமன்றம் அமைக்க வேண்டும்?
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளைப் பார்த்து அரசாங்கம் அச்சப்பட்டுள்ளது. அதனால் எவ்வாறாவது எதிர்த்தரப்பினரையும் ராஜபக் ஷ குடும்பத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். அவர்களை சிறையில் அடைக்க வேண்டும். அதற்காகவே விசேட நீதிமன்றத்தை அமைக்க முற்படுன்றனர். அதனை அடைந்து கொள்வதற்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவை அரசாங்கம் இயந்திரமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு சட்டவிரோதமான நிறுவனமாகும்.
இவ்வாறான வேலைத்திட்டங்களுக்கு எமது நீதிபதிகள் விருப்பம் இல்லை. ஆகவே விசேட நீதிமன்றமானது, நீதிமன்றம் தொடர்பில் மக்கள் மத்தியில் உள்ள நம்பிக்கையை சீர்குலைக்கும் வேலைத்திட்டமாகும். நீதிமன்ற நடவடிக்கைகளை அரசியல்மயப்டுத்துவதற்கே இவ்வாறானவற்றை அரசாங்கம் மேற்கொள்கிறது.
விசேட நீதிமன்றத்தின் மூலம் நியாயம் நிலைநாட்டப்படப் போவதில்லை. விசேட நீதிமன்றம் மற்றும் விசேட ஆணைக்குழுக்கள் மூலம் அரசியல் பழிவாங்கலுக்கே வழிகோலும். இதனை வரலாறு நெடுகிலும் அவதானிக்க முடியும். அத்துடன் குறித்த விசேட நீதிமன்றத்தில் முதலில் எதனை விசாரணை செய்ய வேண்டும் என மக்களிடம் கேட்டால் 99 சதவீதத்தினர், மத்திய வங்கி பிணைமுறி மோசடியை விசாரிக்க வேண்டும் எனக்குறிப்பிடுவர்.
பதவிக்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். அதலிருந்து அரசாங்கத்தால் விடுபட முடியாது. தேர்தல் நடைபெற்றால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிடைத்த வெற்றியையும் விட விசேடமான வெற்றி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு கிடைக்கும். மாகாண சபைத் தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கையை அமைச்சர் பைஸர் முஸ்தபா கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில் பாராளுமன்றத்திற்கு முன்வைத்தார்.
எனினும் அவ்வறிக்கை மீது இன்னும் விவாதம் நடத்தப்படவில்லை. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டு ஒரு மாத காலத்திற்குள் அவ்வறிக்கை மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என சட்டமுள்ளது. எனினும் அதற்கான நடவடிக்கையை சபாநாயகர் எடுக்கவில்லை. இதேவேளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கோரி கூட்டு எதிர்க்கட்சி பாரிய பேரணி ஒன்று நடத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
trying to protect drug dealers and ready to spoil the life of school children....
ReplyDelete