Header Ads



தன்னை ஏசு கிறிஸ்து என்று அறிவித்து, அப்பாவி மக்களை கொன்றவனை தூக்கிலிட்டது ஜப்பான்


ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் சுரங்கப்பாதை ஒன்றில், 1995-ம் ஆண்டு, மார்ச் மாதம் 20-ந் தேதி சரின் என்ற நச்சு வாயு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த நச்சு வாயு, இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியில் நாஜிக்களால் உருவாக்கப்பட்ட ஆர்கனோ பாஸ்பரஸ் வகை நரம்பு வாயு ஆகும்.

இந்த வாயு தாக்குதலுக்கு ஆளான அப்பாவி மக்கள் சில விநாடிகளில் வாந்தி எடுத்தனர், சிலருடைய கண்களில் பார்வை பறிபோனது, சிலர் பக்கவாதத்துக்கு ஆளாகினர். 13 பேர் உயிரிழந்தனர்.

பெரும்பாலும் குற்றச்சம்பவங்களே நடைபெறாத ஜப்பானில் இந்த நச்சு வாயு தாக்குதல் சம்பவம், ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி எடுத்து விட்டது.

இந்த தாக்குதலை தொடர்ந்து பல இடங்களில் ஹைட்ரஜன் சயனைடு தாக்குதலுக்கு முயற்சிகள் நடந்து, அவை முறியடிக்கப்பட்டன.

இந்த சம்பவங்களில், அம் ஷின்ரிக்யோ என்ற மத வழிபாட்டுக்குழுவின் தலைவரான ஷோகோ அசஹாரா (வயது 63) என்ற சாமியாருக்கும், அவரது குழுவை சேர்ந்த 6 பேருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். டோக்கியோ சிறையில் அடைக்கப்பட்டனர்.

வழக்கு விசாரணையின்போது, ஷோகோ அசஹாராவும், அவரது குழுவை சேர்ந்த டொமோமசா நககவா (55), கியோஹைட் ஹயகவா (68), யோஷிஹிரோ இனாவ் (48), மசாமி சுசியா (53), செய்ச்சி என்டு (58) டொமோமிட்சு நீமி (54) ஆகிய 6 பேரும் குற்றச்சாட்டுகளை மறுத்தனர்.

ஆனாலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து அவர்களுக்கு டோக்கியோ மாவட்ட கோர்ட்டு 2004-ம் ஆண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்பை அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு 2006-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உறுதி செய்தது. ஆனாலும் அனைவரும் மரண தண்டனையில் இருந்து தப்புவதற்கு பல்வேறு சட்டப்போராட்டங்களை நடத்தினர். இவை அனைத்தும் கடந்த ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தன. அவற்றின் முடிவுகள், சாமியாருக்கும், அவரது குழுவை சேர்ந்தவர்களுக்கும் எதிராகவே அமைந்தன.

இந்த நிலையில், ஷோகாவும், மற்ற 6 பேரும் டோக்கியோ சிறையில் வைத்து நேற்று ஒரே நாளில் தூக்கில் போடப்பட்டனர். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜப்பானில் வெகு அபூர்வமாகத்தான் மரண தண்டனை விதிக்கவும், நிறைவேற்றவும் படுகிறது.

மேலும், மரண தண்டனை நிறைவேற்றுவது பற்றி முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடப்படுவதும் இல்லை. தூக்கில் போடப்படுவதற்கு சில மணி நேரத்துக்கு முன்புதான் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கே தகவல் தெரிவிக்கிற நடைமுறை பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.

தூக்கில் போடப்பட்ட சாமியார் ஷோகோ, இந்து மற்றும் புத்த மத நம்பிக்கைகளை இணைத்து அம் ஷின்ரிக்யோ மத வழிபாட்டு குழுவை தொடங்கினார். பின்னர் இவர் தன்னைத்தானே ஏசு கிறிஸ்து என்று அறிவித்துக்கொண்டார். அதுமட்டுமின்றி புத்தருக்கு பிறகு தான் ஞான ஒளி பெற்றவர் என்றும் அறிவித்துக்கொண்டார்.

1989-ம் ஆண்டுதான் ஷோகோவின் குழு, மத அமைப்பு என்ற அங்கீகாரத்தை பெற்றது. அதே நேரத்தில் இந்த அமைப்பு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மத ரீதியிலான பயங்கரவாத அமைப்பாக அறிவித்து தடை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.