உலகமே எதிர்த்தாலும், தூக்குத் தண்டனையை நிறைவேற்றுவோம்
ஐரோப்பிய ஒன்றியம் அல்ல முழு உலகமே எதிர்த்தாலும் மரண தண்டனையை நிறைவேற்றுவோம். இவ்விடயத்தில் ஒரு போதும் அரசாங்கம் பின்வாங்காதென விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டாமென மேற்குலக நாடுகள் சில விடயங்களை மாத்திரம் குறிப்பிட்டு கருத்துக்களை தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசாங்கத்தின் தீர்மானத்திற்கான காரணங்களை எடுத்துரைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டார்
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
போதைப்பொருள் குற்றங்களுக்காக மரணதண்டனை விதிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளன. இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கு கூட்டாக கடிதங்களை அனுப்பி வைத்துள்ளன . எமது நாட்டு நீதித்துறை விவகாரங்களில் மேற்குலக நாடுகள் ஒரு வரையறைகளுக்குட்பட்டே செயற்பட வேண்டும்.
இலங்கையில் மரண தண்டனை அமுல்படுத்தாமல் பெயரளவிலே காணப்பட்டது. இதன் காரணமாகவே போதைப் பொருட்களின் பாவனை மற்றும் போதை வியாபாரம் அதிகரித்துள்ளது என்றும் கருதமுடியும். சிறைக்குள்ளிருந்து கொண்டு பாரிய போதைப்பொருட்கள் வியாபாரங்களில் ஈடுபடுவது என்பது பாரிய வியாபார வலைப்பின்னலாகவே காணப்படுகின்றது. அரசாங்கம் புதிதாக மரண தண்டனை விதித்து அவர்களை தூக்கிலிட முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்ற விடயத்தினை மேற்குலக நாடுகள் புரிந்துக்கொள்ள வேண்டும்.
அரசாங்கம் போதைப்பொருட்களின் பாவனையை முற்றாக அழிப்பதற்கு கடந்த காலங்களில் பாரிய முயற்சிகளை மேற்கொண்டன. இதில் ஒரு கட்டமாகவே இந்த மரண தண்டனை காணப்படுகின்றது. நீதித்துறையினால் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு மரண தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு மரண தண்டனையினை வழங்குவது எவ்வித மனித உரிமை மீறல்களும் கிடையாது.
எமது நாட்டில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் மேற்குலக நாடுகளுக்கு எவ்வித அக்கறையும் கிடையாது. முக்கிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும்போது அதற்கு எதிராக அழுத்தங்களை பிரயோகிப்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் . ஜனாதிபதியின் இத்தீர்மானம் தொடர்பில் நாட்டு மக்கள் பெருமளவு எதிர்பார்ப்புக்களுடன் காணப்படுகின்றனர்.
பாராளுமன்ற உறுப்பினர்களும் முக்கியமாக பௌத்த மத குருமார்களும் மரண தண்டனையினை வழங்க வேண்டுமென்ற தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது. ஆகவே, நாட்டு மக்களின் விருப்பங்களுக்கு அமைய அரசாங்கம் செயற்பட வேண்டுமே தவிர சர்வதேச சமூகத்தின் விருப்பத்திற்கல்ல. இவ்விடயம் தொடர்பில் விரைவில் அரசாங்க தரப்பினருடன் பேச்சுவார்ததைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
Post a Comment