மூன்றரை வயது சிறுமியை ஸ்பரிசம் செய்த 73 வயது முதியவர் - 8 வருடங்களின் பின் இன்று கடூழிய சிறை
தவறான முறையில் தொடுதல் குற்றத்திற்கு ஆளான 73 வயதுடைய பாடசாலை வேன் ஓட்டுனருக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2010 ஆம் ஆண்டு மூன்றரை வயது சிறுமி ஒருவரையே குறித்த நபர் இவ்வாறு தவறான முறையில் ஸ்பரிசம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
7 வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் குற்றவாளிக்கு 25,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தண்டப்பணத்தை செலுத்தவில்லை எனின் அவர் மேலும் 1 வருடம் கடூழிய சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த சிறுமிக்கு 50,000 நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் அவ்வாறு நஷ்ட ஈடு வழங்கவில்லை எனின் அதற்கு மேலதிகமாக இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டணை வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு மருதானை பகுதியில் வைத்து மூன்றரை வயது சிறுமி ஒருவரை முன்பள்ளிக்கு அழைத்து செல்லும் போது சிறுமியை தவறான முறையில் ஸ்பரிசம் செய்ததாக அப்போது 65 வயதான பாடசாலை வேன் ஓட்டுனர் மீது குற்றம் சுமத்தப்பட்டு சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன் நீண்ட விசாரணைகளின் பின்னர் குற்றவாளிக்கு எதிரான குற்றம் எவ்வத சந்தேகமும் இன்றி நிரூபிக்கப்பட்டதாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க தெரிவித்துள்ளார்.
அதனடிப்டையில் குற்றவாளிக்கு தண்டணை வழங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.
Post a Comment