அமெரிக்காவில் சிறுவர்களை காப்பாற்ற முயன்று, உயிரிழந்த 2 சவூதி மாணவர்களுக்கு விருது
அமெரிக்காவில் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் இரண்டு சிறுவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் நீரில் மூழ்கி உயிரிழந்த புலமைப்பரிசில் மாணவர்களான தீப் அல் யாமி மற்றும் ஜாசெர் அல்-ரக்காஹ் ஆகியோரின் வீரதீரச் செயலை அங்கீகரிக்கும் வகையில் கடந்த செவ்வாய்கிழமையன்று சவூதி அரேபிய மன்னர் சல்மானினால் முதலாம் தர மன்னர் அப்துல் அஸீஸ் விருதும் அவர்களது பின்னுரித்தாளிகளுக்கு ஒரு மில்லியன் சவூதி ரியால் (0.26 மில்லியன் அமெரிக்க டொலர்) பணமும் வழங்கி வைக்கப்பட்டன.
ஜித்தாவிலுள்ள அல் சலாம் அரண்மனை அலுவலகத்தின் மாணவர்களின் பெற்றோரை வரவேற்ற மன்னர் சல்மான் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்ததோடு சிறுவர்களை காப்பாற்றுவதற்காக அந்த மாணவர்கள் செய்த தியாகம் மனிதாபிமானப் பணியாகும் என வர்ணித்தார்.
தமது பிள்ளைகளை கௌரவப்படுத்தியமைக்காக மாணவர்களின் பெற்றோர் மன்னருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.
27 வயதான தீப் அல்-யாமியும் 25 வயதான அல்-ரக்காஹ்வும் அமெரிக்காவில் வீதியால் சென்றுகொண்டிருந்தபோது நீரோட்டத்தில் சிக்கிக் கொண்ட தமது பிள்ளைகளை காப்பாற்ற முடியாது செய்வதறியாது உதவி கேட்டுக்கொண்டிருந்த தாயொருவரைக் கண்டனர். பலர் உதவ முன்வந்தபோதிலும் கடுமையான நீரோட்டம் காரணமாக சிறுவர்களை அவர்களால் நெருங்க முடியாமல் இருந்தது. இந்த நிலையில் ஆற்றில் குதித்த இருவரும் நீரோட்டத்தில் சிக்கி உயிரிழந்தனர். இரு சிறுவர்களும் நீந்திக் கரை சேர்ந்தனர்.
ஹாட்போர்ட் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் நான்காம் ஆண்டில் அல்-யாமி கல்வி கற்றுக்கொண்டிருந்த அதேவேளை அல்-ரக்காஹ் நியூ இங்லேண்ட் பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியல்துறையில் கல்விகற்றுக் கொண்டிருந்தார். பட்டம் பெறுவதற்கு ஒரு மாதம் இருக்கும்போதே இவர்கள் இருவரும் மரணித்துள்ளனர்.
Did America recognize their deed??
ReplyDelete