247 மரண தண்டனை கைதிகளுக்கு, மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதி
247 பேருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மரண தண்டனையில் இருந்து பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீதி அமைச்சின் 2017ஆம் ஆண்டுக்கான நீதித்துறை செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதியில் இருந்து 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மரணதண்டனை வழங்கப்பட்ட 247 பேருக்கே இவ்வாறு ஜனாதிபதியால் மரண தண்டனையில் இருந்து பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கேற்ப 34 மரண தண்டனை கைதிகளுக்கு 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் திகதியிலும், 83 மரண தண்டனை கைதிகளுக்கு 2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதியிலும், 70 மரண தண்டனை கைதிகளுக்கு 2016ஆம் ஆண்டு மே மாதம் 20ஆம் திகதியிலும், மேலும் 60 மரண தண்டனை கைதிகளுக்கு 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதியிலும் ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு மரண தண்டனையில் இருந்து ஜனாதிபதியால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ள மேற்படி கைதிகளுக்கு அவர்களின் மரண தண்டனையை ஆயுட்கால சிறைத்தண்டனையாக மாற்றுவதற்கு முன்னாள் நீதி அமைச்சரால் ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கேற்பவே பரிந்துரை செய்யப்பட்ட அனைவரினதும் மரண தண்டனையில் இருந்து ஜனாதிபதி மன்னிப்பை வழங்கியுள்ளதாகவும் இதனைத் தொடர்ந்து அவர்களின் மரண தண்டனையை ஆயுட்கால சிறைத்தண்டனையாக மாற்றுவதற்காக நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு அவர்களின் தண்டனை காலத்தை குறைப்பதற்காக சம்பந்தப்பட்ட கைதிகளுக்கு நேர்முக விசாரணை நடவடிக்கைகளையும் நீதி அமைச்சு ஆரம்பித்துள்ளதுடன் அவர்களிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிகளுக்கு அவர்களின் ஆயுட் சிறைத்தண்டனை விரைவில் குறைக்கப்படவுள்ளதாகவும் நீதி அமைச்சரின் அறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment