ஞானசாரரை மன்னிக்குமாறு கேட்கமாட்டோம் - 6 மாத சிறை அவரது மத ஆளுமையை உயர்த்துமாம்
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள ஆறு மாதகால கடூழிய சிறைவாசம் என்பது அவரது மத ஆளுமையினை மேம்படுத்துவதற்கான வழிமுறையாகவே அமையும் என பொதுபலசேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் சுமங்கல நந்த தேரர் தெரிவித்தார்.
ஞானசார தேரரின் உடல் ஆரோக்கியம் கருதி இன்று -18 பொதுராஜ விகாரையின் முன்னிலையில் பல நூற்றுக்கணக்கான பெளத்த மத குருமார்களும் பொது மக்களும் சத்தியகிரக மத அனுஷ்டானத்தில் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
சிறைவாசம் அனுபவிக்கும் பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் விடுதலையாகி வந்ததன் பின்னரும் அவரது சமூக சேவைகள் தொடரும். அவரது பணிகளை முடக்கவே அரசாங்கம் அவருக்கு நியாயமற்ற முறையில் கடூழிய சிறை தண்டனையை வழங்கியுள்ளது.
இராணுவத்தினருக்கு அரசாங்கத்தினால் இழைக்கப்படுகின்ற அநீதிகளை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலே அவர் ஆத்திரமடடைந்து எதிர்தரப்பினரை சாடினார். இவ்விடயம் சட்டத்தின் பார்வையில் குற்றமாக காணப்பட்டாலும். மத ரீதியில் ஒருபோதும் குற்றமற்ற விடயமாகவே காணப்படுகின்றது.
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி நாட்டின் பொது அமைதியை ஒருபோதும் சீர்குலைக்க மாட்டோம். அவரை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதியிடம் கோரிக்கைகளையும் சமர்ப்பிக்க மாட்டோம் அவ்வாறு செயற்படுவது அவரது கொள்கைகளுக்கு முரணானதாக அமையும். ஆறு மாத கடூழிய சிறைவாசம் என்பது அவரது மத ஆளுமையினை மேம்படுத்துவதற்கான வழிமுறையாகவே அமையும் என்றார்.
Post a Comment