அபாயா விவகாரத்தை ஆராய, கல்வியமைச்சினால் குழு நியமனம்
சமயம் சார்ந்த ஒரு விடயத்தை பற்றி பல்வேறு வகைகளிலும் விமர்சித்து அதனை இனப்பிரச்சினையாக்கி விடக் கூடாது. எமது நாட்டில் சிறுபான்மையினர்களுக்கிடையிலான இனப்பிரச்சினை ஒன்று எதிர்காலத்தில் ஏற்படாமல் தடுக்க வேண்டியது அவசியம் என்ற வகையில் பாடசாலைகளுக்கு முஸ்லிம் ஆசிரியர்கள் எவ்வாறு சமுகமளிக்க வேண்டும் என்பது தொடர்பில் பிரச்சினைகள் ஏற்படாமல் தீர்வு காணப்பட வேண்டுமென கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் இஸ்லாம் மத ஆசிரியைகள் அபாயா ஆடை அணிதல் தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கல்வி அமைச்சின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் தொடர்ந்தும் விளக்கமளிக்கையில்,
திருகோணமலை ஸ்ரீ சண்முகா கல்லூரியில் தற்போது எழுந்துள்ள பிரச்சினை மத ரீதியான பிரச்சினை ஆகும். எனவே இது தொடர்பில் நினைத்த மாத்திரத்தில் தீர்வினை எடுக்க முடியாது. இது கல்விசார் பிரச்சினையாகவும் காணப்படுகின்றமையால் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து சிறந்த தீர்வினைக் காண்பதற்காக கல்வி அமைச்சினால் மேல் மட்டக் குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
எனவே அக்குழுவின் தீர்மானத்தின் பின்னரே இது தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானத்தை குறிப்பி முடியும். அது வரையில் அவ்வாசிரியர்களை தற்காலிக இடமாற்றம் செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு மதம் சார்பான விடயமாகையினால் மதத் தலைவர்களுடனும் இது தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்வது சிறப்பாக அமையும் என நாம் கருதுகின்றோம். எவ்வாறிருப்பினும் இந்த விடயத்தினை பற்றி விமர்சித்து அதனை எதிர்காலத்தில் இனங்களுக்கி டையிலான முறுகலாக உருவாக இடமளிக்கக் கூடாது என்றார்.
-Vidivelli
Post a Comment