பௌசிக்கு, பிரதி சபாநாயகர் பதவியா..?
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எச்.எம்.பௌஸிக்கு பிரதி சபாநாயகர் பதவி வழங்கப்படலாமெனத் தெரிவிக்கப்படுகின்றது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சராக இருந்த ஏ.எச்.எம்.பௌஸிக்கு நேற்று இராஜாங்க மற்றும் பிரதியமைச்சு மறுசீரமைப்பின்போது எந்த அமைச்சுப்பதவிகளும் வழங்கப்படவில்லை. ஏற்கனவே குறித்த இராஜாங்க அமைச்சுப் பதவி வகிக்கும் அவர் இராஜினாமா செய்யவுமில்லை.
தேசிய நல்லிணக்கம் மற்றும் தேசிய கலந்துரையாடல், அரச கரும மொழிகள் அமைச்சராக மனோ கணேசனும் பிரதியமைச்சராக அலி ஸாஹிர் மௌலானாவும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதுதவிர, கடற்றொழில் , நீரியல் வள அபிவிருத்தி மற்றும் கிராமிய பொருளாதார அமைச்சராக நேற்று முன்தினம் விஜித் விஜயமுனி சொய்சா பதவியேற்றதோடு குறித்த அமைச்சின் இராஜாங்க அமைச்சராக துலிப் வேதாரச்சி மற்றும் பிரதியமைச்சராக அமீர் அலி ஆகியோர் நேற்றுப் பதவியேற்றனர். இந்நிலையில் நல்லிணக்க அமைச்சிலும் இவ்வாறு மூன்று அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் பதவிக்கு ஏ.எச்.எம். பௌஸியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஏற்கனவே, அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் 24 பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு குறித்த பதவிக்கு கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்குமாறு பிரதமரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும், குறித்த பதவியை பெற்றுக்கொள்ளும் விரும்பம் இல்லையெனவும் அந்தப் பதவியிலிருந்தால் பாராளுமன்றில் குரல் எழுப்பும் சந்தர்ப்பம் இல்லாமல்போய்விடும் என முஜிபுர் ரஹ்மான் எம்.பி. கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
-Vidivelli
Post a Comment