சுவனப் பாதையை இலகுவாக்கிய, பாதி அல் பத்ஷ்
-M.I.Abdul Nazar-
தியாகியாக மாறுவதற்கு ஒருவர் பலஸ்தீனத்தில்தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்று நிரூபித்த முன்மாதிரிமிக்க நபரொருவர், கௌரவத்துடனும் மதிப்புடனும் மரணிப்பதற்கு நீங்கள் யுத்த களத்தில்தான் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை எனக் காட்டிய ஒருவர், கல்விப் புலமையினால் இஸ்லாமிய வேறுபாடுகள், முரண்பாடுகளை சீர்செய்து மிகப் பணிவான முறையில் ஆரம்ப மட்டத்திலேயே தொடங்க முடியும் எனவும் நிரூபித்த ஒருவர், தொடர்பில் பேசுவதற்கு பேசுவதற்கு எங்கிருந்து ஆரம்பிப்பது?
கலாநிதி ஷெய்க் பாதி அல் பத்ஷ் கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் ஒருவர். பலஸ்தீனத்தின் வீரத்திற்கும், தியாகத்திற்குமான அடையாளமாக விளங்கியவர். பலஸ்தீன மக்களுக்கு மிகவும் மனவுறுதியுடன் சேவையாற்றியவர். ஆனால், கிட்டத்தட்ட 5,000 மைல்களுக்கு அப்பால் மலேசியத் தலைநகர் கொலம்பூரில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
அவர் ஒரு கல்விமான். அல்குர்ஆனோடு மிக நெருக்கமாக இருந்தவர். இதயத்திலும், ஞாபகத்திலும் அதை பதிய வைத்திருந்தவர். மின்சாரப் பொறியியல்துறையில் முன்னோடியான ஒருவராக இருந்தவர். சுபஹ் தொழுகைக்காக பள்ளிவாயலுக்குச் சென்று கொண்டிருந்தபோது பாதி அல் பத்ஷ் படுகொலை செய்யப்பட்டார். அவர்மீது சுடப்பட்ட 14 துப்பாக்கி ரவைகளில் பெரும்பாலானவை அவரது உடலைத் துளைத்திருந்தன.
இந்தக் கோழைத்தனமான படுகொலையின் சூத்திரதாரிகளைக் கண்டறிய மலேசிய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டிருக்கும் நிலையில், கொலைகளினாலேயே உருவாக்கப்பட்டு போஷிக்கப்படுகின்ற போலித்தனமான, விரிவாக்கம் செய்யும் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டினால் ஊக்குவிக்கப்படுகின்ற கபடத்தனமான இஸ்ரேலிய மொஸாட்டின் கைவரிசையாகவே இந்த நிகழ்வு பார்க்கப்படுகின்றது.
'பாதி அல் பத்ஷின் படுகொலை மொஸாட்டுக்குரிய இயல்பான பண்பாகும். ஹமாஸுக்காக பணியாற்றும் பொறியியலாளர் ஒருவரே இலக்கு' என இஸ்ரேல் ஹையோமிலுள்ள இராணுவ பகுப்பாய்வாளர் யோஐவ் லைமோர் தெரிவித்தார்.
பேராசிரியராக வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த விரிவுரையாளரான பாதி அல் பத்ஷ் சிறந்த கணவராகவும், மூன்று குழந்தைகளின் தந்தையாகவும் இருந்தார். அல் பத்ஷ் 2009 ஆம் ஆண்டு காஸா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் மின்னியல் பொறியியல்துறையில் இளமாணி பட்டப்படிப்பையும், ஒவ்வொரு பகுதியிலும் 85 வீதத்திற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்று முதுமாணிப் பட்டத்தையும் பெற்றதோடு, கடந்த 2015 ஆம் ஆண்டு மலேசியா பல்கலைக்கழகத்தில் அதே துறையில் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றார்.
அல் பத்ஷ் தனது தாய் மண்ணின் மீது மிகுந்த பற்றுதல் உள்ளவராக இருந்தார். தனது அறிவினை காஸாவுக்கே மீள வழங்கி குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார்.
பாரிய கல்விச் செலவு மற்றும் நீண்ட தூரப் பயணம் என பல சிரமங்கள் இருநதும், ஏன் மலேசியாவுக்கு செல்ல தீர்மானித்தீர்கள்? என அவரிடம் கேட்கப்பட்டபோது அவர் கூறிய பதில் இதுதான். ''புலமைப் பரிசில் கிடைக்குமா, இல்லையா என்ற உறுதியற்ற தன்மை காணப்பட்டபோதிலும், நான் அந்த அபாயகரமான தன்மையினை எதிர்நோக்க துணிவது எனத் தீர்மானித்தேன். இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஹதீஸ் ஒன்றினை ஞாபகப்படுத்த விரும்புகின்றேன் கல்வியைத்தேடி யார் பணிக்கிறாரோ அவருக்கு அல்லாஹ் சுவனத்திற்கான பாதையினை இலகுவாக்குகின்றான்''
கல்வி கற்றுக்கொண்டிருக்கும்போது அவரது அடைவுகளைப் பற்றி பேசும்போது தான் 30 இற்கும் மேற்பட்ட ஜேர்னல்களையும் ஆய்வுக் கட்டுரைகளையும் சமர்ப்பித்துள்ளதாகவும் இங்கிலாந்து, பின்லாந்து, ஸ்பெயின், சவூதி அரேபியா அதேபோன்று மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற மாநாடுகளில் பங்குபற்றியதாகவும், அவற்றுள் பெரும்பாலான மாநாட்டில் பங்குபற்றச் சென்ற குழுக்களுக்கு தலைமைதாங்கிச் சென்றதாகவும் தெரிவித்திருந்தார். மலேசியப் பிரதமர் நாஜிப் ரஸாக்கிடமிருந்து 'சிறந்த மாணவருக்கான' விருதினையும் அல்-பத்ஷ் பெற்றிருந்தார்.
அவரது கல்விக்துறைக்குப் புறம்பாக, மலேசியாவில் நடைபெற்ற ஆறாவது சர்வதேச பட்டப்பின்படிப்பு குர்ஆன் போட்டி மற்றும் குர்ஆனை முழுமையாக மனனம் செய்தமைக்காக முதலிடத்தைப் பெற்றதோடு குர்ஆன் ஓதலுக்கான சான்றிதழையும் பெற்றார். இவை அனைத்திற்கும் மேலாக, பலஸ்தீன பிரச்சினைகள் தொடர்பாக முஸ்லிம்களுக்கு தெளிவூட்டுவதற்காக பள்ளிவாயல்கள், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். மலேசிய இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கான பயிற்சியில் முனைப்புடன் ஈடுபட்டார். பின்னர் கோலாலம்பூரிலுள்ள அல்-இத்கான் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட மலேசியாவின் வருடாந்த குர்ஆன் போட்டியில் நடுவர் குழாமில் ஒருவராக அல்-பத்ஷ் இணைந்து கொண்டார். இவை அனைத்தையும் அவர் தனது 35 வயதிற்குள் அடைந்து கொண்டார்.
பாதி அல்-பத்ஷ் படுகொலை தொடர்பான சில பிரதிபலிப்புக்கள்
ஏலவே குறிப்பிடப்பட்டது போல, அல்-பத்ஷ் தனது கல்வியறிவினை காஸாவுடன் பகிர்ந்துகொண்டார். அதன் மூலம் அவர் 'சந்தேகத்திற்குரிய' ஒருவராக பார்க்கப்பட்டார். ஸியோனிச ஊடகங்கள் இவர் காஸாவின் இராணுவத்திற்கான ஆளில்லா விமான மற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஒருவராக அவசர அவசரமாக குற்றம் சாட்டின.
அவரது பங்களிப்பினை தவிர்த்துவிட்டுப் பார்த்தால், இஸ்ரேலைப் பொறுத்தவரை வெறுமனே பலஸ்தீனர்கள் அங்கு வாழ்வதே அவர்களுக்கு அச்சுறுத்தல்தான். பலஸ்தீன மக்களுக்கு சேவைகளை வழங்கும் இராணுவ முன்னோடிகளாக இருக்கலாம் அல்லது அல்-பத்ஷ் விவகாரமாக இருக்கலாம் அல்லது வேறு நபர்களாக இருக்கலாம் அல்லது பொதுமக்களாக இருக்கலாம், யாராக இருந்தாலும் அவர்களை கொல்வதற்கு அது அனுமதி வழங்குகின்றது.
ஸியோனிசவாதிகளால் பலஸ்தீனர்கள் கொல்லப்படுவது அவர்கள் அச்சுறுத்தலாக இருக்கிறார்கள் என்பதனாலல்ல, அவர்களது மனவுறுதியினாலேயாகும். பெண்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்படுவதற்கு உண்மையில் எந்தக் காரணமும் இல்லை.. உதாரணமாக, பெண்கள் தமது மனவுறுதியினை தமது பிள்ளைகளுக்கு போதிக்கின்றார்கள், பலஸ்தீனர்களின் ஆதங்கத்தையும் எதிர்பார்ப்பையும் போதிக்கின்றார்கள். இது தன்னாட்சி உணர்வுகொண்ட ஒரு தலைமுறையினை அழிக்கும் திட்டமிட்ட செயலாகும்.
இதில் தோல்வியடைந்த ஸியோனிச யுத்தவெறிபிடித்தவர்கள் சிறுவர்கள் மீது பாறாங்கற்களை உருட்டி விட்டும், எல்லை வேலிக்கருகில் வரவழைத்தும் கொல்கின்றனர். இவ்வாறான படுகொலைகள் அரசியல் ரீதியாக அவர்களுக்கு வீரச் செயலாகப் பார்க்கப்படுகின்றது. அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கும் நீதி நியாயம் என்பது எப்படி இருக்குமென்றால், மேலே கூறப்பட்ட சினைப்பர் தாக்குதலை மேற்கொண்டவர்களுக்கு பதக்கம் வழங்குவது என்ற பாதுகாப்பு அமைச்சரின் கூற்று தக்க சான்றாகும்.
அவர்களது அரசாங்கத்தின் சூழ்ச்சியின் தராதரம் உச்சநிலையில் இருப்பதனை அவர்கள் மீள வலியுறுத்துவதன் மூலம் சியோனிஸ அரக்கர்கள் வெட்கம் கெட்டவர்களாகக் காணப்படுகின்றனர். அத்தகைய கொடூரத்தன்மை கொண்ட அரசாங்கத்திடமிருந்து நீதியை எதிர்பார்ப்பது வீணான காரியமாகும்.
2015 ஆம் ஆண்டு இஸ்ரேல் நீதியமைச்சர் பின்வருமாறு தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டிருந்தார். ''ஒவ்வொரு பயங்கரவாதிக்குப் பின்னாலும் டசின் கணக்கான ஆண்களும் பெண்களும் இருக்கின்றார்கள். அவர்கள் இல்லாவிட்டால் அவரால் பயங்கரவாதத்தில் ஈடுபட முடியாது. யுத்தத்தை உருவாக்கும் செயற்பாட்டாளர்கள் பள்ளிவாயல்களில் இருக்கின்றார்கள், அவர்களே பாடசாலைகளுக்கான கொலையாளிகளை உருவாக்கும் பாடவிதானங்களை வரைகின்றார்கள், அவர்களே புகலிடம் வழங்குகின்றார்கள், வாகனங்களை வழங்குகின்றார்கள், அவர்களே கௌரவத்தையும் தார்மீக ஆதரவையும் வழங்குகின்றனர். அவர்கள் அனைவரும் எதிரிப் படையினராவர். அவர்களது இரத்தங்கள் அனைத்தும் அவர்களது மண்டையோடுகளில் நிரப்பப்படவேண்டும். முத்தங்களோடும் மலர்ச் செண்டுகளோடும் நரகத்திற்கு தியாகிகளை அனுப்பி வைத்த தாய்மாரும் இதில் உள்ளடக்கப்பட வேண்டும். அவர்களும் தமது மகன்மாரைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும். இதைத் தவிர வேறு எதுவும் நியாயமாக இருக்காது''
மனவுறுதிமிக்க பலஸ்தீனர்களை கொல்ல வேண்டும் என்ற உணர்வூட்டப்பட்டுள்ளதால், ஆக்கிரமிப்பாளர்கள் சிறுவர்களையும், உடல் இயக்கம் இல்லாதவர்களையும் கூட விட்டுவைக்கவில்லை. காலை இழந்து சக்கரநாற்காலியில் முடங்கி இருந்த இப்ராஹிம் அபூதுரையாக இருக்கலாம் அல்லது விசேட தேவையுடைவராக தடிகளின் உதவியோடு நடமாடிய அஹமட் அபூ அகீலாக இருக்கலாம் அவர்களும் கொல்லப்பட்டனர்.
காஸாவில் கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி மீளத் திரும்புவதற்கான ஆர்ப்பாட்டத்தின்போது 40 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டதோடு 5,000 பேர் காயமடைந்தனர். அவர்களெல்லாம் பாதி அல்-பத்ஷ் அல்ல, ஆனால் அவரைப்போன்ற மனோதிடமிக்கவர்கள். அதுவே கொலைகாரர்களுக்கு பதக்கம் வழங்குவதற்கு இஸ்ரேலின் கண்களுக்கு போதுமானது.
இது பலஸ்தீனர்களுக்கான தோல்வியா?
இஸ்ரேல் என்பது வெளிநாட்டு உதவிகளாலும், சந்தர்ப்பவாத ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்கு கைத்தொழில் தொடர்பான விளம்பர வருமானங்களில் தங்கிவாழும் அலகாகும். அதனால், அறிவாளிகளையும், எழுத்தாளர்களையும் அரசியல் செயற்பாட்டாளர்களும் கொல்கின்றது. துப்பாக்கி ரவைகளினால் அதனை ஒருபோதும் நிறுத்திவிட முடியாது. இன்னொரு வகையில் கூறுவதானால், இஸ்ரேல் இது வரை எத்தனை எதிர்ப்புக்காட்டும் பலஸ்தீன தலைமை முக்கியஸ்தர்களை படுகொலை செய்துள்ளது? காஸாவில் இறுதியாக நடைபெற்ற போராட்டத்தின்போது இஸ்ரேலின் சினைப்பரினால் தாக்கப்படுவோம் என நன்கு அறிந்திருந்தும் அங்கு 30,000 பேரை கொண்டு வந்தது யார்?
மஸீன் புகஹா, துனிசியன் மொஹமட் அல்-ஸவாரி, ராயிட் அல்-அதார், அஹமட் அல் மப்ஹொப் மற்றும் நூற்றுக்கணக்கான பலஸ்தீன எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டபோதிலும், பாதி அல்-பத்ஷ் போன்ற கல்விமான்கள் பலர் நூற்றுக் கணக்கில் கொல்லப்பட்ட போதிலும், ஏழு தசாப்தத்திற்கும் மேலாக இடம்பெற்று வரும் பலஸ்தீனப் போராட்டத்தை நசுக்க ஆக்கிரமிப்பாளர்களால் முடிந்துள்ளதா?
அல்-பத்ஷ் படுகொலை செய்யப்பட்டது மிகுந்த கவலைக்குரியது. ஆனால் அச்சம் தரக்கூடியதல்ல. எதுவாக இருந்தாலும், மலேசியா அல்லது வேறு தூர இடங்களிலுள்ளவர்களின் தொடர்புகளை துண்டிப்பது எவ்வளவு தூரம் பிரயோசனமற்றது என்பதற்கு சியோனிஸவாதிகளின் செயற்பாடுகளே காட்டுகின்றன. பலஸ்தீனர்களுக்கு செய்யப்படும் எந்த உதவியும் சிறியதல்ல என்பதை இது காட்டி நிற்கிறது. அறைந்துபோகாத அவரது சேவைகள் இருப்பினும், சாதாரண மரணத்தை அவர் தழுவினாலும் அதன் மூலம் கிடைத்திருக்கும் பாடம் மில்லியன் கணக்கானோருக்கு முன்மாதிரியாக அமையும். எனவே அவரது தியாகம் பலஸ்தீனுக்கு தோல்வியல்ல, ஆனால் முஸ்லிம் உலகம் ஒரு செல்வத்தை இழந்துவிட்டது. றஹிமஹுல்லா என நாம் அவரை கௌரவிப்போம்.
அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள் - தம் ரப்பினிடத்தில் அவர்கள் உயிருடனேயே இருக்கிறார்கள் - (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகிறார்கள் என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
-Vidivelli
Post a Comment