விஞ்ஞான ரீதியில் அமைச்சரவை இடம்பெறவில்லை என்ற, குற்றச்சாட்டினை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் - மைத்ரிபால
இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆற்றிய உரை – 2018.05.02
புதிய அமைச்சரவையின் இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களாக நியமனம் பெற்ற உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். எமது தாய் நாட்டிற்கும் மக்களுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கான பலமும் சக்தியும் அதிர்ஷ்டமும் உங்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும். அத்துடன் பிரதமரும் நானும் உங்களுக்கு தேவையான சகல உதவிகளையும் ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்பதையும் இங்கு நான் தெரிவிக்க விரும்புகின்றேன்.
அமைச்சரவை நியமனம், இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் நியமனம் என்பவை தொடர்பில் கடந்த பல தசாப்த காலமாகவே எந்தவொரு அரச தலைவருக்கும் நூறு சதவீதமாக அனைவரது பாராட்டையும் பெறமுடியாத நிலையே காணப்படுகின்றது.
உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் பொறுப்புக்களை நீங்கள் உரியவாறு நிறைவேற்றுவீர்கள் என நான் நம்புகின்றேன். உரிய வர்த்தமானியின் விடயப்பரப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள செயற்பாடுகள் மட்டுமன்றி எந்தவொரு இராஜாங்க அமைச்சரும் பிரதி அமைச்சரும் தமது விடயப் பரப்பிற்கு மேலதிகமாகவும் பல சேவைகளை நிறைவேற்ற முடியும். தத்தமது ஆற்றல், திறமை, அறிவு என்பவற்றிற்கு ஏற்ப அனைவரும் தமது கடமைகளை சிறந்தவாறு நிறைவேற்ற முடியும். ஆகையினால் தமது துறையின் எல்லைகள் தொடர்பாக சிந்திப்பதை விடுத்து, தமது விடயப் பரப்பிற்கு உட்பட்டும் அதற்கு அப்பாலும் எவ்வாறு கடமைகளை நிறைவேற்றலாம் என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
தற்போது இந்த வருடத்திலும் 4 மாதங்கள் கடந்து விட்டன. அத்துடன் தாமதமடைந்துள்ள செயற்பாடுகளைப் போலவே நிறைவேற்ற வேண்டிய ஏனைய பணிகளையும் வருடாந்த அபிவிருத்தி திட்டத்தினுள் உள்வாங்கி குறித்தவொரு இலக்குடன் வினைத்திறனான முறையில் செயற்படுவதற்கான ஆற்றல், தேவை மற்றும் புரிந்துணர்வு ஆகியன எம் அனைவருக்கும் காணப்படுகின்றது. எனவே நாம் அரசாங்கம் என்ற வகையில் எமது நாட்டிற்காகவும் மக்களுக்காகவும் தற்போதுள்ள பொருளாதார நிலைமைகள் மற்றும் அரசியல் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு இந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்காக விரைவாகவும் வினைத்திறனுடனும் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும்.
நேற்று நியமனம் பெற்ற அமைச்சரவை, இன்று நியமிக்கப்பட்ட இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்ளை நிறைவேற்றப்போகும் பணிகள் தொடர்பில் நாட்டு மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக தற்போது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மத்தியில் விஞ்ஞான ரீதியில் அமைச்சரவை வகைப்படுத்தப்படும் எனக் கூறப்பட்ட போதிலும் தற்போது அவ்வாறு இடம்பெறவில்லையே என்று அதிக விமர்சனங்கள் காணப்படுகின்றன. நான் அந்த குற்றச்சாட்டினை ஏற்றுக்கொள்ள மாட்டேன். இந்த அமைச்சரவையினை புதிதாகத் திட்டமிடுகையில் பிரதமரும் நானும் கலந்துரையாடி பல்வேறு தவறுகளை நிவர்த்தி செய்தோம். அதேபோல் அமைச்சுக்களின் கீழ் செயற்படும் நிறுவனங்கள் மற்றும் அவற்றின் பணிகள் தொடர்பான வர்த்தமானியை வெளியிடும்போதும் இந்த விஞ்ஞான ரீதியான பகுப்பு தெளிவாக கருத்திற் கொள்ளப்படும் என நான் தெரிவிக்க விரும்புகின்றேன். அது தொடர்பில் எவரும் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனெனில் நாட்டு மக்கள் அனைவருமே நாம் தெரிவித்த விடயங்களை சரிவர நிறைவேற்றுவோமா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நான் அறிவேன். இதன் காரணமாகவே பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் செயற்பட்டு வந்த பல அமைச்சுக்களில் தற்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
அடுத்ததாக நிறுவன ரீதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களை பிரதமரும் நானும் தெளிவாகக் கலந்துரையாடி, விஞ்ஞான ரீதியில் நிறுவனங்களை வகைப்படுத்தி உரிய வர்த்தமானியை வெளியிட எதிர்பார்க்கின்றோம். ஆகையினால் எம் அனைவருக்கும் இவ்விடயத்தில் பாரிய பொறுப்பு காணப்படுகின்றது. எமது செயற்பாடுகள் எவ்வாறு நிறைவேற்றப்படும் என மக்கள் எம்மை அவதானித்துக் கொண்டிருக்கின்றார்கள். எதிர்க் கட்சியினர் எத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்திய போதிலும் நாம் அனைவரும் புரிந்துணர்வுடன் செயற்பட்டு, எமது அரசாங்கத்தை வெற்றிகரமாக கொண்டு செல்லவேண்டும். அதன் மூலமாக எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி இலக்குகளுடன் சிறந்த பொருளாதாரத்தையும் சிறந்த சமூக சூழலையும் ஏற்படுத்தக்கூடிய ஜனநாயக அரசியல் சமூகத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நட்புடன், ஒருவருக்கொருவர் உதவி, ஒத்தாசைகளை வழங்கி உண்மையாக செயற்படுவோம் என்ற கெளரவமான வேண்டுகோளினை உங்கள் முன் வைத்து விடைபெறுகின்றேன்.
நன்றி. வணக்கம்.
பழைய பானம் பழைய பாத்திரத்தில் வழங்கப்படுகின்றது. பானத்தையும் பாத்திரத்தையும் கண்டு வெறுப்படைந்துள்ள விருந்தினர்கள் என்ன செய்வது என தெரியாது தடுமாறுகின்றனர்.
ReplyDelete