ரணிலின் அறிவிப்புக்கு எதிராக, வெடிக்கிறது எதிர்ப்பு
சமுர்த்தி வங்கியை சிறிலங்கா மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரவுள்ளதாக, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெளியிட்ட அறிவிப்புக்கு, சிறிலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
கொழும்பில் நேற்று நடந்த ஐதேககவின் மே நாள் பேரணியில் உரையாற்றிய ரணில் விக்கிரமசிங்க, சமுர்த்தி வங்கி விரைவில் சிறிலங்கா மத்திய வங்கியின் கீழ் கொண்டு வரப்படும் என்று கூறினார்.
சமுர்த்தி வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் மத்திய வங்கியினால் கண்காணிக்கப்படும். ஊழியர் சேம இலாப நிதியமும் நிதியமைச்சினால் கண்காணிக்கப்படுகிறது.
எனினும், சமுர்த்தி வங்கி எந்தவொரு நிறுவனத்தினாலும் கண்காணிக்கப்படவோ நிர்வகிக்கப்படவோ இல்லை. எனவே, விரைவில் அது மத்திய வங்கியில் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படும்” என்றும் அவர் கூறியிருந்தார்.
அதேவேளை, சமுர்த்தி வங்கியை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு தாம் அனுமதிக்கப் போவதில்லை என்று முன்னாள் சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சமுர்த்தி சட்டத்தின் கீழேயே சமுர்த்தி வங்கி செயற்படுகிறது. இது 200 பில்லியன் ரூபாவுக்கு அதிகமான மூலதனத்தைக் கொண்டுள்ளது.
இதனை மத்திய வங்கியின் கீழ் கொண்டு வர முடியாது. சமுர்த்தி சட்டத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் திருத்தினால் மாத்திரமே அதனைச் செய்ய முடியும். நிச்சயமாக அதற்கான பெரும்பான்மையை சிறிலங்கா பிரதமரால் பெற முடியாது.
மத்திய வங்கியில் பகல் கொள்ளை நடந்திருக்கிறது, சாதாரண மக்களின் பணத்தை பிரதமரின் கைகளுக்கு விட்டுக் கொடுக்க முடியாது.
ஏனைய நாடுகளிலும் வறிய மக்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட இதுபோன்ற வங்கிககள், அந்தந்த நாடுகளின் மத்திய வங்கியினால் கட்டுப்படுத்தப்படுவதில்லை.“என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாடெங்கும் சமுர்த்தி வங்கிக்கு 1,754 கிளைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment