தீவிரவாத சிவசேனை சச்சிதானந்தம் கைதுசெய்யப்படுவாரா..? மாட்டிறைச்சிக்கு ஆதரவாக தமிழர்களும் குரல்
பசுவதைக்கு எதிரான போராட்டம் ஒன்றில் இலங்கையின் சிவசேனை இயக்கத்தின் தலைவரான மறவன்புலவு சச்சிதானந்தம் என்பவர் பேசிய பேச்சு இங்கு இலங்கையில் ஒரு சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தென்மராட்சி இந்துக்கள் என்று தம்மை கூறிக்கொள்ளும் ஒரு குழுவினர் சில தினங்களுக்கு முன்னதாக பசுவதையை கண்டித்து போராட்டம் ஒன்றை நடத்தினார்கள். காவி உடையணிந்தவர்கள் உட்பட சிலர் அதில் பங்கேற்றிருந்தனர்.
அங்கு உரையாற்றிய போது சச்சிதானந்தம் வெளியிட்ட கருத்தே இங்கு தமிழ் மற்றும் ஏனைய சில சமூகங்களின் மத்தியில் கண்டனத்தை தோற்றுவித்துள்ளது.
இலங்கையை ஒரு பௌத்த - இந்து நாடு என்று வர்ணித்த சச்சிதானந்தம், "இது வேறு சமூகத்தவர்களுக்கான நாடு அல்ல, இங்குள்ள பாரம்பரியத்தை ஏற்று நடக்காதவர்கள், நாட்டைவிட்டு வெளியேறி தமது பாரம்பரியங்களை பின்பற்றும் நாடுகளுக்கு போகலாம்" என்று கூறினார்.
சவுதி அரேபியாவில் பாதிப்பேர் இஸ்லாம் அல்லாதவர்கள் என்றும் ஆனால், அங்கு இஸ்லாத்துக்கு பொருந்தாத பன்றி இறைச்சியை யாரும் உண்ண முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இங்கு மாட்டிறைச்சிக் கடைகளுக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
தமது ஊரில் மாட்டிறைச்சி கடைகள் எப்போதும் இருந்ததில்லை என்றும் சமீபத்தில்தான் அவை, வெளியில் இருந்து வந்தவர்களால் புகுத்தப்பட்டதாகவும் சச்சிதானந்தம் குறிப்பிட்டார்.
தேவையில்லாத சர்ச்சை
இது தேவையில்லாத ஒரு சர்ச்சை என்று இதனைக் கண்டிக்கின்ற பெண்ணியவாதியும், ஆய்வாளருமான சித்ரலேகா மௌனகுரு, தான் யாழ்ப்பாணத்தில் இருந்த காலத்தில், எவ்வளவோ காலத்துக்கு முன்னரே அங்கு மாடு உண்ணும் பழக்கம் இந்துக்களின் மத்தியிலும் வந்துவிட்டது என்கிறார்.
அது மாத்திரமல்லாமல், இந்த விசயத்தில் இஸ்லாமியர்கள் இலக்கு வைக்கப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.
அண்மையில் இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒரு வன்முறை நடந்து முடிந்திருக்கும் சூழலில், இப்படியான இன வீரோதப் பேச்சுக்கள் மீண்டும் அப்படியான நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றுவிடலாம் என்றும் அவர் அச்சம் வெளியிட்டார்.
காலமாற்றம் கவனிக்கப்பட வேண்டும்
இலங்கையை பொறுத்தவரை, இஸ்லாமியர் மாத்திரமல்லாமல், கிறிஸ்தவ தமிழர்களும் மாட்டிறைச்சி சாப்பிடுவது உண்டு. அவ்வளவு ஏன் பல பத்து ஆண்டுகளாக சைவ சமயத்தவர்களில் ஒரு பகுதியினரும் அதனைச் சாப்பிடுவது உண்டு. வீடுகளில் மாட்டிறைச்சியை சமைப்பதை தவிர்த்தாலும், வெளியில், அதுவும் குறிப்பாக "கொத்துரொட்டி" என்ற உணவில் மாட்டிறைச்சியை சேர்த்து சாப்பிடும் வழக்கம் இந்து இளைஞர்கள் மத்தியில் உண்டு.
ஆகவே காலமாற்றத்தை, உணவு பழக்க மாற்றத்தை கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறுகின்ற கிளிநொச்சியை சேர்ந்த பத்திரிகையாளரான சிவராசா கருணாகரன், இது காலம் கடந்த பேச்சு என்று கூறுகிறார்.
அதுமாத்திரமன்றி, வெளிநாட்டு தொடர் உணவுக் கடைகள் இலங்கையில் உள் நுழைந்துள்ள நிலையில், அவற்றை எதிர்க்காமல், பொதுமக்களின் பழக்கமாகிவிட்ட உணவுப் பழக்கத்தை இலக்கு வைப்பது மோசமானது என்றும் அவர் கூறுகிறார்.
விவசாய நடவடிக்கைகளுக்காக வளர்க்கப்படும் மாடுகள் இப்போது இயந்திரங்களின் வருகையால் பெரும்பாலும் இறைச்சிக்காக பயன்படுத்தப்படுவது ஒரு கால மாற்றமே என்றும் அவர் கூறுகிறார்.
இலங்கையில் இந்துக்களாக, தமிழர்களாக இருந்தாலும் இங்குள்ள சிறுபான்மை தமிழர்கள் (தலித்துகள்) மாட்டிறைச்சி சாப்பிடுவது உண்டு. அது அவர்களுக்கு வசதியான, மலிவான உணவும் கூட. அவர்களின் உணவு உரிமையில் கைவைக்கும் ஒரு கூற்றாகவும் இது பார்க்கப்படுகின்றது.
இலங்கையை ஒரு இந்து பௌத்த நாடாக சச்சிதானந்தம் வர்ணித்ததும் ஏனைய சிறுபான்மை இனங்களை இலக்கு வைக்கும் ஒரு நடவடிக்கை என்றும், இது இந்திய சிவசேனையின் நடவடிக்கைகளின் தொடர்ச்சி என்றும் கூறுகிறார் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் ஆசிரியரான ஆர். பாரதி. எவ்வளவோ பிரச்சினைகள் இருக்க இந்தப் பிரச்சினையை வேண்டுமென்றே சச்சிதானந்தம் தூக்கிப் பிடிப்பதாக அவர் கண்டிக்கிறார். மாட்டிறைச்சி உண்ணுதல் என்பது இலங்கை இந்துக்கள் மத்தியில் பரவி எவ்வளவோ ஆண்டுகள் ஆகிவிட்டன என்றும் அவர் கூறுகின்றார்.
பொதுமக்களின் உணவுப் பழக்க சுதந்திரம் ஒரு பக்கமும், பாரம்பரிய பண்பாடு ஒரு புறமும் முரண்படும் சூழ்நிலையில் மாற்றங்கள் படிப்படியாக, யதார்த்தமாக வரவேண்டுமே ஒழிய அவற்றை திணிக்க முயல்வது ஒரு அதிகார துஸ்பிரயோக போக்கையே காண்பிக்கும் என்று கூறுகிறார் இஸ்லாமிய கற்கைகளுக்கான விரிவுரையாளரான ஏ. பி. எம். இத்ரீஸ்.
பசுவதை, மாட்டிறைச்சி உணவுத் தடை, மாட்டிறைச்சிக் கடைக்கான தடை போன்ற பிரச்சினைகள் இந்தியாவுக்கு பழைய விவகாரங்களாக இருந்தாலும், இலங்கைக்கு இது கொஞ்சம் புதிய பிரச்சினைகள்தான். வடபகுதி தமிழர்கள் தமது மதம், பண்பாடு போன்ற விசயங்களை கொஞ்சம் கண்டிப்பாக பின்பற்றுபவர்கள்தான். ஆனால், மாட்டிறைச்சி என்பது ஓரளவு அவர்கள் மத்தியிலும் பழக்கப்பட்ட உணவாக வந்துவிட்ட நிலையில், சச்சிதானந்தத்தின் இந்தக் கருத்துக்கள் அவர்களின் மாட்டிறைச்சியை உண்ணும் பழக்கத்தை குறைத்துவிடுமா என்பது தெரியவில்லை. ஆனால், இங்கு எல்லோர் மனதிலும் உள்ள ஒரே கவலை, இது இன்னும் ஒரு வன்முறையை தூண்டிவிட்டுவிடக்கூடாது என்பதுதான்.
BBC
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
ReplyDeleteமாக்களுக் கோர் கணமும்-கிளியே!
வாழத் தகுதி யுண்டோ?
ஏன் இவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக்கூடாது
this burs ted should be punished.
ReplyDelete