பாகிஸ்தானில் ஜூலை 25 இல் தேர்தல் - இம்ரான்கான் ஆட்சியை பிடிப்பாரா..? இடைக்கால பிரதமரும் பதவியேற்பு
பாகிஸ்தானில் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என்று ஜனாதிபதியின் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தலை நடத்துவதற்கான திகதிக்கு ஜனாதிபதி மம்நூன் ஹுஸைன் கடந்த சனிக்கிழமை ஒப்புதல் அளித்திருப்பதோடு, இதன்மூலம் நாட்டின் மாகாண மற்றும் தேசிய மன்றங்களுக்கு வாக்களிக்க 100 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
பாகிஸ்தான் அரசு மற்றும் தேசிய மன்றத்தின் ஐந்து ஆண்டு தவணைக் காலம் எதிர்வரும் மே 31 ஆம் திகதி முடிவடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து இடைக்கால பிரதமர் மற்றும் நிர்வாகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ளது.
பாகிஸ்தானின் 70 ஆண்டு வரலாற்றில் 2013 ஆம் ஆண்டிலேயே முதல்முறை ஜனநாயக முறையிலான ஆட்சி மாற்றம் ஒன்று இடம்பெற்றது. அந்த தேர்தலில் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி பெரும்பான்மை வாக்குகளை வென்று ஆட்சி அமைத்தது.
எனினும் ஊழல் குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஜூலையில் நவாஸ் ஷரீபை உச்ச நீதிமன்றம் பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தது.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் நீதிக் கட்சி, ஆளும் கட்சிக்கு கடும் போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2
பாகிஸ்தானில் பாராளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நிலையில் இடைக்கால பிரதமராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி நசீர் உல் முல்க் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் வரும் ஜூலை 25ஆம் திகதி நடக்கவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடவுள்ளார்.
ஆளும் முஸ்லிம் லீக் (நவாஸ்) மற்றும் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் வேட்பாளர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் நசீர் உல் முல்க் இதற்கு முன்னதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் இடைக்கால தலைவராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment