Header Ads



இறுதிக் கட்ட தீவிர, முயற்சியில் ரணில்

நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்து பிரதமர் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கான போராட்டத்தில் தீவிரமாக இறங்கியுள்ள ரணில் விக்ரமசிங்க, கட்சிக்குள் தனக்கான ஆதரவை உறுதிப்படுத்திக்கொள்வதற்கான இறுதிக்கட்ட முயற்சியிலும் முழுவீச்சுடன் இறங்கியுள்ளார்.

இதற்காக தம்மீது அதிருப்தி நிலையிலுள்ள உறுப்பினர்களை நேரில் சந்தித்து எழுத்துமூல உறுதிமொழியொன்றை வழங்கவுள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கடந்த வியாழனன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தமிழ், சிங்கள புத்தாண்டுக்குள் ஐ.தே.கவில் முழுமையானதொரு மறுசீரமைப்பு இடம்பெறுமென பிரதமரால் வழங்கப்பட்ட உறுதிமொழியையடுத்தே இந்த முடிவு ஏகமனதாக எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், அதிருப்தி நிலையிலிருக்கும் எம்.பிக்கள் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிர்ப்பை வெளியிடாத போதிலும் பிரதமர் மீது நம்பிக்கையற்றவர்களாகவே இருக்கின்றனர்.

இதனால், மத்திய செயற்குழுக் கூட்டத்தின் பின்னர் அதிருப்தியாளர்கள் தனியே சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர். இதன்போது, "கட்சிக்குள் மறுசீரமைப்பு இடம்பெறும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கையில்லாப் பிரேரணை முறியடிக்கப்பட்ட பின்னர் அந்த மாற்றம் நிச்சயம் நடக்குமா? அல்லது வழமைபோல் இதுவும் ஒரு ஏமாற்று வித்தையாக அமையலாம் என்று இராஜாங்க அமைச்சர்களான பாலித ரங்கே பண்டார, சுஜீவ சேனசிங்க ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதையடுத்து, "கட்சிக்குள் மறுசீரமைப்பு இடம்பெறுவதற்கு முன்னர் கட்சியின் யாப்பை திருத்துமாறும், மறுசீரமைப்பை மேற்கொள்ளும் அதிகாரத்தை மத்திய செயற்குழுவுக்கும், நாடாளுமன்றக் குழுவுக்கும் வழங்கும் வகையில் அந்த மாற்றம் இடம்பெறவேண்டும் என்றும் பிரதமரிடம் கோருவோம்.

அதற்கு அவர் சம்மதித்தால் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்போம்" என்று ஏனைய சில உறுப்பினர்கள் ஆலோசனை வழங்கியிருந்தனர்.

இந்தக் கோரிக்கை பிரதமரிடம் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. "அவசர அவசரமாக மாற்றம் செய்வதைவிட, எதிர்வரும் 4ஆம் திகதிக்குப் பிறகு முழுமையான மறுசீரமைப்பை செய்யலாம். மாற்றம் நிச்சயம் நடக்கும் என்ற உறுதிமொழியை என்னால் வழங்க முடியும்.

உறுப்பினர்களை நேரில் சந்தித்து அதைச் செய்வதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்" என்று பிரதமரால் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று அல்லது நாளை இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்றும், பிரதமரால் எழுத்துமூல உறுதிமொழி வழங்கப்படும் என்றும் சிறிகொத்த வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடிப்பதற்காகப் பிரதமரால் எடுக்கப்படும் இறுதி அஸ்திரமாகவே இந்த முயற்சி பார்க்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி எம்.பிக்கள் எதிர்த்து வாக்களித்தாலோ அல்லது வாக்கெடுப்பைப் புறக்கணித்தாலோ அது பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்பதாலேயே எழுத்துமூல உத்தரவாதத்தை வழங்க ரணில் சம்மதித்துள்ளார் என்று அறியமுடிகின்றது.

1 comment:

  1. This news clearly brings a message that none of the members of Parliament have largely no concrete and firm determination to take decision on the decisive matters. How can citizen expect any betterment from them.Allah only protects all of us including the disappointment of these so called representatives.

    ReplyDelete

Powered by Blogger.