கண்டி கலவரம், ராஜபக்ஷவின் அரசியல் சூழ்ச்சி - அமில தேரர்
கடந்த தினம் அம்பாறை, திகன, தெல்தெனிய மற்றும் நாட்டின் இதர பிரதேசங்களில் இடம்பெற்று வந்த இனமோதல்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
இவை முழுமையாக திட்டமிட்ட அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட செயல்கள். மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பம் உள்ளிட்ட அணியினர் கடந்த ஆட்சிக்காலத்தில் பல்வேறு குற்றச்செயல்களை புரிந்துள்ளார்கள். கொலை, கொள்ளை, ஊழல், ஜனநாயக மீறல், இனவன்முறையை தூண்டியமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் அவர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முன்பே அவற்றை நீக்கிக்கொள்ள வேண்டிய தேவை அவர்களுக்கு உள்ளது. இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதன் மூலமே அவற்றை செய்ய முடிகின்றது. அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமெனில் அரசாங்கத்தை பலவீனமடையச் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அரசாங்கத்தை ஓரமைப்பில் இருப்பதற்கு இடமளிப்பதில்லை. நாட்டில் அமைதி நிலவ இடமளிப்பதில்லை. பிரச்சினைகளை ஒவ்வொன்றாக மேலெழுப்புகிறார்கள். ஆர்ப்பாட்டங்கள், பணிப்பகிஷ்கரிப்பு, உண்ணாவிரதம் போன்றவற்றை அன்றாடம் ஏற்படுத்தி வருகிறார்கள்.
அத்துடன் இனவாத நிகழ்ச்சி நிரலையும் மெல்லக் கவனமாக முன்னெடுக்கிறார்கள். நாட்டில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாக உள்ளது. மறுபுறத்தில் முஸ்லிம்களை தாக்கும் போது பெரும்பான்மை சிங்கள, பௌத்தர்களின் ஆதரவு தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ராஜபக்ஷவுக்கு உள்ளது. இந்த விடயங்களைச் செய்வதன் மூலம் அவர் ஆட்சிக்கு வர முனைகிறார் என்ற சமிக்ஞையையே காண்பித்து வருகிறார். இதற்காக வேண்டியே மகாசொன் பலகாய உருவாக்கப்பட்டது. கண்டி கலவரத்தை பொதுஜன பெரமுனவில் உள்ளவர்களே வழிநடாத்தியுள்ளனர். மிகவும் திட்டமிட்ட அடிப்படையிலேயே இந்தக் கலவரம் மூட்டப்பட்டுள்ளது. இதுவல்லாமல் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள மக்களின் எழுச்சியொன்று இடம்பெறவில்லை. அப்படியென்றால் முழு நாட்டிலும் எழுச்சியொன்று இடம்பெற்றிருக்க வேண்டும்.
பெரும்பான்மை சிங்கள மக்களிடம் இத்தகையை நிலைப்பாடுகள் இல்லை. திகன, தெல்தெனிய பகுதிகளில் முஸ்லிம் மக்களை பாதுகாத்த சிங்கள மக்களும் உள்ளார்கள். முஸ்லிம்களது உடைமைகளுக்கு தாக்குதல் நடாத்த முயன்ற தீவிரவாதக் குழுக்களை அந்தப் பகுதியைச் சேர்ந்த சிங்கள மக்கள் துரத்தியடித்துள்ளார்கள். எனவே இங்கு சிங்கள முஸ்லிம் மோதலொன்று இல்லை. வெளியிலிருந்து சென்ற சில குழுக்களே வன்முறையில் ஈடுபட்டிருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. திட்டமிட்ட அடிப்படையில் ஓரிடத்திலிந்து இந்தக் கலவரம் வழிநடத்தப்பட்டுள்ளது. 80 இற்கும் மேற்பட்ட இணையதளங்கள் ஆரம்பிக்கப்பட்டு, முகநூல் பக்கங்களினூடாக இந்த இனவாத பிரசார நடவடிக்கைகள் சூசகமான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கண்டி கலவரம் முற்றாக மஹிந்த அணியினரின் சூழ்ச்சியேயன்றி வேறொன்றுமில்லை.
இந்தக் கலவரத்தின் பின்னணியில் அரசியல்வாதிகளும் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. இது குறித்து…
உண்மை. மஹிந்த உள்ளிட்ட பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களே இந்த வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர். பெப்ரவரி 10ஆம் திகதி ஓரளவு வெற்றியைப் பெற்றார்கள். ஒரு பக்கத்தில் இந்த வெற்றியில் பித்துப்பிடித்துள்ளார்கள். தற்போது தடல் புடலாக அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் ஒரு கட்டமாகவே கடந்த தினம் இனவன்முறைகளை அரங்கேற்றினார்கள்.
இலங்கையில் சகவாழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் சிங்கள மக்களை விட இனவாதிகளின் கரங்களே மேலோங்கியிருப்பது விளங்குகிறது. இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மஹிந்த சொன்னால் எதையும் செய்யக்கூடியவர்கள் உள்ளார்கள். இதனாலேயே பந்துல குணவர்தண மஹிந்தவுக்காக வேண்டி தேங்காய் மட்டையை சின்னமாக வைத்தாலும் மக்கள் வாக்களிப்பார்கள் என்றார். எனவே மக்கள் கடைகளை கொளுத்துவதற்கோ உடைமைகளை சேதமாக்குவதற்கோ வாக்களிப்பதில்லை. அப்படியென்றால் மஹிந்தவுக்கு வாக்களித்த ஹோமாகம மற்றும் தெற்கிலுள்ள பெரும்பான்மை மக்கள் முஸ்லிம்களை தாக்கியிருக்க வேண்டும். பெரும்பான்மை மக்கள் இனவாதத்திற்கு ஆதரவில்லை. மஹிந்தவிற்கு எதையும் செய்யக்கூடிய சக்திகள் உள்ளன. 44.5 வீதமானவர்களே இம்முறை தேர்தலில் மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவித்தார்கள். இது பெரும்பான்மையல்ல.
மறுபுறத்தில் அரசாங்கத்தின் பலவீனமும் இந்தச் சம்பவங்களுக்கு காரணமாக அமைந்துள்ளது. ஜனாதிபதி பிரதமருக்கு ஏசுகிறார், சுதந்திரக் கட்சியிலுள்ள சில ஆளும் தரப்பு அமைச்சர்கள் பகிரங்கமாகவே அரசாங்கத்தின் குறைகளை விமர்சித்து வந்தார்கள். மக்கள் இதனை வியப்பாக பார்த்தார்கள். அரசாங்கத்தின் மீது கொண்ட கோபத்திற்கு மஹிந்த தரப்புக்கு வாக்களித்து பலிதீர்த்துக்கொண்டார்கள். எனவே முஸ்லிம்களை தாக்க மஹிந்தவுக்கு ஆதரவாக
மக்கள் வாக்களிக்கவில்லை. அரசாங்கத்திற்கு ஒரு படிப்பினையை கொடுக்கும் நோக்கிலேயே மக்கள் மறுபக்கத்திற்கு வாக்களித்தார்கள். நிரந்தர சமாதானத்தை உருவாக்குவதில் சிங்கள சமூகத்தின் பங்களிப்பு போதாது என்றொரு குற்றச்சாட்டு முஸ்லிம்களிடம் உள்ளது. இது தொடர்பில் உங்களது கருத்தை குறிப்பிட முடியுமா?
சிங்கள மக்களுள் மாத்திரமல்ல. தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியிலும் சாதாரண மக்கள் என்றொரு தரப்பு உள்ளது. இவர்களிடம் அரசியல் படிப்பறிவு இல்லை. வாக்களிக்கும் படி கூறினால் வாக்களிப்பார்கள். அவ்வளவுதான். இவர்கள் அமைதியாக இருப்பவர்கள். அரசாங்கத்தின் செயற்பாடுகளில் தலையிடாதவர்கள். எனவே இனக்கலவரங்கள் ஏற்படும் போது அதற்கெதிராக வீதிக்கிறங்கி ஆர்ப்பாட்டம் செய்யும் மட்டத்தில் இவர்கள் இல்லை. எனவே மௌனநிலைப்பாட்டிலுள்ளவர்கள். ஒருபுறத்தில் இந்த மௌனநிலையானது இனவாதக் கும்பல்களுக்கு பாரிய உந்துசக்தியாக அமைகின்றது.
உண்மையில் எமது நாட்டின் பெரும்பாலான பிரச்சினைகளுக்கு இத்தகைய சிவில் சமூக மக்கள் ஒன்றிணைந்து குரலெழுப்புவதில்லை. முஸ்லிம் சமூகத்திலும் அவ்வாறுதான். எந்தவொரு பிரச்சினைக்கு எதிராக குரலெழுப்புவதற்கும் முஸ்லிம் பெண்கள் வீதிக்கிறங்குவது குறைவு. கடந்த தினம் வெள்ளவத்தை பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் முஸ்லிம் பெண்கள் பங்குபற்றியிருக்கவில்லை. சர்வமதத் தலைரவ்கள் பங்குபற்றினார்கள். மாற்றுமதப் பெண்களும் கலந்துகொண்டிருந்தார்கள். ஆனால் முஸ்லிம் பெண்களை காணவில்லை. சகவாழ்வு குறித்த கலந்துரையாடலே இங்கு இடம்பெற்றது. இது ஆரோக்கியமான நிலையல்ல. இவை இனவாதக் கும்பல்களின் செயற்பாடுகளுக்கே சாதகமாய் அமைகிறது.
இனவாதத்தை இல்லாமல் செய்வதற்கு நாட்டில் ஒரு நீண்டகாலத் திட்டம் இதுவரை முறையாக முன்வைக்கப்படவில்லை. இதற்குரிய மாற்றுத் திட்டங்கள் ஏதும் உள்ளதா?
இலங்கையில் இனவாதம் என்றொன்று இல்லை. இது முழுமையானதொரு அரசியல் சூழ்ச்சி. இங்கு இனவாதமொன்று இருப்பின் சிங்கள மக்கள் எல்லோரும் இணைந்து முஸ்லிம் மக்களுக்கு தாக்குதல் நடாத்தியிருக்க வேண்டும். பெரும்பான்மையான சிங்கள மக்கள் இனவாதிகள் என்றால் இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களே இருந்திருக்காது. முஸ்லிம் மக்களுள் பெரும்பான்மையானவர்கள் இனவாதக் கருத்தில் இல்லை. சிங்களவர்களுடன் இணைந்து வாழவே ஆசைப்படுகிறார்கள். எமது சிறந்த நண்பர்களாகவும் முஸ்லிம்களே உள்ளார்கள். எனவே இனவாதக் கருத்தியல் இலங்கையில் இல்லை. ஆனால் குறுகிய நோக்கங்களை அடைந்துகொள்ள ஒரு சில இனவாதக் கும்பல்கள் வழிநடத்தப்படுவது உண்மை.
இயல்பாகவே இலங்கையின் பெரும்பான்மையான மக்கள் இனவாதக் கருத்துக்களில் இல்லை. சட்டவிரோதமான முறையில் குறுகிய நோக்கங்களுக்காக வேண்டி இனவாதம் என்னும் பயங்கரவாத்தை விதைக்கின்றார்கள். நாட்டில் சட்டவிரோத விடயங்களை செய்பவர்கள் யாராக இருந்தாலும், எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சட்டத்தை முறையாக அமுல்படுத்த வேண்டும். இனவாதத்தை பரப்பும் முகநூல்களை தடை செய்ய வேண்டும். இனவாதக் கட்சிகள் மற்றும் அமைப்புக்களை தடைசெய்ய வேண்டும். கோபாவேஷக் கருத்துக்களை தெரிவிப்பவர்களை பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். உயரிய பட்ச தண்டணையை வழங்க வேண்டும். எனவே சட்டம் உடனுக்குடன் அமுலாக்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கங்கள் இந்த விடயத்தில் பாராமுகமாகவே இருந்துள்ளன.
நான் அந்தக் காலத்திலிருந்து வலியுறுத்திய விடயமொன்று தான் இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட பெயர்களை கட்சிகளுக்கு வைக்க வேண்டாம் என்பது. முஸ்லிம் காங்கிரஸ், ஹெல உறுமய, தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்று பெயர் சூட்டாதீர்கள் என்று வாதித்து வந்தேன். எனவே இந்தக் கட்சிகளை சூழ இன அடிப்படையிலேயே மக்கள் அணிதிரள்கிறார்கள். முஸ்லிம் காங்கிரஸிற்கு சிங்களவர்கள் செல்ல முடியாது என்றொரு கருத்து இதன் மூலம் சொல்லப்படுகிறது. ஹெல உறுமயவுக்கும் அப்படித்ன். ஆனால் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி போன்றவற்றை பாருங்கள். அதில் சகல இனத்தவர்களும் உள்ளார்கள். இந்த அடிப்படையலேயே கட்சிகள் உருவாக வேண்டும்.
மதத்தின் பெயரால் எந்தவொரு அமைப்பும் உருவாக்கப்பட முடியாது என்ற சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இதற்கான சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி பலப்படுத்தப்பட வேண்டும் என்பதே இது போன்ற பிரச்சினைகளுக்கான தீர்வாக அமையும். பொதுவாக எமது நாட்டிலுள்ள மக்கள் அமைதியானவர்கள். அப்பாவிகள். அவர்கள் ஒருபோதும் துப்பாக்கி ஏந்த விரும்புவதில்லை. இவர்களை சிதைக்கும் கும்பல்களை கட்டிப்போடும் சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.
இலங்கையிலுள்ள அஸ்கிரிய, மல்வத்த, ராமக்ஞ, மஜ்ஜிம போன்ற பௌத்த நிகாயாக்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகாயாக்களில் ஏதாவதொன்றுக்கு அடிபணிந்தே பௌத்த துறவிகள் கருமமாற்றுகிறார்கள். கலகொடஅத்தே ஞானசார உள்ளிட்ட இனவாதத்தை தூண்டும் தேரர்களை கட்டுப்படுத்துவதில் பௌத்த மத பீடங்கள் ஏன் பின்நிற்கின்றன?
நான் அறிந்தவகையில் இஸ்லாமிய மதத்தில் ஒரு மையப்படுத்தப்பட்ட ஆளுகையின் கீழ் இஸ்லாமிய சட்டங்கள் அழகிய முறையில் அமுல்படுத்தப்படுகின்றன. கிறிஸ்தவ மதத்திலும் வத்திக்கானை மையப்படுத்திய ஆளுகை உள்ளது. ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை கிறிஸ்தவப் பள்ளிவாயல்களுக்கு மதகுருக்கள் நியமிக்கப்படுகிறார்கள். தேவையானால் நீக்குவார்கள். ஆனால் பௌத்த சமயத்தில் பெயருக்கு மாத்திரமே எல்லாம் உள்ளது. அந்தப் பீடத்தின் தலைவர், இந்தப் பீடத்தின் தலைவர் என்று கூறுவார்கள் தான். ஆனால் எல்லாம் பெயரளவில் மாத்திரமே. நானும் நீதித்துறைக்கு பொறுப்பானதொரு பீடாதிபதியாக உள்ளேன்.
ஆனால் அதிகாரங்கள் இல்லை. நிகாயாக்களுக்கு பொறுப்பான தலைமை பௌத்த பீடாதிபதிகள் உள்ளார்கள். ஆனால் அவர்கள் சொல்வதை பைசாவுக்கும் கணக்கில் எடுக்க யாரும் கட்டுப்பட்டது கிடையாது. நிகாயாக்களுக்கு பொறுப்பான பீடாதிபதிகள் கீழ்நிலையிலுள்ள தேரர்கள் குறித்து கண்திறந்தாவது பார்ப்பதில்லை. இதனால் இருதரப்பும் இருமுனையிலுள்ளது. யாரும் யாரையும் கட்டுப்படுத்துவதில்லை. இதுவே யதார்த்தம். இதனாலேயே நான் அன்று பிக்குகள் ஒழுக்கக் கோவையொன்றை கொண்டு வருவதற்காக வேண்டி பாடுபட்டேன்.
பிக்குகள் ஒரு கொள்கைத்திட்டத்திற்கு அமைய செயற்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் நீதிமன்றங்களில் வழங்குத் தொடுத்து தண்டணை பெற்றுக்கொடுக்க முடியும் என்பதே அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. சில தேரர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தச் சட்டக் கோவையை கொண்டு வர இடமளிக்கவில்லை. பௌத்த மதத்தில் உள்ள தேரர்களை கட்டுப்படுத்த மதத்திற்குள்ளால் தேரர்கள் நீதிமன்றம் ஸ்தாபிக்கப்பட வேண்டும்.
இது போன்ற சம்பவங்கள் இதன் பின்னர் ஏற்படாமல் இருப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்?
நான் ஏற்கனவே கூறியது போன்று சட்டஆதிக்கம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். திகன, தெல்தெனிய பகுதிகளில் கலவரத்தை மூட்டியர்களுக்கு தராதரம் பாராது கடுமையான தண்டணைகள் வழங்கப்பட வேண்டும். அதிக பட்ச தண்டணையாக மரண தண்டணை வழங்கினாலும் பரவாயில்லை. இதுபோன்ற சம்பவங்களை செய்யாதிருக்க மறக்க முடியாத தண்டணைகளை கொடுக்க வேண்டும்.
(மீள்பார்வை)
(மீள்பார்வை)
நியாயமான கருத்து
ReplyDeleteSuppose if these are operated by Mahinda, has he asked the Govt. to sleep without taking any action? Bottom line - the Govt. was scared to take action against the mobs as they thought that they may lose the sinhala buddidist votes.
ReplyDelete