"ஐ.தே.க. தனியாட்சி நடத்த வேண்டுமெனவே வலியுறுத்துகிறோம்"
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளித்து விட்டு அமைச்சுப் பதவிகளைத் துறந்த 16 சுதந்திரக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் இணைந்தாலும் அவர்களால் பிரதான எதிர்க்கட்சியாக வரவும் முடியாது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறவும் முடியாது என ஐதேக பா.உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அத்துடன், நல்லாட்சி அரசின் உடன்படிக்கையின் கீழ் சுதந்திரக் கட்சி இயங்கும் வரை அக்கட்சியால் எதிர்க்கட்சியாக இயங்க முடியாது எனவும் அப்படி பிரதான எதிர்க்கட்சியாக வர வேண்டுமானால் தேசிய அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசியல் நெருக்கடி குறித்து விளக்கமளிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு கூறினார்.
ஐக்கிய தேசியக்கட்சி தனியாட்சி நடத்த வேண்டுமென தாம் வலியுறுத்தி வருகின்ற போதிலும் ஜனாதிபதியும், பிரதமருமே தேசிய அரசில் தொடரவே விருப்பம் கொண்டுள்ளனர். இந்த நிலையில் ஆளும் தரப்பிலிருந்து சுதந்தரக்கட்சி உறுப்பினர்கள் யார் வெளியேறினாலும் அவர்களால் பிரதான எதிர்க்கட்சியாக வர முடியாது.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் ஒரு உண்மையை கண்டுகொண்டோம். 16 சுதந்திரக்கட்சி உறுப்பினர்களும் எங்கு நிற்கிறார்கள் என்பதே அது. மொட்டுத்தரப்பும் சு. க. 16 பேர் அணியும் ஒன்று சேர்ந்தால் கூட ஆட்சி மாற்றமேற்படப் போவதில்லை. ஏன் எதிர்க்கட்சியாகக்கூட அவர்களால் வர முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
அரசின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவி விகிப்பதால் அப்பதவியில் இருக்கும் வரை கட்சித் தலைவராக அவரே இருக்கக் கூடிய வாய்ப்புள்ளது. ஒற்றுமையுடன் நாம் பயணிக்க வேண்டியுள்ளது.
நாட்டை மீண்டுமொருதடவை சர்வாதிகாரக் கும்பலிடம் ஒப்படைக்க முடியாது. இது விடயத்தில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனத் தெரிவித்தார்.
Post a Comment