சிரியாவை தாக்கினால், போர் மூளும் - அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை
சிரியாவின் டூமா நகரில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக, அமெரிக்கா வான்வழி தாக்குதல்கள் நடத்தினால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் அபாயம் உள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது.
"போர் வரும் ஆபத்தை தடுப்பதே முதன்மையான ஒன்று" என ஐ.நாவிற்கான ரஷ்ய தூதர் வசிலி நபென்ஷியா வியாழனன்று தெரிவித்தார்.
சர்வதேச அமைதிக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக அமெரிக்கா மீது குற்றஞ்சாட்டியுள்ள அவர், இந்த சூழல் "மிகவும் ஆபத்தானது" எனக் கூறியுள்ளார்.
மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது தாக்குதல் நடத்த தயாராகிக் கொண்டு வருகின்றன. ஆனால் சிரியாவின் கூட்டாளியான ரஷ்யா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ரஷ்யா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே போர் நடப்பதற்கான வாய்ப்பை, தன்னால் "விலக்க முடியாது" எனவும் நபென்ஷியா தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து தங்கள் குழு, நிலைமையை "மிக தீவிரமாக" கண்காணித்து கொண்டிருப்பதாக டிரம்ப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
வியாழனன்று ஃபிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரூங், சிரியா அரசு டூமாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியதற்கான "ஆதரங்கள்" தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார்.
"மேலும் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தாமல் இருக்க சிரியா மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையை" பிரிட்டன் அமைச்சரவை ஒப்புக் கொண்டதாக பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.
வியாழனன்று தெரீசா மே டிரம்பிடம் பேசியதாகவும், இரு நாடுகளும் இதுகுறித்து "சேர்ந்து பணியாற்ற" ஒப்புக் கொண்டதாகவும் தெரீசா மே அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஃபிரான்ஸ் அதிபருடன், டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடி குறித்து விசாரிக்க ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டத்தை கூட்ட உள்ளது.
இந்த தாக்குதல் குறித்து டிரம்ப் கூறியது என்ன?
சிரியா அரசுக்கு அளித்து வரும் ஆதரவால் கிளர்ச்சியாளர்கள் பிடியில் இருக்கும் டூமா நகரில் நடைபெற்ற "அட்டூழியத்துக்கு" ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் "பொறுப்பேற்க" வேண்டும் என ஞாயிறன்று டிரம்ப் தெரிவித்தார்.
தனது வெளிநாட்டு பயணங்களை ரத்து செய்த டிரம்ப், சிரியாவில் தாக்குதல் நடத்த ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் ஆதரவை கோரி வருகிறார்.
புதன்கிழமையன்று ஏவுகணைகள் "வந்து கொண்டிருப்பதாக" அவர் டிவிட்டரில் தெரிவித்திருந்தார்; அனால் வியாழனன்று "ஏவுகணை எப்போது வரும் என்பதை தான் சொல்லவில்லை" என்றார். அது "மிக விரைவில் வரலாம் அல்லது விரைவில் வராமலும் போகலாம்" என தெரிவித்தார்.
பின்பு வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம், சிரியா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்த அவர் தாங்கள் மேலும் சில முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அது "விரைவில் எடுக்கப்படும்" என்றும் தெரிவித்தார்.
ரஷ்யாவின் நிலைப்பாடு என்ன?
மேற்கத்திய ஊடுறுவலை "நியாயப்படுத்த" ரசாயன தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது என ரஷ்யா தெரிவித்துள்ளது.
சிரியாவிலுள்ள ரஷ்ய படைகளை அச்சுறுத்தும் விதமான ஏவுகணைகள் ஏவப்பட்டால் சுட்டு வீழ்த்தப்படும் எனவும், ஏவு தளங்களும் தாக்கப்படும் எனவும் ரஷ்யாவின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில் அறிவுசார்ந்த முடிவுகள் எடுக்கப்படும் என்றும் இந்த நிலைமை கட்டுக்குள் வரும் என நம்புவதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார்.
Post a Comment