ரணில் பல தடவை துடுப்பெடுத்தாடிவிட்டார் - சஜித்துக்கும், நவீனுக்கும் வாய்ப்பு வேண்டும் - ரஞ்சன் போர்க்கொடி
ஐக்கிய தேசியக் கட்சியை முன்னின்று வழிநடத்துவதற்கான வாய்ப்பை சஜித் பிரேமதாஸ மற்றும் நவீன் திசாநாயக்க ஆகியோருக்கு வழங்க வேண்டுமென பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
"சஜித்துக்கும் நவீனுக்கும் துடுப்பெடுத்தாடுவதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும், ரணில் விக்கிரமசிங்க பல தடவைகள் துடுப்பெடுத்தாடிவிட்டார்" என இன்று -22- இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கிரிக்கெட் வாசகங்களைக் கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் மறுசீரமைப்புக் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
இங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
"2002ஆம் ஆண்டு ரணில் துடுப்பெடுத்தாடி சதமடித்தார், 2004ஆம் ஆண்டு ஆட்டமிழந்தார், 2010 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில், சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன போன்ற வீரர்களை ஐக்கிய தேசியக் கட்சி, இறக்குமதி செய்தது. தற்போது ஏனையவர்களுக்கு துடுப்பெடுத்தாடும் வாய்ப்பினை வழங்குவதற்கான காலம் கனிந்துள்ளது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தலைமை பதவி குறித்து கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் "இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் திலங்க சுமத்திபால மீண்டும் அப்பதவிக்கு போட்டியிடக்கூடாது. வேறு ஒருவருக்கு அந்த வாய்ப்பினை வழங்க வேண்டும். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தைப்போன்று கட்சியின் தலைமைகளும் செயற்பட வேண்டும்." எனக் குறிப்பிட்டார்.
"நான் ஒரு நடிகனாக காதல் காட்சிகளில் நடிப்பதை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளேன். தந்தைப் போன்ற பாத்திரங்களில் நடிப்பதற்குத் தீர்மானித்துள்ளேன். அதுபோல் முதிர்ந்த அரசியல்வாதிகள் இளையவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்" எனவும் அவர் இந்த ஊடக சந்திப்பில் வலியுறுத்தினார்.
Post a Comment