’அரசாங்கத்துக்கு ஒத்துழைப்போருடன், புதிய பயணம் தொடரும்’ - சிறிகொத்தயில் ரணில்
அரசாங்கத்துடன் ஒத்துழைத்துப் பணியாற்ற விரும்பும் அணைவருடனும் இணைந்து, புதிய பயணமொன்றைத் தொடர்வதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிகொத்தயில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகத்தில் வைத்து, இன்று (05) அறிவித்தார்.
பிரதமருக்கு எதிராக, ஒன்றிணைந்த எதிரணியினரால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டமைக்கு, இதன்போது நன்றி தெரிவித்த அவர், எதிர்வரும் 2020ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள தேர்தல்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், ஐ.தே.கவில் மாற்றங்களை ஏற்படுத்தி, புதிய முகங்களை முன்கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உறுதியளித்தார்.
தமது பயணத்தைத் தொடர்வதற்காக, புதிய நம்பிக்கையொன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்த நம்பிக்கையினூடாக, புதிய பயணத்தை, மிக இலகுவாகத் தொடர முடியுமென்றும் கூறினார்.
நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தோற்கடித்து வெற்றிபெற்ற பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வரவேற்கும் வகையில், சிறிகொத்த கட்சித் தலைமையகத்தில், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி சார்ந்த அனைவரும் இன்று கூடியிருந்ததோடு, அங்கு வந்திருந்த அனைவருக்கும், பாற்சோறு, பலகாரங்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment