"மகிந்த தரப்பு கொண்டுவந்த பிரேரணையின், உண்மையான காரணம் இதுதான்"
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்திற்குள் படுதோல்வியடைந்தமைக்கான முழுமையான பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஏற்கவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயரை விற்று, தோல்வியை அவரது தோளில் சுமத்தி விட்டு மகிந்த ராஜபக்ச தப்பிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் கொண்டு வரவில்லை. அப்படியான எந்த யோசனையும் கட்சியின் மத்திய செயற்குழுவில் முன்வைக்கப்படவில்லை. இதனால், வாக்கெடுப்பில் கலந்துக்கொள்வதில்லை என கட்சி என்ற முறையில் நாங்கள் தீர்மானித்தோம்.
ஜனாதிபதி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மீது குற்றம் சுமத்தும் மகிந்த ராஜபக்ச, நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான யோசனையிலும் கையெழுத்திடவில்லை. அத்துடன் நாடாளுமன்றத்தில் பிரதமருக்கு எதிராக ஒரு வார்த்தையை கூட அவர் பேசவில்லை.
நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வந்த உண்மையான காரணம் பிரதமரை பதவியில் இருந்து நீக்குவது அல்ல, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை வலுவிழக்க செய்வதே அதன் நோக்கம் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment